சீகிரியாவிற்கு கடந்த 14.02.2015 அன்று தன்னுடைய நண்பிகளுடன் சுற்றுலா சென்ற சித்தாண்டி, விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற யுவதி அங்குள்ள சுவர் ஒன்றில் தனது பெயரை எழுதினர் என்ற குற்றச்சாட்டில் அங்கு காவற்கடமையில் இருந்த பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு 02.03.2015 அன்று தம்புள்ளை பொலிஸாரினால் தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட வேளை தொல்பொருட்களைச் சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கி நீதவான் தீர்ப்பளித்தார்.
மேற்படித் தீர்ப்புக்கு அமைவாக குற்றவாளியாகக் காணப்பட்ட உதயசிறி தற்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள விடுதலை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார் ஆகியோர் நேற்று (09.03.2015) யுவதியின் வீட்டுக்கு விஜயம் செய்து அவரின் தாயார் மற்றும் குடும்ப உறவினர்களோடு இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினர்.
இதன் போது யுவதியின் தாயாரான சின்னத்தம்பி தவமணி சம்பவம் தொடர்பில், "எனது மகள் 14.02.2015 அன்று தனது நண்பிகளுடன் சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள சுவரில் பலரது பெயர்கள் எழுதியிருப்பதைக் கண்டு அதில் தன்னுடைய பெயரையும் எழுதியுள்ளார். அவருக்கு அந்தச் சுவரில் எழுதக் கூடாது என்று தெரியாது, தெரிந்திருந்தால் அவர் எழுதியிருக்க மாட்டாள். எனது மகளுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை இட்டு தான் பெரிதும் வருந்துகிறேன். எனது மகளின் விடுதலைக்காக பலத்த கஷ்டங்களுக்கு மத்தியிலும் சட்டத்தரணி ஒருவர் மூலம் முயற்சி செய்தோம். என்றாலும் சிங்கள மொழி தெரியாததால் நீதிமன்றத்தில் பேசப்பட்ட விடயங்கள் எதனையும் எங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இறுதியில் இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் கூறிய பின்னர்தான் எங்களுக்குத் தெரியவந்தது என கண்ணீர்" மல்கக் கூறினார்.
"நான் ஒரு விதவை, நான் எனது மகளின் வருமானத்தில்தான் வாழ்ந்து வருகிறேன், அன்றாடம் மாவு இடித்து, அப்பம் சுட்டே எனது வாழ்கையை ஓட்டுகிறேன். இந்நிலையில் எனது மகளுக்கு ஏற்பட்டுள்ள இந்நிர்கதி நிலையை எண்ணி தான் பெரிதும் வருத்தமடைந்துள்ளதாகவும், தனது மகளின் விடுதலைக்காக முடியுமான ஒத்துழைப்பை தான் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும்" தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் மேற்படி யுவதியின் விடுதலை தொடர்பில் NFGG தம்மால் இயன்ற உதவிகளைச் வழங்குவதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்கக் கோரி கடிதம் ஒன்றினை அனுப்புவதாகவும் NFGGயின் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் தெரிவித்தார். அத்தோடு உரிய சட்ட ரீதியான உதவிகளைப் பெற்றுத் தருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்தவிடயம் தொடர்பில் NFGG யின் தலைமைத்துவசபை உறுப்பினர்கள் இன்று (10.03.2015) கொழும்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியதுடன், இது தொடர்பான ஆவணங்களையும் கையளித்துள்ளனர்.