பி. முஹாஜிரீன்-
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை - சின்னப்பாலமுனையில் பொது வாசிக சாலையொன்று நேற்று திங்கட்கிழமை (9) மாலை திறந்து வைக்கப்பட்டது.
பாலமுனை 2ம் பிரிவு சனசமூக நிலையத்தின் எற்பாட்டில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அனுமதியுடன் தற்காலிக கட்டடமொன்றில் திறந்து வைக்கப்பட்டுள்ள இவ் வாசிகசாலை திறப்பு விழா நிகழ்வு சனசமூக நிலையத்தின் தலைவர் பி.எம். பசீர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வாசிகசாலையை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன் வாசிக சாலைக்குத் தேவையான நாளாந்த பத்திரிகைகளையும் வழங்கி வைத்தார்.
இவ்வாசிகசாலைக்கு நாளாந்தம் தேவைப்படும் தினசரிப் பத்திரிகைகள் தினமும் வழங்கப்படுவதுடன் இதற்குத் தேவையான தளபாட வசதிகளும் விரைவில் பெற்றுக் கொடுக்கப்படுமென தவிசாளர் எம்.ஏ. அன்சில் இங்கு குறிப்பிட்டார். அத்துடன் இதனை தொடர்ச்சியாக இயங்கச் செய்து இக்கிராமத்திலுள்ள பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பொதுமக்களும் பயன்படுத்தக்கூடிய ஒரு நூலகமாக முன்னெடுத்துச் செல்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.
சின்னப்பாலமுனைக் கிராமத்திற்கு மிக நீண்டகாலத் தேவையாகக் காணப்பட்ட நூலகத் தேவையை நிறைவு செய்யும் வகையில் ஆரம்ப கட்டமாக இப்பொது வாசிகசாலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமைக்காக பொது மக்கள் சனசமூக நிலையத்திற்கும் அட்டாளைச்சேனை பிரதேச சபையினருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றனர்.