உளநலம் பேணவேண்டியதன் அவசியமும் அதற்கான அரசின் ஏற்பாடும்

வ்வொரு வருடமும் ஒக்டோபர் 10ம் திகதி சர்வதேச உளநல தினம் பிரகடனப்படுத்தப்படுத்தப்பட்டு, அதைத் தொடர்ந்து சர்வதேச உளநல வாரம் பிரகடனமாக்கப்பட்டு உலக நாடுகளுக்கு இடையில் உளவளம் பேணலின் அவசியம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள், சிந்தனைகளை மைய்யப்படுத்திய நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. அதேபோன்று, ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15ம் திகதி தேசிய உளநல தினம் எமது அரசினால் பிரகடனம் செய்யப்பட்டு சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உளவளத்துணைச் செயலகத்தினால் பல்வேறு நிகழ்சிகள் அத்தினத்தில் எமது நாட்டில் முன்னெடுக்கப்படுவதனை நாம் பார்க்க முடியும்.

அந்தவகையில், இம்மாதம் 15ம் திகதி 'உள நோயாளர்களைப் புணர்வாழ்வளிப்பதற்கான உளவளத்துணை உதவி (ஊழரளெநடiபெ யுளளளைவயnஉந கழச வாந சுநாயடிடைவையவழைn ழக ஆநவெயடடல ஐஅpயசைநன Pநசளழn)' என்ற கருப்பொருளில் இலங்கை மன்றக் கல்லூரியில் பிரமாண்டமான நிகழ்வொன்று சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உளவளத்துணைச் செயலகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு, இக்கருப்பொருளைத் தாங்கி பல்வேறு நிகழ்வுகள் மாவட்ட மட்டும் பிரதேச மட்டங்களில் உளவளத்துணை உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதனையொட்டி, உளநலம் பேணல் மற்றும் அதன் அவசியம் தொடர்பான ஒரு கண்ணோட்டத்தை இத்தருணத்தில் வழங்க முனைகின்றேன்.
மனிதன் உடல், உள்ளம் மற்றும் ஆன்மா ஆகிய அம்சங்களைக் கொண்டு இறைவனால் படைக்கப்பட்டுள்ள உலகில் வாழ்கின்ற ஏனைய உயிரினங்களை விடவும் மிகவும் மேலான பெறுமதியான படைப்பாகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

இவ்வாறான மனிதனின் வாழ்க்கையை இவ்வுலகில் நெறிப்படுத்துகின்ற வழிப்படுத்துகின்ற ஒரு கருவியாகவும் பெரும் ஆதிக்க சக்தியாகவும் மனிதனில் உள்ளத்தை இறைவன் படைத்திருக்கின்றான். மனிதனில் இறைவன் சதா அவதானிக்கின்ற ஒரு பகுதியாக இந்த உள்ளமே காணப்படுகின்றது. அத்தோடு, ஒரு மனிதனின் நடத்தையை நல்லதாக அமைப்பதிலும் கெட்டதாக அமைப்பதிலும் இந்த உள்ளமே வழிசமைக்கின்றது. 

இதுபற்றி, இவ்வுலகிற்கு இறைவனால் இறுதி வழிகாட்டியாக அனுப்பப்பட்ட முஹம்மது நபி(ஸல்)அவர்கள் கூறும்போது 'ஒரு மனிதனில் ஒரு சதைத் துண்டு ஒன்றுண்டு. அது சீரடைந்தால் முழு உடலும் சீரடையும். அது சீர் கெட்டுவிட்டால் முழு உடலும் சீர்கெட்டுவிடும். அதுதான் உள்ளம்' என மிக தத்ரூபமான ஒரு கருத்தை முன்வைத்தார்கள்.

இந்த விடயத்தை முழுமையாக நிரூபிக்கின்ற விதத்தில் தற்போதைய ஆய்வுகளின் வெளியீடுகள் அமைகின்றன. அதாவது, இன்று உலகில் மனிதனுக்கு ஏற்படுகின்ற 98 வீதமான நோய்கள் மனிதனது உள்ளம் பாதிப்படைவதனால் ஏற்படுவதாகவும் 02 வீதமான நோய்கள் மனிதனது உடலுக்கு ஏற்பட்டு உள்ளத்தை பாதிப்பதாகவும் இருப்பதாகக் கூறப்படுகின்றன.

அதுமாத்திரமன்றி, இறைவனால் மனிதனுக்கான இறுதி வழிகாட்டலாக அவனது இறுதித் தூதர் மூலமாக இறக்கிவைக்கப்பட்ட அல்குர்ஆன் மற்றும் நபியவர்களது தெளிவான வழிகாட்டல்கள் என்பவற்றின் முழுமையான நோக்காக அமைவதும், மனிதனது உள்ளத்தை சிறப்பாகவும் செவ்வையாகவும் வளப்படுத்துவதற்கான சிந்தனைகளை ஊட்டுவதற்கான வழிகாட்டல்களை வழங்குவதன் ஊடாக அவனது நடத்தையில் மாற்றத்தை பொருத்தமானதாக நேரானதாக அமைப்பதே ஆகும் என்றால் அது மிகையாகாது.

இக்காலகட்டத்தில், மனிதன் தனது உடலை வளப்படுத்துவதற்காகவும் அதனை அழகுபடுத்துவதற்காகவும் அதனை ஆபத்துக்கள் மற்றும் நோய்கள் என்பவற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும் தனது வாழ்நாளில் ஒவ்வொரு கணப்பொழுதும் அவன் எடுக்கின்ற முயற்சிகள் சிரத்தைகள் எண்ணிலடங்காது. அதுமாத்திரமன்றி, அவற்றை வளப்படுத்துவதற்காக உலகிலுள்ள ஏற்பாடுகள் ஏறாழமானவை, ஆச்சரியமானவை. 

ஆனால், மனிதனைப் படைத்த இறைவனும் அவனது வழிகாட்டிகளும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்த பகுதியான மனிதனது உள்ளத்தை வளப்படுத்துவதற்காகவும் பலப்படுத்துவதற்காகவும் அதை நெருக்கீட்டிற்கு உள்ளாக்குவதிலிருந்து பாதுகாப்பதற்காகவும் அதனது நலநன பேணுவதற்காகவும் குறித்த மனிதன் எடுக்கின்ற முயற்சிகளும் அதற்கான பயிற்சிகளும் மிகவும் அரிதானவை, கேள்விக்குறியானவை. அதற்கான உலகியல் ஏற்பாடுகளும் மிகச் சொற்பமானவை என்றே குறிப்பிட முடியும்.
அடுத்து, மனிதன் இயல்பிலேயே அமைதியான வாழ்க்கையை விரும்புபவனாகவும் அவனது உள்ளமானது அமைதியானதாகவும் இருக்க வேண்டுமெனவும் அதற்கேற்றவாறு தனது உள்ளம் நலமானதாக வளமானதாக அமைய வேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றான். 

இதற்கான தீர்வாக அல்குர்ஆன் முன்வைக்கும் போது 'அல்லாஹ்வை நினைவு படுத்துவதன் (திக்ர்) மூலமாகவே உள்ளங்கள் அமைதியடைகின்றன'.என்ற யதார்த்தபூர்வமானதும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நிரூபிக்கப்பட முடியுமானதுமான கருத்தை முன்வைக்கின்றது.

அந்தவகையில், ஒரு மனிதன் தனது உள்ளத்தை நலமுள்ளதாக ஆக்க வேண்டுமானால், அவன் இவ்வுலக மாயைகளில் மதிமயங்கி, ஆசைகளுக்கு அடிமைப்பட்டு, மனம்போன போக்கில் வாழாது, மனோ இச்சைகளுக்கு கட்டுப்படாது, அசிங்கங்களால் உள்ளத்தை நிரப்பாது, இறைவன் அருளிய வழிகாட்டல்களையும் அதற்கான உபதேசங்களையும் கொண்டு தனது உள்ளத்தை நிரப்பி வாழ்தல் வேண்டும். 

அத்துடன், தனது ஒவ்வொரு நகர்விலும் இறை சிந்தனையுடனும் உளத்தூய்மையுடனும் செயற்படுவதற்கான பயிற்சியை தனது குழந்தைப்பருவத்திலிருந்து முன்னெடுப்பதற்கான அத்திவாரத்தை அம்மனிதன் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்னர் தாயானவள் ஒரு பிள்ளையின் கருவிலேயே இடுதல் வேண்டும். அவ்வாறானால், ஒரு தாயானவள் கருவுற்ற நிலையிலிருந்து பிள்ளையைப் பெறுவதற்கான கட்டம் வரை மேற்கொள்கின்ற அனைத்துக் கருமங்களும் இறைவழிகாட்டுதலை பின்பற்றியதாக இறைவனை நினைவு கூர்ந்ததாக அமைதல் வேண்டும்.
அடுத்தது, மனிதன் இயல்பில் தனியாகவும் குடும்பமாகவும் குழுவாகவும் இவ்வுலகில் வாழும்போது பல்வேறு பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாவதைத் தவிர்க்க முடியாது.

இவ்வாறான நிலைமைகளின் போது மனிதர்களில் சிலர் இறைவன் வழங்கிய அறிவு, உளவலிமை, மற்றும் ஆற்றல்கள் என்பவற்றின் காரணமாக அவற்றை எதிர்கொண்டு முகங்கொடுத்து அவற்றை இயல்பாக வெற்றி கண்டு தனது வாழ்வை தொடர்ந்து முன்னெடுத்து செல்கின்றனர். 
 
ஆனால், பெரும்பாலான மனிதர்கள் இதற்கு முகங்கொடுத்து வாழ்வதில் தோல்வி கண்டு, உள நெருக்கீடு மற்றும் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தீர்வுகளும் திட்டங்களும் தெரியாது அவற்றிலிருந்து, தானாகவே விடுபட முடியாது நாளாந்தம் தனது வாழ்வை கண்ணீரிலும் கவலையிலும் நிம்மதியிழந்தும் தொலைத்தும் வாழ்கின்ற அவல நிலைக்கு உள்ளாக நேரிடுகின்றது. 

இதனால் அம்மனிதனது தனிப்பட்ட, குடும்ப வாழ்வு, தொழில் மற்றும் சமூக ரீதியான விவகாரங்களானது சிக்கலுக்குள்ளாகி உடைந்து போகின்றது. இதன்போது உளம் அமைதியிழந்து நலம் குறைந்ததாக, நொயுற்றதாக மாறுகின்றது. இதனால், அம்மனிதனில் உடல் மற்றும் உள ரீதியாக பல்வேறு நேரெதிரான வெளிப்பாடுகள் தோன்ற ஆரம்பிக்கின்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் பாரிய உளநோய்களுக்கும் ஆட்பட நேரிடுகின்றது. ஈற்றில், மீழ வழி தெரியாத அம்மனிதன் உள அமைதியை இழந்தவனாக தானாக வருந்தி தனது உயிரை தானாகவே மாய்த்துக் கொள்கின்ற நிலைமைக்கும் ஆளாகின்றான். இன்று தற்கொலை விகிதம் அதிகரித்த நாடுகள் வரிசையில் எமது நாடு 04வது இடத்தில் இருப்பதனை கவலையோடு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இங்கு இன்னுமொரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டியது தவிர்க்க முடியாததாகும். அதாவது, ஒரு மனிதன் தனது உடலுக்கு நோய் வருகின்றபோது அவற்றை குணப்படுத்துவதற்காக பல துறைசார் வைத்திய நிபுணர்களை அணுகி தீர்த்துக் கொள்ள முனைகின்றான். அதற்காக எந்தவித தயக்கமும் காட்டாது வெட்கப்படாது தனது நோயின் தன்மையை மனம் திறந்து வெளிப்படையாக பிறர் மத்தியில் தெரியப்படுத்துகின்றான்.

ஆனால், அதே மனிதன் தனக்குள்ளிருக்கின்ற இன்னுமொரு பகுதியான மிகப் பெறுமதிவாய்ந்த உள்ளமானது இயல்பு நிலையைக் கடந்து செயற்பட விளையும் போதும் அது எல்லை மீறி இயங்க முனையும்போதும் அதனால் தான் அடைகின்ற உள வருத்தத்தையும் உணர்வுப் பிறழ்வையும் துன்பத்தையும் பிறருக்கு மறைத்து வாழ நினைக்கின்றான். ஏனெனில், இவ்வாறான மனிதனை அவனது குடும்பமும் அவனைச் சுற்றியுள்ள அயலவர்களும் சமூகமும் வேறு கண்கொண்டு பார்க்க முனைவதும் அவனை ஏற்றுக்கொள்ளாது ஒதுக்கி வாழ முனைவதுமே காரணம் எனலாம்.
இவ்வாறன நிலைமைகளை நாம் இனியும் அனுமதிக்காது, அவ்வாறான மனப்பாங்கிலிருந்து விடுபட முன்வரவேண்டும். 

அதற்காக முதலில், ஒரு மனிதன் தனது உள்ளமானது பிரச்சினைகளுக்குள்ளாகும்போது அதனை ஏற்றுக்கொண்டு, அதற்கான தீர்வினை எந்தத் தயக்கமுமில்லாமல் தானாக நாடிச்சென்று பெறுவதற்கான முயற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக அவன் வழிப்படுத்தப்படவும்; விழிப்பூட்டப்படவும் வேண்டும். அத்தோடு, இவ்வாறான நிலைமைகளுக்கு உள்ளாகியுள்ளவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு முறையாக உதவுவதற்கு குடும்பமும் சமுகமும் வழியேற்படுத்த வேண்டும்.
இவ்வாறானவர்களுக்கு உதவுதற்கே தேசிய உளவளத் துணைச் செயலகம் சமூக சேவை அமைச்சின் கீழ் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. (தேசிய உளவளத் துணைச் செயலகம், சமூக சேவைகள் அமைச்சு, 2ம் மாடி, புதிய கட்டிடம், செத்சிறிபாய, பத்தரமுல்ல. தொலைபேசி: 0112877380, மின்னஞ்சல்: nஉழரளெநடiபெஉநவெநசளூபஅயடை.உழஅ) இதன் வழிகாட்டலின் கீழ் நமது நாட்டிலுள்ள மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உளவளத்துணை உத்தியோகத்தர்கள் கடமைக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.

இச்செயலகத்தின் சேவையானது நாளாந்த வாழ்வில் மனிதன் முகங்கொள்ளும் எதிர்பாராத விடயங்களினால் ஏற்படும் பல்வேறுபட்ட உளப்பிரச்சினைகளை முகங்கொள்ள இயலுமான வகையில் மனித ஆளுமையினை விருத்தி செய்வதும் தளம்பல் நிலையிலான உளநிலையினைத் தடுத்தலும் மற்றும் தேவையான போது உளச் சிகிச்சையினைப் பெற்றுக்கொடுக்கின்ற உளவியலை அடிப்படையாகக் கொண்ட தொழில்வாண்மைமிக்க சேவையினை பயிற்றப்பட்ட தொழில்வாண்மைமிக்க உளவளத்துணை உத்தியோகத்தர்கள் மூலமாக வழங்குகின்றது.

வேறுவகையில் கூறுவதாயின், மனிதர்கள் முகங்கொள்ளும் பலதரப்பட்ட உளவியல், நடத்தை மற்றும் ஆளிடை உறவுகள் போன்ற பிரச்சினைகளை உளவியல் விஞ்ஞான ரீதியில் அணுகி, அவற்றைத் தீர்ப்பதற்கு வழிகாட்டுதல், தீர்மானமெடுக்க உதவுதல், வசதிவாய்ப்புக்களை சிகிச்சையளித்து கற்றுக்கொடுத்தல், சுகமளித்தல் மற்றும் தேவையானபோது வேறு நிபுணத்துவ சேவைகளுக்கு வழிகாட்டுதல் என்பதை மேற்கொள்கின்றது. 

எனவே, ஒரு மனிதன் தனது உளநலத்தைப் பேணவேண்டுமானால், அவன் அதனைப்படைத்தவன் காட்டிய வழிகளைப் பின்பற்றி இயக்கவும் பயிற்றவும் பராமரிக்கவும் முனைதல் வேண்டும். அதற்கான அவனது வழிகாட்டல்களைப் பூரணமாக அறிந்துகொள்ள முயற்சித்தல் வேண்டும். அத்தோடு, நெறி பிறழ்வான நிலைமைகளின் போது அல்லது அசாதாரண நிலைமைகளுக்கு ஆட்படும்போது, அதற்காக நமது நாட்டிலுள்ள ஏற்பாடுகளையும் வழிகாட்டல்களையும் சேவையினையும் பயன்படுத்தி அவற்றிலிருந்து மீள்வதுடன், தனது உள்ளத்தை நலப்படுத்த மீண்டும் இறைவழிகாட்டுதலின்பால் மீள்வதற்கு முனைதல் வேண்டும். அதற்காக முறையான நிபுணத்துவமிக்க ஆற்றுப்படுத்துணர்களின் சேவை அவசியமாகும்.

எஸ்.ஆப்தீன், 
உளவளத்துணை உத்தியோகத்தர், 
பிரதேச செயலகம், அக்கரைப்பற்று

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :