நிஸ்மி கபூர்-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்ட உடன் படிக்கைக்கு அமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைக்கவும், ஹாபிஸ் நசீர் அஹமட் முதலமைச்சராகவும் ஒத்துழைப்பு வழங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஏமாற்றியதோடு தேசிய மாகாண சபை அமைத்தல் என்ற போர்வையில் எம்மை வஞ்சித்து ஓரம் கட்ட நினைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைத்துள்ள கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 11 பேர் எதிர்க் கட்சியில் செயற் படப் போகின்றோம்.
என்று சூளுரைத்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி, காணி மற்றும் போக்கு வரத்து அமைச்சருமான விமலவீர திஸாநாயக்க.
அம்பாரை ஆரியவன் விருந்நினர் விடுதியில் நேற்று (11) புதன் கிழமை நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதற்குத் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
தற் போதைய நிலையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஏமாற்றப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 11 உறுப்பினர்களின் செயற்பாடு சம்பந்தமாக விளக்கமளிப்பதற்காக விமலவீர திஸாநாயக்க அவர்களினால் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
அண்மையில் எமது நாட்டில் நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது ஏற்பட்ட கட்சித்தாவல்கள் காரணமாக ஏற் பட்ட அசாதாரண சூழ் நிலையினால் கிழக்கு மாகாண சபையின் நிர்வாக செயற் பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஏற்கெனவே செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன செய்து கொண்ட உடன் படிக்கையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களாகிய நாங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த முன்னிலையில் அனுமதி வழங்கி யிருந்தோம்.
அதன் பிரகாரம் ஆட்சிக்கு வந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டினால் 2015 ஆம் வருடத்துக்கான வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதனை நாங்கள் ஏகமனதாக நிறைவேற்றிய பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களாகிய எங்களை உதாசீனம் செய்து எங்களை ஏமாற்றி விட்டு விட்டு கபடத்தனமாக தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தங்களை செய்து ஆட்சியினைமுன்னெடுத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 11 உறுப்பினர்களாகிய நாங்கள் எதிர்வரும் மாகாண சபை அமர்வுகளின் போது எதிரணியாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் கிழக்கு மாகாண கல்வியமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மா நாட்டில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.சுபைர், மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், டபிள்யூ.டீ.வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும்; மாகாண சபை உறுப்பினருமாகிய எம்.எஸ்.சுபைர் உரையாற்றியபோது:
கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கிழக்கு மாகாண சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆட்சியமைப்பது தொடர்பில் வஞ்சித்துள்ளனர் என கிழக்கு மாகாண பிரதி தவிசாளரும் முன்னாள் மாகாண அமைச்சருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை தொடர்பாகவும் எதிர்க்கட்சி அமைப்பது தொடர்பாகவும் இன்று புதன் கிழமை (11) அம்பாறை ஆரியவன் விடுதியில் நடை பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற் கண்டவாறு கூறினார். மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபையிர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஆட்சி மாற்றத்துக்கான நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாண சபையை அமைப்பதில் நாங்கள் பல ஒப்பந்தங்கள் செய்திருந்த போதிலும் அவ் ஒப்பந்தங்கள்அனைத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மழுங்கடிக்கப்பட்டு எங்களை அரசியல் ரீதியாக ஓரங்கட்ட நினைக்கின்றார்கள் இது ஒரு போதும் நிறை வேறாது மக்கள் எங்களுடனே இருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஜனநாயகத்துக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் இவை ஒரு போதும் நீடிக்காது இவரால் முடியுமானால் அபிவிருத்தியை செய்து காட்டட்டும் என நான் சவால் விடுகின்றேன். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த பத்து உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையில் எதிர் கட்சியில் அமர்ந்து நல்ல செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நாங்கள் குரல் கொடுப்போம்.
எதிர்க்கட்சி தலைவராக மாகாண முன்னாள் கல்வியமைச்சர் விமல வீர திஸாநாக்காவை நியமித்துள்ளோம் என்றார்.
இவ் ஊடகவியளாளர் மாநாட்டில் மாகாண சபை முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை. முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாகாண சபை உறுப்பினாகளான வீரசிங்க, எம்.எல்.ஏ. அமீர் ஆகியோரும் கருத்து தரிவித்தனர்.