ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இந்தநிலையில் அவரை பொது வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்துவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதற்கென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பீடமானது ஜீ 20 என்ற அமைப்பினை உருவாக்கியிருந்தது. இந்த அமைப்பானது கலந்துரையாடல்களை மேற்கொண்டு கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதென வெள்ளிக்கிழமை தீர்மானித்துள்ளது. இதனையடுத்து தமது கட்சியின் வேட்பாளரை எதிரணியின் சார்பில் பொது வேட்பாளராக நியமிப்பதற்கு ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு இந்தக் குழு தீர்மானித்துள்ளது.
இதன் ஓரங்கமாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக்குழு நேற்று முன்தினம் சனிக்கிழமை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனை சந்தித்து பேசியுள்ளது. இந்தச் சந்திப்பின்போது ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த கட்டமாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரையும் சந்தித்து பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதற்கு ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்திருக்கின்றார். ஆனால் பொதுச் சின்னத்தில் அவர் களமிறங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவை மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியன் தூதுக்குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போதும் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது பொதுச் சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் ஆதரிக்க தயார் என்று பொன்சேகா தெரிவித்துள்ளதாக தெரிகின்றது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று ஓமலுவே சோபித தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தச் சந்திப்பின்போதும்பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
0 comments :
Post a Comment