பி. முஹாஜிரீன்-
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சத்துணவு தொடர்பாக பாடசாலை அதிபர்களை விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நேற்று திங்கட்கிழமை (09) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விசேட செயலமர்வுக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
200 மாணவர்களுக்கு அதிகமாக கல்வி பயிலும் பாடசாலைகளின் அதிபர்கள் தேர்வு செய்யப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் சத்துணவு தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஒழுங்குகள் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், சுகாதார திணைக்கள உயரதிகாரிகளும் வலயக் கல்வி அலவலகங்களின் அதிகாரிகளும் மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.