எத்தனையோ கனவுகள், ஆசைகளுடன் வழமை போல இன்றும் வாழ்க்கை ஆரம்பமாகும் என்ற நம்பிக்கையில் கண்விழித்த மீரியபெத்த தோட்ட மக்களின் வாழ்க்கை ஒரு சில மணித்தியாலங்களில் அஸ்தமித்து போகும் என எவருமே எண்ணியிருக்க மாட்டார்கள்.
காலை ஆறு முப்பது அளவில் சிறுதுளியாய் பிளவுபட்ட பூமி ஒட்டுமொத்த மீரிபெத்த தோட்ட மக்களையும் தன்னுள் ஈர்த்துக்கொண்டமை நினைத்துபார்க்க முடியாத ஒரு அனர்த்தமாக பதிவாகியுள்ளது.
தமது அயலவர்கள் ஓடுவதை கண்டு உயிர்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களின் பின்னால் ஓடிச்சென்ற பலர், தங்கள் உறவுகளை விட்டுப் பிரிந்து சென்றுள்ளமை மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.
என்ன செய்வதென புரியாத மக்கள் தமக்கு நேர்ந்த கொடூரத்தை தம்மால் முடிந்தளவிற்கு வெளியாருக்கும் ஊடகங்களுக்கும் அறிவித்தனர்.
காலை பத்து மணி வரை சம்பவ இடத்திற்கு இடர்முகாமைத்துவ பிரிவினர் சமூகமளிக்கத்திருக்கவில்லை.
இதனை தொடர்ந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன.
எண்ணிப் பார்க்க முடியாத பேரிடியாக விழுந்த மண்சரிவால் கொஸ்லாந்தை தோட்டம் மற்றுமன்றி முழு இலங்கையும் இன்று சோக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை எவராலும் மறுதளிக்க முடியாது.
ஆறு உயிரிழப்புக்கள்
கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் தோட்டக் குடியிருப்புகள் சிலவற்றின் மீது இன்று காலை ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
300 பேரைக் காணவில்லை
மண்சரிவில் சிக்கி சுமார் 300 பேர் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பீரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.
அழிவு
ஆறு தோட்டக் குடியிருப்புகள், மூன்று அரசாங்க கட்டங்கள், இரண்டு பால் சேகரிப்பு நிலையங்கள், இரண்டு கடைகள் மற்றும் ஒரு கோயில் ஆகியன சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளுக்கு விடுமுறை
மீரியபெத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஹல்துமுல்ல கல்வி வலயத்திற்குட்பட்ட 10 பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சரின் பணிப்புரைக்கு அமைய சீரற்ற வானிலை நிலவும் நாகெட்டிய மற்றும் பூனாகலை பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.ஜி ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை முன்னெடுப்பதற்காக மாகாணத்திலுள்ள ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை முன்வருமாறு மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
மண்சரிவினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக கொஸ்லாந்தை மற்றும் பிட்டிகந்த தோட்டம் ஆகிய பகுதிகளில் மாவட்ட செயலாளரின் கண்காணிப்பின் கீழ் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கான சுகாதார, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஐந்து இலட்சம் ரூபா ரொக்கமாகவும், 20 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையும் மாவட்ட செயலாளருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் குறிப்பிட்டார்.
பார்வையிடுவதை தவிர்க்கவும்
தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதை அடுத்து ஏற்பட்டுள்ள அவதான நிலைமையின் கீழ், மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண மக்களிடம் கேட்டுள்ளார்.
உயிர் பிழைத்தது யார்?
இதேவேளை, இன்று காலை பாடசாலை சென்றிருந்த பிள்ளைகள் மற்றும் தேயிலைக் கொழுந்து பறிப்பதற்காக சென்றிருந்தவர்கள் உயிர்தப்பியுள்ளனர்.
ஜனாதிபதி கவலை
கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
நன்றி தொகுப்பு உதவி நியூஸ்பெஸ்ட்-
0 comments :
Post a Comment