பழுலுல்லாஹ் பர்ஹான்-
அகிம்சை, சகிப்புத் தன்மை மற்றும் பல் வகைமை பற்றிய கருத்துக்களை மக்கள் மயப்படுத்திய இலங்கை மக்கள் அரங்கச் செயற் திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் அறிவிக்கின்து.
இம்முறை சுமார் 15 ஆயிரம் பேர் இலங்கை மக்கள் அரங்கத்தில் இடம் பெற்ற அளிக்கைகளை நேரடியாகப் பார்வையிட்டுள்ளனர். மக்கள் அரங்கத்தின் வாயிலாக முன் வைக்கப்பட்ட அகிம்சை பற்றிய சிந்தனைகள் சுமார் 30 ஆயிரம் பேரிடம் சென்றிருப்பதை இறுதிக்கட்ட ஆய்வுகள் உறுதிப் படுத்துவதாக ஊடக மன்றம் மேலும் தெரிவிக்கின்றது.
கிழக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம், அம்மாகாணங்களின் கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இத்திட்டத்தை முன்னெடுத்தது.
இளைஞர்களை சமுக மாற்றத்தின் பிரதான பங்காளிகளாக வெளிக் கொணர்ந்தமை இலங்கை மக்கள் அரங்கச் செயற்திட்டத்தின் முக்கிய அடைவாகக் கொள்ள முடியும் என மன்றத்தின் தலைவர் பேராசிரியர் டப்ளிவ் வணிக சுந்தர தெரிவிக்கின்றார்.
இலங்கை மக்கள் அரசாங்கச் செயற்திட்டத்திற்காக 36 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த தலா 12 பேர் அடங்குவர்.
செயற்திட்டத்தின் ஆரம்ப கட்டப் பயிற்சிகளின் போது பன்மைத்துவம் சமய சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சை பற்றிய ஆழமான அறிவினை இவர்கள் பெற்றுக் கொண்டனர். அவற்றை அடிப்படையாகக் கொண்டு, 30 மக்கள் அரங்கப் பிரதிகள் தயாரிக்கப்பட்டு 30 பாடசாலைகளில் அரங்கேற்றம் இடம் பெறவுள்ளது. கண்டி, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் அரங்கேற்றம் இடம் பெற்றது.
மக்கள் அரங்கச் செயற்திட்டம் தொடர்பான வதிவிடப் பயிற்சிகளில் கலந்து கொண்ட மூவின இளைஞர் யுவதிகள் ஏனைய இனம் மற்றும் மதத்தை சார்ந்தவர்களைப் பற்றி பரஸ்பரம் மிக குறைவான புரிதல் இருப்பதை ஏற்றுக் கொண்டனர். சிலர் தமது கல்விச் சூழல், சமூகம், குடும்பம் ஆகியவற்றிலிருந்து ஏனைய சமயம், இனத்தை சேர்ந்தவர்களைப் பற்றி மிகவும் தவறான புரிதல்கள் புகட்டப்படுவதாக சுட்டிக்காட்டினர். வித்தியாசமான சமூகங்களைச் சேர்ந்தவர்களுடன் தகராறுகள் இல்லாவிட்டாலும் அவர்களுடன் எத்தகைய தொடர்புகளும் இல்லாதிருப்பது ஒரு பிரச்சினையாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கந்தளாயை சேர்ந்த தரிந்து பிரசாத் என்பவர் ' தமிழர் மற்றும் முஸ்லிம்களை எனக்கு சற்றும் பிடிக்காது. எங்கு கண்டாலும் அவர்கள் மீது எனது வெறுப்பை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. நான் ஒரு நூறு வீதம் சுவேசியாகவே வாழ்ந்தேன். இப்போது அது எத்தகைய ஆபத்தானது தவறானது என்பதை உணர்ந்து கொள்கின்றேன் என்றார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் பிரச்சினைகளுக்கு தீர்வு வன்முறை என்றுதான் எனக்குத் தெரியும். நான் வன்முறையின் வாயிலாகவே பிரச்சினைகளுக்கு தீர்வும் காண்பேன். சகிப்புத்தன்மை, மற்றும் அகிம்சை ஆகிய நற் பண்புகளால் உலகில் எத்தகைய முரண்பாட்டையும் வெற்றி கொள்ள முடியும் என்பதை இப்போது தெளிவாக உணர்கின்றேன் என்றார். சம்மாந்துறையைச் சேர்ந்த இஹ்சான் என்பவர் மக்கள் அரங்கச் செயற்றிட்டம் எனக்குள் ஒரு புதிய உலகத்தை உருவாக்கியுள்ளது என்றார்.