இக்பால் அலி-
நாட்டில் ஏற்பட்ட நல்லாட்சி மாற்றத்தினால் சிறந்த நிர்வாகத் தன்மையுடைய தபால் துறைச் சேவையை மேலும் கட்டி எழுப்புவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற் திட்டங்களுக்கு மேலாக ஒரு படி சென்று சிறந்த தபால் சேவை இந்த நாட்டு மக்களுக்கு கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்று முஸ்லிம் சமய கலாச்சாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
அவிசாவலையில் 43 ரூபா மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலையக் கட்டிடத்திற்கான திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை 10-03-2015 நடை பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் ஹலீம் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் அவிசாவலை சீதாபுர நகரம் பழைய பாரம்பரிய அம்சங்களைக் கொண்டதாகும். கடந்த காலங்களில் மாகாண சபையில் இரு தடவைகள் அமைச்சராக இருந்து மக்களுடன் நெருங்கி சேவையாற்றக் கூடிய அனுபவம் எனக்கு இருந்தது.
அந்த அனுபவத்தினால் எல்லாத் தரப்பிலுள்ள தொழிற் சங்கங்களுடனும் சம வாய்ப்புடன் பழகி அவர்களுடன் நெருக்கமான உறவைப் பேணி செயற்படக் கூடிய இயல்பான தன்மை இருந்தபடியாலேயே எனக்கு இந்த அமைச்சுப் பதவி கிடைத்தது.
இதில் மக்கள் விடுதலை முன்னணி. ஐக்கிய தேசியக் கட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய தொழிற் சங்கங்களுடன் உறவைப் பேணி நடப்பது மாத்திரமல்ல இவர்களுடைய நன்மையை நாடி சேவையாற்றவதே என்னுடைய எதிர் பார்ப்பாகும்.
எனவே எதிர் காலத்தில் மக்களுக்கு தபால் சேவையின் மூலமாக சிறந்த பயனை வழங்குவதற்கு முன் மாதரியான நடடிக்கைகள் மேற் கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
இந்த தபால் நிலையத்தின் கீழ் 46 உப தபால் நிலையங்கள் உள்ளன. அவற்றை மேலும் கட்டி எழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.