ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி




த.நவோஜ்-

ட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் வறிய ஓமடியாமடு கிராமத்தில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற கமலஹாசன் ஜொசுவா ஜோய்ஸ் (புள்ளி 166) என்ற மாணவனை பாராட்டி கௌரவித்ததுடன், அம் மாணவனுக்கு அன்பளிப்பாக ஒரு துவிச்சக்கர வண்டியையும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் வறிய கிராமமே ஓமடியாமடு கிராமமாகும். இக் கிராமத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள வறிய விவசாய மக்கள் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் வயல் காணியையும், அரை ஏக்கர் மேட்டுக் காணியையும் பெற்றுக் கொண்டு சேனைப்பயிர் செய்கைகளை மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 300 குடும்பங்களைக் கொண்டதாக இக்கிராமம் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் பொலநறுவை மாவட்டத்தினையும், மட்டக்களப்பு மாவட்டத்தையும் பிரிக்கும் வகையில் இக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமாயின் ஒன்பது மைல் தூரம் தெதிதென்ன பகுதிக்கு வந்து அங்கிருந்தே ஏனைய பகுதிகளுக்கு பேரூந்துகளில் செல்ல முடியும். அல்லது 18 கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பாலுள்ள கிருமிச்சை என்னும் வாகரை பிரதான வீதிக்கு சென்றடைய வேண்டும்.

யானைகள் நிறைந்த காட்டுப் பகுதியின் மத்தியிலே இக்குடும்பங்கள் வாழ்கின்றனர். மருத்துவம், போக்குவரத்து போன்ற வசதிகள் இன்மை இம்மக்களுக்கு பெரும் கஷ்ரமான உள்ளது. ரெதிதன்ன நோக்கி வரும் வீதியான ஒன்பது மைல் தூரமும் மிகவும் பாதிக்கப்பட்ட வீதியாக உள்ளது. மின்சார வசதி எதுவும் இங்கு இல்லை. தற்போது எகெட் கரிட்டாஸ் போன்ற தொண்டர் நிறுவனங்கள் இம்மக்களுக்கு இயன்ற சில உதவிகளை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவரும், சுற்றி வர அடைக்கப்படாத குடிசையில் வாழ்ந்தவருமான கமலஹாசன் ஜொசுவா ஜோய்ஸ் மாணவன் அவன் தந்தை கல்வி ரீதியாக காட்டிய ஊக்கத்தின் நிமிர்த்தம் 9 மைல் தூரம் தினமும் வருகை தந்து ரெதிதன்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் 5ம் ஆண்டு கற்றுள்ளான்.

இக்கல்வியில் அவர் போக்குவரத்தால் மிகுந்த சிரமத்தை அனுபவித்துள்ளார். இவரது இவ் வெற்றியின் பின்னணியில் இவரது தந்தையும், தாயும் இருந்துள்ளனர். தங்களது வறுமைய நிலையை பாராது பிள்ளைகளை படிப்பிக்க வேண்டுமென்பதில் இவர்கள் உறுதியாக இருந்துள்ளனர். அத்தோடு இவர் கல்வி கற்ற ரெதிதன்ன இக்ரஹ் வித்தியாலயத்தின் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் இம் மாணவன் சித்தி பெற அதிபர், ஆசிரியர்கள் காட்டிய ஊக்கமுமாகும்.

ஓமடியாமடு கிராமத்தின் வரலாற்றில் இவரே ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் முதலாவதாக சித்தி பெற்றவர் ஆகும். அங்கும் ஓமடியாமடு வேழமுகன் வித்தியாலயம் உண்டு அதில் 32 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இப்பாடசாலையும் அண்மைக் காலத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது.

இம்மாணவனின் சித்தியை கௌரவித்து 'எகெட் கரித்தாஸ்' நிறுவனம் பாராட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் சென்று புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற கமலஹாசன் ஜொசுவா ஜோய்ஸ் (புள்ளி 166) என்ற மாணவனை பாராட்டி கௌரவித்ததுடன், அம் மாணவனுக்கு அன்பளிப்பாக ஒரு துவிச்சக்கர வண்டியை தனது சம்பள நிதியிலிருந்து வழங்கியுள்ளார்.

அத்தோடு இப்பகுதிக்கு மின்சாரம் பெற்றுக் கொடுப்பதற்கும், ஓமடியாமடு, ரெதிதன்ன வீதியை உரிய பகுதியினருடன் தொடர்பு கொண்டு புனரமைப்பு செய்வதற்கும், வைத்திய சுகாதார நடமாடும் சேவையை ஒழுங்கு செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அம்மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட 'எகெட் கரிட்டாஸ்' நிறுவன பணிப்பாளரான பங்குத் தந்தை அவர்களும், அப்பகுதிக்காக கால் நடை வைத்திய அதிகாரி, எகெட் நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் மகாவலி அதிகார சபையின் பொறியியலாளர்கள், அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் கமலஹாசன் என்பவர் தனது மகன் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் கல்வி கற்பதில் எதிர்நோக்கிய துன்ப நிலையை சபையில் அழுத கண்ணீருடன் எடுத்துரைத்தார். இவ்வேளை தனது மகன் பாராட்டப்படுவது தனக்கு மகிழ்வைத் தந்த போதும், இப்பகுதி மாணவர்கள் கல்வியில் மென்மேலும் முன்னேற வேண்டும் என்பதே தனது அவா எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நிகழ்வு முடிவுற்றதும் இம் மாணவனின் வீட்டுக்கு சென்று குடும்ப நிலையை அவதானித்துள்ளார். இக்குடும்பத்தில் நான்கு ஆண் பிள்ளைகள் உட்பட ஆறு பேர் உள்ளனர் என்பதும், இம்மாணவனின் தந்தை அப்பகுதியில் சிறு விவசாயங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே இக்குடும்பத்தை நடாத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :