முஸ்லிம்களுக்கு எவ்வளவு சேவை செய்தாலும் ஜனாதிபதிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள்-அஸாத்சாலி

"முஸ்லிம் மக்களுக்கு மக்கா சென்று வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்து மட்டுமல்ல, மாறாக கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஒருபோதும் முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள்''

இவ்வாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், ஐக்கியத் தேசியக் கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினருமான அஸாத் ஸாலி தெரிவித்தார்.

அதேநேரம், "எல்பிங் ஹம்பாந்தோட்டை' நிதி மோசடி வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

"அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப் படு' அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நேற்று நடைபெற்ற போது அஸாத் ஸாலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கிறிஸ்மஸ் பண்டிகையன்று இரவு 12 மணிக்கு பரிசுப் பொருட்களுடன் வருகைத் தருபவரே நந்தார் தாத்தா என நாம் அறிந்துள்ளோம்.

ஆனால், கடந்த 24 ஆம் திகதி மதியம் 1. 30 மணியளவில் நாடாளுமன்றிலும் ஒரு நத்தார் தாத்தா வரவு- செலவுத் திட்டம் என்ற மூட்டையுடன் வருகைத் தந்தார்.

அரச ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும் வெறும் 2600 ரூபாவை மாத்திரம் அவர்களுக்கு உயர்த்தியுள்ள இந்த அரசின் வரவு செலவு திட்டமானது ஒரு பலூனில் காற்றை நிறப்பி, மீண்டும் திறந்து விட்டுள்ளமைக்கு சமனாகக் கருதப்படுகின்றது.

இந்த 2600 ரூபா உயர்வானது 2015, ஜனவரி மாதம் வரும் போது இதே பெறுமதியோடு இருக்குமா என்பதை அரச ஊழியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாறாக அரச ஊழியர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாவை 2015 ஆண்டளவில் களவாடும் அரசின் செயற்பாடாகவே இந்த சம்பள உயர்வு எம்மால் கருதப்படுகின்றது.

மேலும், 2020 ஆம் ஆண்டு வரை இந்த வரவு- செலவு திட்டமமானது செல்லுபடியாகும் என ஜனாதிபதி மஹிந்தவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தவுடனேயே அனைத்து பொருட்களின் விலையும் உயரும் என நாம் இங்கு உறுதியாகத் தெரிவிக்கின்றோம்.'' என்றார்.

அதேநேரம், "2015 ஆம் ஆண்டு வரவு- செலவு திட்ட உரை முடிந்தவுடன் "கமே பையாவின் வெட கொயஹாமத' (கிராமத்தானின் வேலை எப்படி)என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவைப் பார்த்து ஜனாதிபதி மஹிந்த கேட்டுள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த "அபசரணய்' என்ற வசனமானது, "அழிந்து போவாயாக' என்ற அர்த்தத்தை கொடுப்பது போல மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்த இந்த "பையா' என்ற வசனமானது "முட்டாள்', "ஒன்றுக்கும் உதவாதவன்', "படிக்காதவன்' என பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அந்தவகையில், ஜனாதிபதி தமது வாயினாலே தன்னை இவ்வாறு கூறிக்கொண்டமை எமக்கு மகிழ்ச்சியே.

இதுஇப்படியிருக்க, திருகோணமலைக்கு கடந்த செவ்வாய் கிழமையன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த, "ஹஜ் புனித யாத்திரைக்கு ஒருவர் பல முறை செல்ல முடியாதென்றும், ஏழைகளும் ஹஜ் பயணம் மேற்கொள்ள தம்மால் வாய்ப்பளிக்கப்படும். நானே அதற்கு பொறுப்பு' என்றும் தெரித்துள்ளார்.

இவருடைய இக்கருத்தானது மிக வினோதமாகவுள்ளது. ஒரு முஸ்லிம் தனது அனைத்து வித கடமைகள், கடன்களை முடித்த பிறகு மேலதிகமாக பணம் இருந்தால் ஒரு தடவை மட்டும் செல்ல வேண்டிய ஒன்றையே ஹஜ் கடமை என்போம். இது அவசியமல்ல. மாறாக நம்மை சூழவுள்ளோர்க்கு நல்லது செய்தாலே ஹஜ் கடமையை நிறைவேற்றிய பலன் கிடைக்கும்.

இந்தக் கருத்தை போதித்த நபிகள் நாயகம் கூட ஒரு தடவைத்தான் மக்காவுக்கு சென்றுள்ளார். அப்படியிருக்கையில், முஸ்லிம்களின் இந்த அடிப்படை மதக் கோட்பாடுகளைக் கூட அறியாது, திருகோணமலையில் மஹிந்த பேசிய இக்கருத்தானது எமக்கு மிகவும் வினோதமாகவே உள்ளது.
இவர் ஹஜ் கடமையை முடிக்க ஏற்பாடு செய்தால் மட்டுமல்ல இன்னும் கோடிக்கோடியாக முஸ்லிம் மக்களுக்கு பணத்தைக் கொட்டிக்கொடுத்தாலும், அல்ஹாவின் மாளிகையான பள்ளிவாசல்களை உடைத்த இந்த மஹிந்தராஜபக்ஷ வுக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஒருபோதும் முஸ்லிம்கள் ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்பதை நாம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். '' என்றும் அஸாத் ஸாலி குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அஸாத், ``இடதுசாரி கொள்கையுடைய ஒருவரது மகன் என்ற படியால் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எளிமையாக இருக்கிறார் என்றும் நீதியாக செயற்படுவார் என்றும் நாம் கருதினோம்.

தற்போது பார்த்தால் அந்நிலைமை தலைக்கீழாக மாறியுள்ளது. தனது பதவிக் காலத்திற்கு முன்னர் தேர்தலை நடத்தும் தேவை ஏற்படின் " நான் தேர்தலை சந்திக்கத் தயார்' என ஒரு கடிதத்தை மட்டுமே ஜனாதிபதி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்ப முடியும்.

ஆனால், ஜனாதிபதியோ "எனக்கு இந்த நேரம் தான் தேர்தலை நடத்த தகுந்த நேரம் என ஜோதிடர் கூறியுள்ளார். ஆகவே இந்த நேரத்தில் கட்டாயமாக தேர்தலை நடாத்தியே ஆக வேண்டும்' என கடிதம் மூலம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

அமைச்சர் கெஹலிய, அவரது மேய்ப்பாதுகாவர் மற்றும் மனைவி உட்பட அனைவருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தெரிந்துள்ளது. 
ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பிறகு போட்டியிட்டால் மஹிந்த தோல்வியடைந்து விடுவார் என்பதற்காக அன்றைய தினம் தேர்தலை நடத்தவே அரசு உத்தேசித்துள்ளது. 

ஆனால், மஹிந்த தேசப்பிரியவோ இன்னும் தேர்தல் திகதியை உத்தியோகப் பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும், எமக்கு இன்னமும் தேர்தல் ஆணையாளர் மீது நம்பிக்கையுள்ளது. ஆகவே, அவர் இதுவிடயத்தில் அக்கரையுடன் செயற்படுவார் என நாம் எதிர்ப்பார்க்கிறோம்.'' என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,"முன்னால் நிதியரசர் சரத் என் சில்வா, "எல்பிங் ஹம்பாந்தோட்டை' வழக்கில் தீர்ப்பு வழங்கியது குறித்து கவலையடைவதாக தற்போது தெரிவித்துக் கொண்டு வருகிறார்.

இவர் இவ்வாறு தெரிவித்து மட்டும் போதாது. மாறாக அந்த நிதி மோசடி குறித்து மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். அத்திட்டத்தின் மூலம் ராஜபக்ஷ வின் குடும்பம் மோசடி செய்த பணம் எங்கே போனது என்பது குறித்தும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.'' என்றும் அஸாத் ஸாலி இங்கு தெரிவித்தார்.


அதேநேரத்தில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கமலேஷ் சர்மாவும் இலங்கையில் சட்டமானாது சுயாதீனமாக இயங்க வில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அத்தோடு, யுத்தம் முடிவடைந்த பின்பும் கூட மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் காணப்பட வில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ள அவர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


இதைத் தான் நாம் ஏற்கனவே பல முறை அரசிடம் கேட்டுள்ளோம். ஆனால், அரசோ இவற்றை செய்யாது ஊழல், களவு, லஞ்சம் மற்றும் பொய் என்பவற்றிலேயே காலத்தை கடத்திக் கொண்டுள்ளது.'' என்றும் அஸாத் ஸாலி இங்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொருளாளரான சுசில் பிரேமஜயந்த, கடந்த சில தினங்களுக்கு முன் சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய விளம்பரம் குறித்து கருத்து தெரிவித்த அஸாத் ஸாலி,


சுசில் பிரேமஜயந்த ஒரு திறப்பு விழாவிற்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ வுக்கு அழைப்பு விடுத்து விளம்பரம் ஒன்றை அளித்திருந்தார்.


ஒருவாரத்திற்கு முன்னர் மஹிந்த ராஜபக் ஷவையும் அவரது வேலைத்திட்டங்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்த சுசில், தற்போது தனது நிலையிலிருந்து இறங்கி அரச அதிகாரி ஒருவரை திறப்பு விழாவிற்கு அழைப்பதானது மிகவும் கேவலமான விடயமாகும். என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும், நாட்டிற்காக உண்மையாக உழைத்த அரச அதிகாரிகளாக கிறிஸ் நோனிஸ் மற்றும் தயான் ஜயதில போன்றோரை பதவியிலிருந்து அகற்றியுள்ள இந்த அரசின் செயற்பாடுகளால் நாடு பாதாளத்தில் தள்ளப்பட்டுக் கொண்டு வருகின்றது என்றும் அஸாத் ஸாலி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :