கடந்த 15.06.2014 அன்று இடம் பெற்ற அளுத்கமை வன்முறைச் சம்பவத்தினை ஆவணப்படுத்தும் வேலைத் திட்டங்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற் கொண்டிருந்தது.
இதன் ஒரு கட்டமாக மேற்படி வன் முறை தொடர்பான முழுமையான ஆவணத் தொகுப்பொன்றினை மேற் கொள்ள வேண்டும் என்ற தலைமைத்துவ சபையின் முடிவிற்கேற்ப ஆவணப்படுத்தும் பணியினை (LST) Law and Society Trust நிறுவனத்தினரை மேற் கொள்ளுமாறும், இதற்குரிய பூரண ஒத்துழைப்பையும் தாம் வழங்குவதாகவும் கேட்டுக் கொண்டதற்கினங்க அறிக்கையிடல் மற்றும் ஆவணப்படுத்தும் பணியினை LST நிறுவனம் அளுத்கமை, பேருவளை, தர்கா நகர், வெலிபன்ன போன்ற இன வன் முறையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடி கள விஜயங்களை மேற் கொண்டது.
இதன் படி LDT நிறுவனத்தின் ஆய்வாளர்களான கலாநிதி பர்ஸானா ஹனீபா, ஹரிணி அமர சூரிய, விஷாக்கா விஜேநாயக்க, ஹான் குணதிலக்க ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழுவினரால் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையில் இவ் வன்முறைச் சம்பவத்துக்கு மூல காரணமாக இருந்த பொது பல சேனா தொடர்பாகவும் அவர்களுக்கு பின்னால் தொழிற்பட்ட அரசியல் மற்றும் இராணுவ சக்திகள் தொடர்பாகவும் வன் முறைக்கு காரணமாக இருந்த பொது பல சேனாவின் அளுத்கமை கூட்டம் தொடர்பாகவும் அதன் பின்னர் கட்டவிழ்க்கப் பட்ட வன் முறைகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் இழப்பீடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் இவ் வன்முறைச் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்தும் எதிர்கட்சிகள் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வீ.பி போன்ற அரசியல் கட்சிகள் மேற் கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும், ஊடகங்களின் வகிபாகங்கள் தொடர்பாகவும் விரிவான அறிக்கையிடல் இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இறுதியாக இவ் வன்முறைச்சம்பவம் தொடர்பாக கவனத்திற்கொள்ளபட வேண்டிய முன் மொழிவுகளும் முன் வைக்கப்பட்டுள்ளன.
அளுத்கமை கலவரம் தொடர்பில் ஒரு முழுமையானதும் பக்கச் சார்பற்றதுமானதுமான ஓர் அறிக்ககையிடலாக அமைந்துள்ள இவ் அறிக்கையானது சுமார் 128 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகமாக வெளி வந்துள்ளது.
இந் நிலையில் இவ்வறிக்கையினை உத்தியோக பூர்வமாக வெளியீட்டு வைக்கும் நிகழ்வும் இது தொடர்பான கலந்துரையாடலும் நேற்று 12.03.2015 வியாழக்கிழமை பி.ப 4.15 மணிக்கு கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக கலாநிதி மாரியோ கோமஸ் (பணிப்பாளர், சர்வதேச இனத்துவ கட்கைகள் நிலையம்), மாலா வியனகே (நிறைவேற்றுப் பணிப்பாளர் LST நிறுவனம்), கலாநிதி பர்ஸானா ஹனீபா (சிரேஷ்ட விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம்), சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ஆய்வாளர் மிராக் ரஹீம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இறுதியாக NFGGயின் பொதுச் செயலாளர் MR.நஜா முஹம்மத்ட் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந் நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ், மற்றும் தலைத்துவ சபை உறுப்பினர்களான. MHM.ஹனான், PM.முஜீப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.