அஸ்ரப் ஏ சமத்-
இலங்கையில் மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்ற விடயத்தை பிரிட்டன் ஒருபோதும் மறக்காது.
அதே போன்று செப்ரெம்பரில் ஐ.நாடுகள் விசாரணை அறிக்கை வெளியாகி விவாதிக்கப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாகவுள்ளோம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவை நேற்றுச் சந்தித்த பிரிட்டனின் டெய்லி மிரர் பத்திரிகையில் எழுதியுள்ள செய்தியில் இதனை அவா குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கைக்கு 2013 இல் பயணம் செய்த தருணத்திலிருந்து இலங்கையின் கடந்தகால விவகாரங்களுக்குத் தீர்வு காண உதவுவது குறித்தும், அந்த நாட்டுக்குச் சிறந்த எதிர்காலம் அமைய உதவுவது குறித்தும் நான் உறுதியாக இருக்கிறேன். அந்த நாட்டு மக்கள் புதிய ஜனாதிபதி ஓருவரைத் தெரிவுசெய்துள்ளனர்.
அவர் நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த தனது முழுமையான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல், பொருளாதார, சமூக சீர்திருத்தங்கள் மூலமாகவும் கடந்த கால விவகாரங்களுக்கு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தீர்வு காண்பதன் மூலமாகவும் இலங்கைக்குள்ள சாத்தியப்பாடுகளைப் பயன்படுத்த முனைவதற்கு புதிய அரசுக்கு உண்மையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கையின் புதிய ஜனாதிபதியுடனான முதலவாது சந்திப்பின் போது அவருக்கான எனது செய்தி இதுவாகவே அமைந்திருக்கும்.
அவருக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்சவுக்கு முற்றிலும் மாறான விதத்தில் சிறிசேன எடுத்துள்ள வெளிப்படையான முற் போக்கான நடவடிக்கைகளுக்கு பதிலாகவே ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையை வெளியிடுவதை மேலும் ஆறு மாதங்களுக்கு பிற்போடுவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் யோசனைக்கு நாங்கள் ஆதரவளித்தோம்.
ஓரு வருட காலத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்தவர்களின் முகங்களை என்னால் மறக்க முடியாது. தாங்க முடியாத துயரங்கள் மற்றும் இழப்புகள் குறித்து அவர்களது கதைகள் என்றும் என் மனதில் தங்கியிருந்து மாற்றங்களுக்கான முயற்சிகளை முன்னெடுக்கச் செய்யும்.
நான் அங்கு கேட்டதும் பார்த்தும், நான் ஏன் அங்கு சென்றேன் என்பதைச் சுட்டிக்காட்டும் விடயமாக அமைந்துள்ளது. அங்கு அவ்வேளை முன்னேற்றங்கள் எதுவும் காணப்படவில்லை என்பதை வெளியுலகிற்கு தெரியப்படுத்தவும், சீர்திருத்தங்களுக்கான சர்வதேச அழுத்தங்களை எற்படுத்துவதற்காகவுமே நான் யாழ்ப்பாணம் சென்றேன். இலங்கை முழுவதிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் அதற்கு காரணமானவர்களைப் பொறுப்புக் கூறச் செய்ய வேண்டும்.