பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட கோமாரிக் கிராமத்தில் நீர் வழங்க நடவடிக்கை


பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட கோமாரிக் கிராமத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நீர் விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது பற்றி நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்ப அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் மீளாய்வுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட போது, தமிழ் மக்கள் செறிந்து வாழும் அக்கிராமத்திற்கு உடனடியாக நீர் விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்குமாறும், அது தொடர்பான ஆய்வறிக்கைகளை இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு சமர்ப்பிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அவ்வாறே கல்குடாத் தொகுதியில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிரான் உள்ளிட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கான சுத்தமான குடிநீர் வழங்கும் நடவடிக்கைகளைத் பொறுத்தவரை நீண்ட கால திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காலதாமதமாகும் என்பதால் இடைக்காலத் திட்டத்தை முதலில் செயற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் ஹக்கீம் உத்தரவு பிறப்பித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அவரது அமைச்சில் இடம்பெற்ற பொழுதே இவ்வாறான துரிதமாக முன்னெடுக்க வேண்டிய செயல்திட்டங்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

புதிய அமைச்சராக ஹக்கீம் பதவியேற்றவுடன் பிரஸ்தாப மாவட்டங்களுக்கு விஜயம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்களோடும், மாகாண சபை, உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களோடும் அமைச்சின் உயரதிகாரிகளோடும், பிரதேச செயலாளர்களோடும், பொது மக்களோடும் நடாத்திய கலந்துரையாடல்களை தொடர்ந்து காணப்படும் முன்னேற்றம் குறித்து ஆராய்வதோடு, மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தல்களை வழங்குவது இந்த மீளாய்வுக் கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.

பொத்துவில், அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர், கல்முனை, நற்பிட்டிமுனை, சம்மாந்துறை, காத்தான்குடி, ஓட்டமாவடி பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவே அதிகம் ஆராயப்பட்டது. அக்கரைப்பற்று, இறக்காமம், சம்மாந்துறை ஆகிய பிரதேசங்கள் பற்றியும், திருகோணமலை மாவட்டங்கள் அடுத்த கட்டமாக ஆராயப்படவுள்ளது.

கல்முனை நகர அபிவிருத்தி, சதுப்பு நிலங்களை நிரப்பி மக்களின் குடியிருப்புத் தேவைகளை நிறைவு செய்தல், சாய்ந்தமருது, கல்முனைக்குடி, நீலாவணை ஆகியவற்றை உள்ளடக்கியதாக தோணா அபிவிருத்தியை மேற்கொள்ளல், கல்முனை பஸ் நிலைய விரிவாக்கல், பிரஸ்தாப மாவட்டங்களில் முக்கிய நகரங்களில் நவீன வர்த்தகக் கட்டிடத் தொகுதிகளை நிர்மாணித்தல், பறவை சரணாலயங்கள், பொதுச் சந்தைகளை அபிவிருத்தி செய்தல், வாகனத் தரிப்பிடங்களை அமைத்தல், பொத்துவில் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி மிகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் ஹக்கீமின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை, காணி மீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நீர் வழங்கல் அதிகாரசபை ஆகியவற்றினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் சகல மாவட்டங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த மீளாய்வுக் கூட்டத்தில் திகாமடுமல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர், ஏ.எல்.தவம், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான யூ.எல்.எம்.என்.முபீன், ரஹ்மத் மன்சூர், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.அன்சில், பொத்துவில் பிரதேச சபைத் தலைவர் எம்.எஸ்.ஏ. வாஸித், இறக்காமம் பிரதேச சபைத் தலைவர் யூ.எல்.ஜபீர் மற்றும் முக்கியஸ்தர்களும், காணி மீட்டல் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான உட்பட அமைச்சின் உயரதிகாரிகளும், சிரேஷ்ட பொறியலாளர்களும் கலந்து கொண்டனர்.

டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -