தென் பகுதியின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதியும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதியும் மலைக்கும் மடுவுக்கும் ஒப்பானது. இன்று கட்சி நினைத்தால் பாரிய அபிவிருத்திகள் பற்றிப் பேசலாம். ஆனால் சமூக விடயத்தை புறந்தள்ளிவிட்டு எதைப்பற்றியும் சிந்திக்க முடியாது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக்குழுத்தலைவருமான சிரேஸ்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸீன் பல இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பொத்துவில் பிரதேச மக்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் உதவி அளிக்கும் சுயதொழில் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஹரீஸ் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
கடந்த இரண்டு வருடங்களாக இந்நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான பல விடயங்கள் நடந்துள்ளது. முஸ்லிம்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினோம். ஆந்தக் கடிதத்தில் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கீக் கேட்டிருந்தோம். ஆனால் இன்றுவரை அதற்கான நேரத்தை ஒதுக்கித் தரவில்லை.
இன்று பாருங்கள் எத்தனையோ வேலைப்பளுவுக்கும் மத்தியிலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு ஜனாதிபதி விரும்பியுள்ளார். வரவு செலவுத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு ஜனாதிபதி சிரேஸ்ட அமைச்சர்களிடம் அலரி மாளிகைக்கு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வாருங்கள் பேசுவோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் நாங்கள் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் அலரி மாளிகை சந்திப்பை நிராகரித்து அதற்கான காரணங்களை தலைவர் ஊடாக அரசுக்கு அறிவித்தோம். எமது கட்சிக்குத் தரப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சிங்கள பௌத்த கடும் போக்காளர்கள் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் அவர்களை போசிக்கும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லை.
பட்டம், பதவிகளுக்கு அப்பால் சமூக பொறுப்புக்களை சுமப்பதுதான் நமது பணியாகும். அலரி மாளிகையில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல சலுகைகள் காத்திருந்தது.
அபிவிருத்திக்கு கோடிக்கணக்கான ரூபா நிதி, தொழில்வாய்ப்புக்கள், பிரதி அமைச்சுப் பதவி, வெளிநாட்டுத் தூதுவர்கள், திணைக்களத் தலைவர்கள் என்று பெரும் பட்டியல் ஒன்றே வைத்திருந்தனர்.
நாங்கள் அலரி மாளிகைக்கு போகாததால் அவர்கள் குழப்பமடைந்துள்ளனர். முஸ்லிம் காங்கிரஸை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றி அரசின் உயர்மட்டம் இன்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றது.
இந்நாட்டு முஸ்லிம்கள் மிக முக்கியமான சவால் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பொது பல சேனா அமைப்பு பர்மாவில் உள்ள தீவிரவாத அமைப்புடனும், இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடனும் தொடர்புகளை ஏற்படுத்தி தனது அங்கத்தவர்களுக்கு பயிற்சியை வழங்குகின்றனர். இதன் மூலம் முஸ்லிம்களை அழித்து தங்களது தீவிரவாதத்தை நிலைநாட்டக் கங்கனம் கட்டியுள்ளனர்.
அரசும், பொறுப்பாளர்களும் இன்று மௌனம் காக்கின்றனர். எறிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போன்று தீவிரவாத அமைப்புக்கள் சர்வதேச ரீதியாக ஒன்றினைந்து நமது மக்களை நசுக்குவதற்கு முற்பட்டுள்ளனர். மக்களால் எங்களுக்குத் தரப்பட்ட இந்தப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி எனும் அமானிதத்தை காப்பாற்றுகின்றவர்களாக இருந்து வருகின்றோம்.
மக்களின் உணர்வோடு வாழ்கின்றவர்கள் என்ற அடிப்படையில் மாமூல் அரசியலுக்கு நாங்கள் ஆட்பட்டவர்கள் இல்லை. 2001ம் ஆண்டு நான் நேரடி அரசியலுக்கு வந்தபோது அன்று என்ன சவால்கள் இருந்ததோ இன்றும் சவால்கள் இருக்கின்றது. எந்த சலுகைகளுக்கும் சோரம் போகாமல் சமூகத்தின் இருப்பிற்காக எங்களை அர்ப்பணித்துள்ளோம்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பாரிய அபிவிருத்திகள் பற்றிப் பேசலாம். இன்று நாங்கள் செய்யும் அபிவிருத்திகளை விட பல மடங்கு கோடிக்கணக்கான ரூபாய்க்களை கொண்டு வரலாம். ஆனால் நமது சமூகம் எதிர்நோக்கும் மிகப் பெரும் ஆபத்துக்களை சிந்திக்காமல் அபிவிருத்தி எனும் வட்டத்திற்குள் அகப்பட முடியாது.
அழுத்கம சம்பவத்தின்போது நமது தாய்மார்கள் பட்ட வேதனை சொல்லவே முடியாது. உடமைகளையும், உயிர்களையும் இழந்து தவிர்த்த முஸ்லிம்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தமது சொந்த மண்ணில் ஒளிந்து கொண்டு இரவுகளைக் கழித்தார்கள்.
அழுத்கம சம்பவத்தில் முதன் முதலாக நாங்கள் சென்றபோது அந்த மக்களின் உணர்வுகளோடு என்னை ஆட்படுத்திக் கொண்டேன். பல விடயங்களில் மிக தைரியமாகக் குரல் கொடுத்தேன்.
வுழிபாட்டுத்தளங்கள் உடைக்கப்பட்டபோது உருப்படியான தண்டனைகள் வழங்கப்படாத நிலையில் சமூகத்திற்கான வழிகாட்டுதல்களை எப்படி செய்யப்போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எடுக்கப்போகின்ற முடிவு தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது.
கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கூட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன். நாட்டின் இன்றைய போக்கு எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும். தங்களின் தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு பர்மாவில் நடந்தது போன்று நிகழ்ச்சிகள் அரங்கேர பார்க்கின்றார்கள்.
இன்று பல கட்சிகளும் தங்களது முடிவுகளை எடுத்துவிட்டது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுப்பதில் மிகப்பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. சமூகத்திற்காக பாடுபடும் கட்சி என்ற அடிப்படையில் முடிவுகளை நினைத்தவாறு எடுக்க முடியாது.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது எமது கட்சிக்கு வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அது தொடர்பில் அவர்களது பதில்களை எழுத்து மூலம் கோரியுள்ளோம் என்றார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண நபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பிரதேச செயலாளர் முஸர்ரத், உதவித் தவிசாளர் எ.ல்.தாஜூதீன், சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment