த.நவோஜ்-
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு மத விவகாரங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 95 சத வீதத்துக்கும் மேற்பட்ட நிதி பௌத்த விகாரைகள் புனரமைப்புக்கே பயன்படுத்தப்பட்டன. ஏனைய இந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு 5 சதவீதம் கூட ஒதுக்கப்பட்டவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஆட்சியில் மத விவகாரங்களுக்கான அமைச்சாராக பௌத்த மதவிவகார அமைச்சரே செயற்பட்டார். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த புதிய அரசில் நான்கு மதங்களுக்கும் தனித்தனி அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்துக்குட்பட்ட திகிலிவெட்டையில் இந்து கலாசார திணைக்களத்தினால் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட புண்ணிய கிராம திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தொடர்ந்து உரையாற்றுகையில்!
'இந்த அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பல வேலைகள் முடிப்பதாக கூறினார்கள். ஆனால் அவர்கள் சொன்ன விதத்தில் வேலைகள் நடைபெறுவதாக எங்களுக்குத் தெரியவில்லை.
சம்பூர் மக்களில் 848 குடும்பங்கள் இன்னும் மீளக்குடியமர்த்தப்படாமல் இருக்கிறார்கள் அவர்களின் வாழ்க்கை நிலை மிகவும் கஷ்டமாக காணப்படுகிறது. கொழுத்தும் வெயிலிலே தகரக் கொட்டில்களின் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த நூறு நாட்களுக்குள் குடியமர்த்தப்பட வேண்டும். இன்றும் 40 நாட்களே உள்ளன நாங்கள் எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருகிறோம்.
புதிய அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆளுநர்களாக இருந்த இராணுவ அதிகாரிகளை மாற்றி சிவில் அதிகாரிகள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் வருவதாக எமக்குத் தெரியவில்லை.
அண்மையில் நிதி அமைச்சர் களுவன்கேணி வீதி புனரமைப்புச் செய்வதாக வந்தார் 7 கோடி 30 இலட்சம் நிதி ஒதுக்கப்படுவதாகவும் உறுதியளித்தர். ஆனால் ஆரம்ப வேலைகள் கூட இதுவரை ஆரம்பிக்கவில்லை. முன்பு இருந்த அரசாங்கத்தைப் போன்று களுவன்கேணி வீதி புனரமைப்பு கடைசி வரை ஒரு வாக்குறுதியாவே இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் மீள்குடியேற்றப்பட்;ட மக்களுக்கு இருவரை வீட்டு வசதிகளை பூரணமாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திலே பௌத்த மதவிவகார அமைச்சு என்று ஒரு அமைச்சு மாத்திரம் காணப்பட்டது. முன்னாள் பிரதம மந்திரி தி.மு.ஜெயரத்ன அமைச்சராகவும், ஒரு பிரதியமைச்சரும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இருவருமே சிங்களவர்கள் இந்த நாட்டிலே நான்கு மதங்கள் காணப்பட்ட போதிலும் பௌத்த ஆதிக்கம் மாத்திரமே பெரும்பாண்மையாக ஆதிக்கம் செலுத்தியது.
சென்ற வருடம் மத விவகாரங்களுக்காக 615 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும் அதிலே 442 மில்லியன் ரூபா நிதி விகாரைகள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் புனரமைப்புக்கு பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த நிதியில் 5 சதவீதம் கூட இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மத ஸ்தலங்களுக்கு பயன்படுத்தப்படவில்லை. கிட்டத்தட்ட 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிதி பௌத்த விகாரைகளுக்கு வழங்கப்பட்டிருந்தன.
2013ஆம் ஆண்டு மதிப்பீட்டின் பிரகாரம் 2012ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது எமது நாட்டிலே பல புதிய விகாரைகள் உருவாகியுள்ளன. வடக்கு கிழக்கிலே சிங்களவர்கள் வாழாத பகுதியிலே திட்டமிட்ட முறையில் விகாரைகள் அமைக்கப்பட்டன. இந்து கோவில்கள் பல இடிக்கப்பட்டு விகாரைகள் அமைக்கப்பட்டன. பல சம்பவங்கள் சென்ற அரசாங்கத்திலே நடைபெற்றன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திலே இந்து சமயத்துக்கென ஒரு அமைச்சைக் கூட வழங்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்த காலத்திலே இந்து கலாசார அமைச்சு என்ற ஒரு அமைச்சு உருவாக்கப்பட்து.
முன்பு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இந்து கலாசார அமைச்சராக இருந்த தேவராஜ் அவர்கள் அறநெறிப் பாடசாலைகளை ஆரம்பித்தார். பின்பு மகேஸ்வரன் அமைச்சரா பதிவி வகித்தார். தற்பொழுது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி இணைந்த ஆட்சி நடைபெறுவதால் இந்துக்களுக்கென எம்.சுவாமிநாதன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போன்று சகல மதங்களுக்கும் தனித் தனியே மத விவகாரங்களுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. அவர் சிறந்த ஆன்மீகவாதி பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய தலைவர், இந்து இந்துக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து நிறைவேற்ற நடவடிக்கையெடுப்பார் என நம்புகிறோம்' என்றார்.