எஸ்.ஆப்தீன்-
தேசிய கல்வி நிறுவகமும் தேசியக் கல்வியியற் கல்லூரிகளும் இணைந்து கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவைப் பூர்த்திசெய்த டிப்ளோமாதாரிகளுக்கு பட்டமளிக்கின்ற வைபவத்தினை கடந்த 2014.10.15 மற்றும் 16ம் திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்து நடாத்தியது யாவரும் அறிவர்.
இதில் 2010-2012ம் ஆண்டுக் காலப்பகுதியில் டிப்ளோமாவைப் பூர்த்திசெய்த 3052 டிப்ளோமாதாரிகளுக்கு 2014.10.15ம் திகதியிலும், 2011-2013ம் ஆண்டுக் காலப்பகுதியில் டிப்ளோமாவைப் பூர்த்திசெய்த 3030 டிப்ளோமாதாரிகளுக்கு 2014.10.16ம் திகதியிலும் பட்டமளிக்கின்ற வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு பட்டத்தைப் பெற்றுக்கொண்ட அனைவரும் எமது நாட்டிலுள்ள தேசியக் கல்வியியற் கல்லூரிகளான நிட்டம்புவ சரிபுத்த, தம்பதெனிய சரிபுத்த, ருகுண, புலதிசிபுர, அட்டாளைச்சேனை, வயம்ப, யாழ்ப்பாணம், சிறிபாத, மஹாவெலி, சியன, நில்வள, பஸ்துன்ரட, மட்டக்களப்பு, ஹாபிரிகம, தர்கா நகர், ஊவா மற்றும் ருவன்புர ஆகிய 17 கல்வியியல் கல்லூரிகளில் பலதுறைகளில் டிப்ளோமா பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அத்தோடு, இனமத வேறுபாடுகள்; களையப்பட்ட நிலையில் அனைவரையும் ஒருங்கிணைத்து இடம்பெற்ற இந்த நிகழ்வானது, இந்த நாட்டின் கல்வித்துறைசார் நிகழ்வாகவும் அமைகின்ற படியினால் மிக முக்கியம் வாய்ந்ததொன்றாகும்.
இவ்வாறான ஒரு நிகழ்வானது அந்தந்த கல்வியியற் கல்லூரிகளில் பயின்ற டிப்ளோமாதாரிகளை மைய்யப்படுத்தி, பல்கலைக்கழகங்கள் பட்டமளிப்பு விழாவை நடாத்துவதுபோன்று நடாத்ததனால் பல்வேறு அசௌகரிகங்களையும் கசப்பான உணர்வுகளையும் தாங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமான துர்ப்பாக்கிய நிலைமை இந்நவீன நூற்றாண்டிலும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதில் பின்வரும் மிக முக்கியமான விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.
தினமும் காலை மாலை அமர்வாக இடம்பெற்ற அந்நிகழ்வில் முறையான நேர முகாமைத்துவத்தைப்பற்றி உரியவாறு டிப்ளோமாதாரிகளுக்கு அறிவுறுத்தப்படாமையினால், மாலை அமர்வில் பட்டம்பெறவேண்டியவர்களும் காலையிலேயே சமுகம் தரவேண்டுமென அந்தந்த கல்வியியற் கல்லூரியினரால் பணிக்கப்பட்டிருந்தனர். இதனால், தூரப் பிரதேசங்களிலிருந்து இந்நிகழ்வுக்காக குடும்பத்தினர்களோடு வருகைதந்தவர்கள் கடுமையான அளெகரிகங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அதுமாத்திரமன்றி, திருமணம் முடித்து குடும்ப நிலையில் கைக்குழந்தைகளோடு வருகை தந்தவர்களினதும் அக்குழந்தைகளினதும் நிலைமையையும் அவர்கள் அடைந்த கஸ்டத்தையும் வர்ணிக்க முடியாது.
அடுத்து, இவ்வைபவ ஏற்பாட்டில் ஒரு அம்சமாக, டிப்ளோமாதாரிகளது நிகழ்வின் நினைவுக்காக புகைப்படங்கள் எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இங்கு புகைப்படமெடுப்பதற்காகவும் அதற்காக உரியவர்களைத் தயார்படுத்துவதற்காகவும் குறிப்பிட்ட புகைப்பட நிறுவனத்தால் ஆண்களே பணிக்கமர்த்தப்பட்டிருந்தனர். பட்டம்பெற்றவர்களில் சுமார் 80வீதமானவர்கள் பெண்களாவர். அப்படியிருந்தும் உரிய பெண்கள் கூச்சப்படுகின்ற நிலையில், எந்தவிதமான தயக்கமும்; இல்லாமல் அவ்வாண்களே அனைவரையும் புகைப்படமெடுப்பதற்காக தயார்படுத்தியமையானது ஒரு முறையற்ற ஏற்கவே முடியாத நடவடிக்கையாகும். அதுமாத்திரமன்றி, இங்கு பணிக்கமர்த்தப்படவர்கள் தனிச்சிங்களத்தில் உரையாடுகின்றவர்களாகவும் காணப்பட்டனர். இதனாலும் பல குழப்பங்கள் தோன்றலாயின. இவ்விடயமானது, குறிப்பாக முஸ்லிம் தனித்துவம் பற்றி கூருணர்வோடு செயற்படுகின்ற சில முஸ்லிம் பிரதேசங்களில் இருக்கின்ற தனித்துவக் கல்வியியற் கல்லூரியினர்களாலும் கணக்கிலெடுக்கப்படாமையானது கவலையான வெட்கப்படவேண்டிய அம்சமாகும். இவ்வசிங்கமான நடைமுறையானது எதிர்காலத்திலாவது மாற்றப்படல் வேண்டும்.
அடுத்தது, இப்பட்டமளிப்பு விழா தனியாக பட்டம் பெறுபவர்களை உள்வாங்கியே இடம்பெற்றமையானது ஜீரணிக்க முடியாத அம்சமாகும். உண்மையில் நமது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா இடம்பெறும்போது, உரிய பட்டம்பெறுபவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கும் அதனை நேரடியாக பங்கேற்று பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். இதனால், உரிய பட்டம்பெறுபவரும் அதில் பங்கேற்ப்பவர்களும் அடைகின்ற ஆனந்தமும் உளப்பூரிப்பும் அளவிட முடியாததாகும்.
ஆனால், இவ்வைபவத்தில் பட்டம்பெற்றவர்களை அந்த நிலைமைக்கு கொண்டுவந்த தாயும் தகப்பனும் அல்லது அவர்களது பாதுகாவலர்களும் பற்கேற்ப்பதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படாமையினால் ஏற்ப்பட்ட மன உளைச்சலையும் வருத்தத்தையும் யாராலும் நிவர்த்தி செய்ய முடியாது. இவ்வாறான வைபவங்களில் பங்குபற்ற வாய்ப்பளிப்பதனால் உருவாகின்ற உளவியல் ஆதாயத்தை இதை நடாத்திய கல்வியியலாளர்கள் ஏன்? கருத்திற்கொள்ளவில்லை என்பதும் இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட ஆதாயம் என்ன? என்பதும் கவனத்திற்கொள்ளப்படல் வேண்டும்.
எனவே, நிறுவனங்கள் குறிப்பாக கல்விசார் நிறுவனங்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளை முகாமைத்துவம் (நுஎநவெ ஆயயெபநஅநவெ) செய்யும்போது, முன்கூட்டியே இவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற விடயங்களை கூர்மையாக அலசி ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் எல்லோரையும் எல்லாவகையிலும் திருப்திப்படுத்துகின்ற நிகழ்வுகளை ஏற்படுத்த முடியும் என உறுதியாகக் குறிப்பிட முடியும்.
0 comments :
Post a Comment