மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்புவதாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திஸநாயக்க.
இந்த ஆயுதக் களஞ்சியம் இயங்கிய காலப்பகுதியில் நானே கடற்படைத் தளபதியாக செயற்பட்டேன். எனவே விசாரணைகளுக்கு முழு அளவில் மெய்யான ஒத்துழைப்பு வழங்கத் தயார்.
அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவே தென்படுகின்றது.
இந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்துடன் பாதுகாப்பு அமைச்சு, இலங்கைக் கடற்படை, அவன்ட் கார்ட் தனியார் நிறுவனம், ரக்னா லங்கா தனியார் நிறுவனம் ஆகியன நேரடியாக தொடர்புபட்டுள்ளன.
இந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் நான் கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய காரணத்தினால், விசாரணைகளின் போது அடிக்கடி பதில்களை அளிக்க வேண்டியிருக்கும்.
எனவே நான் நாட்டிலேயே தங்கியிருக்க வேண்டியது அவசியமாகின்றது. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முன்னாள் கடற்படைத் தளபதி சோமதிலக்க திஸநாயக்க ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.