இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவது பெருமைக்குரியது என்றார்.
கலாச்சாரம், நட்புறவு மிக்க இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதில் மகிழ்ச்சி என்று தெரிவித்த மோடி, தொழில் முனைவோரும், திறன்மிக்க மக்களும் மிகுந்த நாடு இலங்கை என்றும், இந்த பகுதியில் நாம் நம்மை எப்படி அடையாளப்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே வளர்ச்சி என்றும் கூறினார்.
சுதந்திரமான இறையாண்மை நாடுகளாக இந்தியா- இலங்கை சேர்ந்து நிற்கின்றன என்றும், எதிர்கால இந்தியாவுக்கான எனது கனவு அண்டை நாடுகளுக்குமானதுதான் என்றும் மோடி தெரிவித்தார்.
இராமாயண ரயில் அனைத்து மத புனித தலங்களையும் இணைக்கும் என்றும், இருநாடுகளுக்கிடையேயான போக்குவரத்தை மேம்படுத்தவும் திட்டம் என்றார்.
எதிர்கால பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியது இலங்கையின் கடமை என்று கூறிய மோடி, நல்ல நட்பு நாடாக இலங்கையை எப்போதும் ஆதரிப்போம் என்றும், இலங்கையின் ஒருமைப்பாடு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என்றும், இலங்கையில் இதுவே மாற்றத்திக்கான நேரம் என்றும் தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் முன்னேறும் இந்தியாவுக்கு அண்டைநாடுகள் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மோடி, இருநாடுகளை போக்குவரத்தின் மூலம் இணைப்பதனால் வளர்ச்சி காணலாம் என்றார்.
இந்தியாவின் வலுவான பொருளாதார நட்பு நாடாக இலங்கைக்கு தகுதியுள்ளது என்றும், இருதரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இருநாடுகளும் ஒன்றிலிருந்து ஒன்று தனித்து இருக்க முடியாது என்று கூறிய அவர், கடல்வழி பாதுகாப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்றும், இலங்கையை சேர்ந்தவர்களுக்கு வருகையின்போது விசா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் 4வது வெளிநாட்டு பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.