நல்லிணக்க அரசாங்கத்தை அமைக்கிறேன் என்று கூறி ஆட்சியமைத்த ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய நடவடிக்கை சிறுபான்மை மக்களுக்கு எதிராக செல்வதை இட்டு அதிருப்தி அடைவதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (10) விடுத்துள்ள ஊடக அறிக்கையில்;
ஆட்சி மாற்றம் தேவை என்பதை சிறுபான்மை மக்கள் தெரிவு செய்தார்கள். அந்த மாற்றத்தினூடாக நிலையான இனப் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை கைவிட்டுப் போய் விட்டது. இன்று வட மாகாண முதலமைச்சரை பொய்க்காரன் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதே போல் அத்து மீறும் இந்திய மீனவர்களை சுட்டுத்தள்ளுவது சரி என்று தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துகிறார். கருணாவை பிரித்து பிரபாகரனை வீழ்த்தியதை மீண்டும் செய்ய முயல்கின்றார். இதற்காகவா தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
ஐ.நா விசாரனை அறிக்கையை தள்ளிப் போடுவதன் மூலமாக சிங்கள மக்களை விக்கிரமசிங்க திருப்திபடுத்தப் பார்க்கின்றார். அதற்கு தலைவர் சம்பந்தன் தாமதப்படுத்துவதன் மூலமாக மேலும் பல உண்மைகளை கொண்டு வரலாம் என்று சொல்கின்றார்.
யுத்தம் முடிவுற்று ஐந்து வருடத்திற்கு பின்பும் தாமதப்படுத்துவதன் மூலம் சாட்சிகள் அழிக்கப்படுமேயொழிய புதியதாக எதுவும் கிடைக்கப் பெறாது என்பதை தெரிந்து கொண்டும் சுமந்திரனின் வலையில் சம்பந்தன் விழுந்து விட்டாரா?
காணாமல் போனோரை கண்டுபிடித்து தருகிறோம் என்று 2007 களிலே ஆர்ப்பாட்டம் செய்து மக்கள் வாக்குகளை காவிக் கொண்டவர்கள் இன்று அவர்களது அரசாங்கம் வந்து விட்ட பொழுதும் காணாமல் போனவர்களைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கின்றார்கள்.
பயங்கரவாத தடை சட்டத்தினூடாக தமிழ் கைதிகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்து அரசியல் இலாபம் பெற்றுக் கொண்டவர்கள் இன்று ரணில் விக்கிரமசிங்கவின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். அடுத்த தேர்தலில் தனக்கும் தனது சகாக்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் இடம் கிடைப்பதற்காக தாம் போட்ட வேடத்தினை கலைத்து நிற்கின்றார்கள்.
இப்படியானவர்களின் போலி அரசியலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அநீதிக்கு உள்ளே சென்று எமது மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுத்ததை மக்கள் மறந்து விடக்கூடாது. எமக்கு மேலதிக பதவிகள் தேவையில்லை. கொண்ட பதவியின் மூலமாக மக்கள் சேவையினை நேர்மையாக செய்துள்ளோம். நேர்மையற்றவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கு தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.