ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது. அதற்கான அறிகுறிகள் கடந்த மாகாண சபைத்தேர்தலில் வெளிப்பட்டுள்ளன என தெரிவிக் கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த அரசாங்கத்திற்காக வாக்கு கேட்ட எமக்கு பெருத்த அவமானம் எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் அரசாங்கத்திற்கு சவாலாக அமையுமா எனவும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் கூட்டுக் கட்சிகள் திருப்தி கொண்டுள்ளதா எனவும் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
யுத்தத்தின் பின்னர் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்திற்கு இருந்த செல்வாக்கிலும் பத்து வீதத்திற்கும் மேலான செல்வாக்கினை தற்போது அரசாங்கம் இழந்து விட்டது. இதற்கு அரசாங்கத்தின் மோசமான செயற்பாடுகளே காரணமாகும். கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலின் வெற்றியுடன் அரசாங்கம் இந்த நாட்டையும் மக்களையும் முதன்மைப்படுத்தி பல வாக்குறுதிகளை முன்வைத்தது. வாழ்வாதாரம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் அந்நிய சக்திகளுக்கு இடம் கொடுப்பதில்லை என்ற பல வாக்குறுதிகளை இந்த அரசு வழங்கியும் அது எதனையும் நிறைவேற்றவில்லை.
குறிப்பாக சர்வதேச தலையீடுகள் அற்ற சுயாதீன செயற்பாடுகளை செய்வதாகவும் சிங்கள பௌத்த மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்ததை அடுத்தே நாம் ஜனாதிபதியினை பலப்படுத்தி செயற்பட்டோம். ஆனால்இ இன்று அரசு எமக்கு கொடுத்த எந்தவொரு வாக்குறுதியினையும் நிறைவேற்றவில்லை.
அதேபோல் அரசாங்கம் தான் தோன்றித்தனமான வகையில் செயற்படுகின்றது. அரசாங்கம் தனது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பதை தனித்து தீர்மானிப்பது எம்மை புறக்கணிக்கும் செயலாகவே கருதுகின்றோம். தற்போது ஜனாதிபதித் தேர்தலில் கூட அரசாங்க பங்காளிக் கட்சிகளின் ஆதரவினை பெறவோ எம்முடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவோ அரசாங்கம் முயற்சிக்கவில்லை. தாம் எடுக்கும் தனித்த முடிவுகளுக்கு எம்மை அடி பணிய வைப்பது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
இவ்வாறு அரசாங்கம் செயற்படுவது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்கு கேட்ட எமக்கு பெருத்த அவமானமாகியுள்ளது.
அதேபோல் ஜனாதிபதி தேர்தலில் இம்முறை அரசாங்கம் இலகுவான வெற்றிகளை பெறுவதென்பது இலகுவான காரியமில்லை. மக்கள் அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையினை இழந்து வருகின்றனர்.
இதற்கான அறிகுறிகளை கடந்த மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் தெளிவாக விளக்குகின்றது. அரசாங்கம் என்ற கூட்டுக்குள் பிரதான கூட்டுக் கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. எமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஏற்றதும் எமக்கான உரிமைகளை வழங்கியதுமே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பாகும். இதில் ஒரு சிலரின் தீர்மானங்கள் மட்டுமே முன்னுரிமைப்படுத்தப்படுவது ஏனைய கட்சிகளின் முரண்பாட்டினை தோற்றுவிக்கும்.
இதனை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment