மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டக் கிராமத்தில் அமரத்துவமடைந்த முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர் பூ.சங்காரவேல் நினைவாக சங்காரவேல் சனசமூக நிலையம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பங்களிப்பில் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
1964ம் ஆண்டு திருப்பமுகாமம் உட்பட பல கிராமங்களில் இருந்த மக்களை தும்பங்கேணி விவசாய திட்ட கிராமத்தினை உருவாக்கி குடியேற்றிய அமரர்.சங்காரவேல் அவர்கள் அப்பகுதி இளைஞர்களுக்கு எல்லாம் தந்தை போன்று இருந்து பல வகையில் உதவியதுடன், மிளகாய் உட்பட்ட உப உணவு பயிர்ச்செய்கையை ஏற்றல் நீர் பசனம் மூலம் மேற்கொள்ளச் செய்து அம்மக்களின் பொருளாதார மேன்பாட்டுக்கு உதவியதுடன், பல வகையிலும் இயன்றளவு சேவைகளை இப்பகுதியில் மேற்கொண்டிருந்தார்.
இப்பெரியாரின் அன்பு அரவணைப்பால் கவரப்பட்ட இப்பகுதி மக்கள் தமது அன்புக்குரிய மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக விளங்கிய அமரர்.பூ.சங்காரவேல் அவர்களின் பெயரில் ஒரு சனசமூக நிலையத்தை 1967ல் உருவாக்கி பதிவு செய்து நடாத்தி வந்தனர்.
இவ்வேளை இப்பகுதி பாதுகாப்பு படை அற்ற பகுதியாக மாறியவேளை இங்கு இடம்பெற்ற யுத்த நிலை காரணமாக இங்கிருந்த மக்கள் இடம்பெயற வேண்டி ஏற்பட்டது. இதனால் இவ் சனசமூக நிலையமும் இக்கிராமமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. மீண்டும் தம் கிராமத்தில் குடியேற ஆரம்பித்த இம்மக்கள் தமது அன்புக்குரிய மறைந்த பூ.சங்காரவேல் அவர்களின் நினைவாக விளங்கிய சங்காரவேல் சனசமூக நிலையத்தை தாபிக்க திட்டமிட்டு ஊர் மக்களால் பெறப்பட்ட நிதி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களால் வழங்கப்பட்ட நிதியையும் கொண்டு சிறு கட்டடத்தை அமைத்தனர். ஆனால் அதற்கு தளபாடமோ, நூல்களோ, ஏனைய அடிப்படை வசதிகள் இருக்கவில்லை.
இவ்வேளை மக்கள் சந்திப்பின் பொருட்டு இக்கிராமத்துக்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் கவனத்துக்கு இவ் சனசமூக நிலையம் சார்பாக விடயத்தை கொண்டு வந்தபோது அவர் உடனடியாக இவ்விடயமாக ஏற்பாடு செய்வதாக கூறி லண்டனில் உள்ள சங்காரவேல் அவர்களின் புதல்வர் சங்காரவேல் சுகுமார் என்பவருடன் தொடர்பு கொண்டு பேசியமைக்கமைய உடனடியாக இவ் உதவியை வழங்க ச.சுகுமார் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவர்களுக்கு உறுதியளித்தார்.
இதன் அடிப்படையில் இரண்டு இலட்சம் ரூபாய் பணம் சனசமூக நிலையத்தின் பொருட் கொள்வனவிற்கும், பதினையாயிரம் ரூபாய் நூலகத்தின் தினசரி பத்திரிகை கொள்வனவுக்குமாக வழங்கியதுடன், தொடர்ந்து மாதாந்தம் நூலகத்துக்கு பத்திரிகை நிதி வழங்கவும் உறுதியளித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இப்பொறுப்பை கையேற்று ஏற்பாடுகளை மேற்கொண்டது. இந்நிலையில் 10ம் திகதி அன்று இச்சனசமூக நிலையம் திறக்க ஏற்பாடாகி இருந்தது. ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் இத்திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்டது.
இச்சனசமூக நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அமரர்.சங்காரவேல் அவர்களின் நண்பனாக திருப்பழுகாமத்தை சேர்ந்த அமரர்.முத்துலிங்கம் ஆசிரியரின் புதல்வர் மு.மகாலிங்கம் ஆகியோரும் இணைந்து இக்கட்டடத்தை திறந்து வைத்ததுடன், பூ.சங்காரவேல் சனசமூக நிலையத்துக்கான நூல்களையும் கையளித்தனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் நாவலர் கல்வி அமைப்பின் ஆன்மீக செயற்பாட்டுக்கு சுருதிப்பெட்டி, தாளம் என்பன வழங்கப்பட்டது. இவ் வைபவத்தில் பல பிரமுகர்கள் உரையாற்றினர். பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்; அமரர்.பூ.சங்காரவேல் அவர்களின் வாழ்க்கை வரலாறு, அரவது பணிகள், அவரது தமிழ் உணர்வுகள் உட்பட பல விடயங்களை குறிப்பிட்டு சனசமூக நிலையத்தின் அவசியத்தையும் தெளிவுபடுத்தி உரையாற்றியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் கடந்த கால ஜனாதிபதி தேர்தல் உட்பட்ட விடயங்களை தொட்டு உரை நிகழ்த்தினார்.
1967ம் ஆண்டு இளைஞர்களாக இருந்து அமரர்.பூ.சங்காரவேல் அவர்களினால் வார்க்கப்பட்ட இப்பகுதியில் முதியவர்களான இருக்கும் பெரியோர்கள், பல அமைப்புக்களின் தலைவர்கள், தமது தந்தை போன்று தங்களை உருவாக்கிய அமரர்.பூ.சங்காரவேல் அவர்களின் நினைவுரைகளை கண்ணீர் மல்க நிகழ்த்தினர். தங்கள் கிராமம் எக்காலத்திலும் அமரர்.பூ.சங்காரவேல் அவர்களை மறக்காது எனவும் சுட்டிக்காட்டினர்.
இந்நிக்வில் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்ரன் ச.சுகுமாரின் உதவியுடன் இக்கட்டத்திற்கு மின்சாரம் பொருத்த ஏற்பாடுகளையும், மின்சார இணைப்பையும் பெறுவதற்கு உதவுவதற்கும், இப்பகுதியில் இருந்து பல்கலைக் கழகத்துக்கு சென்ற தந்தையை இழந்த வறிய மாணவனுக்கு உதவுதற்கும், நாவல் கல்வி நிலைய மேன்பாட்டு உதவுவதற்கும் உறுதி வழங்கினார். இக்கிராமத்தின் தேவைகள் பற்றிய கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.
ஓய்வு பெற்ற கிராம அதிகாரி த.விஷ்வலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பேரவை பொதுச் செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் ந.புவனசுந்தரம், போரதீவுபற்று சனசமூக நிலைய உத்தியோகத்தர் த.கருணாநிதி, ஆயுள்வேத வைத்தியர் எஸ்.விஸ்வலிங்கம் தும்பங்கேணி நாவலர் கல்வி நிலைய தலைவர் எஸ்.குமரன், வெல்லாவெளி பொலிஸ் உத்தியோகத்தர், கிராமத்திலுள்ள அமைப்பினர்கள், பொதுமக்கள், பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், புலனாய்வு பிரிவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வருடங்களாக பல அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள் கடமையாற்றி வரும் வேளையில் மக்கள் மனதை குடிகொண்டு மக்களுக்காக மக்களோடு இருந்து சேவையாற்றியவர் என்ற வகையிலே மேலதிக அரசாங்க அதிபராக முன்பு கடமையாற்றிய அமரர்.பூ.சங்காரவேல் இன்றும் பெரும் பாலான கிராம மக்களால் நினைவு கூறப்படுவதும், மதிக்கப்படுவதையும் அறியக் கூடியதாக உள்ளது. இது அவரது தன்னலமற்ற சேவையை பறைசாற்றுகின்றது. அமரர்.பூ.சங்காரவேல் அவர்களின் உடன் பிறந்த சகோதரரே பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணேசலிங்கம் ஆவார்.
0 comments :
Post a Comment