மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
இலங்கையில் உள்ள பலகலைக் கழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள், உயர் தொழில் நுட்பக் கல்லூரிகள், கல்விக் கல்லூரிகள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கற்கின்ற முஸ்லிம் மாணவர் மஜ்லிஸுகள் குறித்து சமூகத்தலைமைகள் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும்.
சமூக வாழ்விலும், தேசிய வாழ்விலும் கல்வி உயர் கல்விச் சமூகம் எதிர்பார்க்கப் படுகின்ற பங்களிப்பினைச் செய்வதற்குரிய மிகச் சிறந்த தலைமைத்துவப் பாசறைகளாக அவை நோக்கப்படல் வேண்டும்.
சாதாரண தர, மற்றும் உயர் தர கற்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து உயர்கல்வி பட்டதாரி கற்கைகளுக்காக பல்கலைக் கழக அனுமதி பெரும் மாணவர்கள் கல்வி வாழ்வின் கடந்த காலம் பற்றியும் எதிர்காலம் பற்றியும் மிகத் தெளிவான அனுபவம், அறிவு அனுமானங்கள், தகவல்களை தம்மகத்தே கொண்டுள்ளவர்கள்.
பலகலைக் கழகங்களில் அவர்கள் பெறுகின்ற தலைமைத்துவப் பயிற்சிகள், பரந்துபட்ட அறிவு ஆய்வு திறன்கள், அனுபவங்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்களின் உறவுகள் வழிகாட்டல்கள் என்பவற்றை மையமாக வைத்து இலங்கையில் உள்ள சுமார் எண்ணூறு முஸ்லிம்பாடசாளைகளினதும் எதிர்கால தரவிருத்தி, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், மாணவ சமூகத்தின் உளவள, மற்றும் வினைத்திறன் விருத்தி, கல்வி உயர்கல்வி தொழிற்கல்வி வழிகாட்டல்கள் என பல்வேறு துறைகளிலும் அவர்களது பங்களிப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் தத்தமது பிரதேசத்தில் இருந்து உயர்கல்வி பெறுவதற்கான வைப்புக்களை பெற்றுள்ள பட்டதாரி மாணவர்களை அணுகி அவர்களிடமிருந்தும் பலகலைக் கழக மஜ்லிஸ்களில் இருந்தும் பெறமுடியுமான சேவைகள் பங்களிப்புக்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் மூலம் பரஸ்பர ஒத்துழைப்புக்களை மேகொள்ள முடியும்.
பரஸ்பர ஒத்துழைப்பு எனும் பொழுது அது ஒரு வழி பயன்பாடு ஆக இருக்கமாட்டாது, குறிப்பிட்ட பட்டதாரி மாணவர் சமூகத்தின் நலன்கள், தேவைகள் அறிந்து அவர்களது மஜ்லிஸ்களின் செயற்பாடுகளுக்கு சமூகமும் இரட்டிப்பான பங்களிப்பினை செய்தல் வேண்டும்.
இலங்கையில் பல்வேறு தொண்டர் நிறுவனங்கள் கல்விசார் நடவடிக்கைகள்,கல்வி வழிகாட்டல் கருத்தரங்குகளை நடாத்துகின்றார்கள், அதற்கான வளங்களும் நிதி ஒதுக்கீடுகளும், நண்கொடைகளும் பெறப்படுகின்றன, அவ்வாறான நிறுவனங்கள் பல்கலைக் கழக மற்றும் உயர்கல்வி மாணவர் சமூகத்தையும் உள்வாங்குதல் இரு சாராருக்கும் பயனுள்ளதாக அமையும்.
செல்வங்களில் கணிப்பரிய அளப்பரிய செல்வம் கல்விச் செல்வமாகும், பலகளிக் கழக மாணவர்கள் தத்தமது கற்றல் நடவடிக்கைகளுக்கு புறம்பாக சுயேட்சையாக மேற்கொள்ள முன்வரும் கல்விப்பணிகள் சமூக சேவைகளில் மிகப் பிரதானமானவை என்பதனை உணர்ந்து அவர்களுக்குத் தேவையான சகல வளங்களையும் உதவிகளையும் சமூகத் தலைமைகள் தாராளாமாக பெற்றுக் கொடுத்தல் கட்டாயமாகும்.
அதேபோன்று ஏற்கனவே பட்டதாரி கற்கைகளை நிறைவு செய்து சமூக மற்றும் தேசியத் தளத்தில் உயர்பதவிகளிலும், அதிகார மையங்களிலும், கல்விசார் பதவிகளிலும், அந்தஸ்துகளிலும் உள்ள புத்திஜீவிகள், மற்றும் நிபுணர்கள் உயர்கல்வி கற்கும் பட்டதாரி மாணவர்களுக்கு தமது அனுசரணைகளையும், அரவணைப்புக்களை வழங்குவதில் தாராளத் தன்மையுயடன் நடந்து கொள்ளவேண்டும்.
பட்டதாரி மாணவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு தலைப்பில் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான மிகச் சிறந்த நுட்பங்களும் திறன்களும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன, தாம் சார்ந்த பிரதேசங்கள்,கிராமங்கள், கற்ற பாடசாலைகள் குறித்த மிகச் சிறந்த ஆய்வுகளை, மூலோபாயத் திட்டமிடல்களை, செயற்பாட்டு பொறிமுறைகளை தயார் செய்து அமுலாக்குவதில் கல்வி உயர்கல்விச் சமூகத்தின் பங்களிப்புக்களை உச்ச அளவில் சமூகம் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
இனமத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பல்கலைக் கழக சூழலில் மிகச் சிறந்த தலைமைத் துவப் பண்புகளோடு நடந்து கொள்வதும், சமாதான, சகவாழ்வு, தேசத்தின் அபிவிருத்தி, சமூக பொருளாதார, அரசியல் களநிலவரங்கள் குறித்த பிரக்ஞை என்பவற்றை பெற்றுக் கொள்வதும்- தமது தனித்துவம் பேணியவர்களாக- பரஸ்பரம் சகோதர சமூகங்களோடு மேலே சொல்லப்பட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பதும் அவர்கள் கரிசனை செலுத்த வேண்டிய மிகப் பிரதானமான அம்சமாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இளமைப்பருவத்தில் தமது ஆன்மீக பண்பாட்டு விருத்தியில், உயரிய இஸ்லாமிய மானுட விழுமியங்களை கண்டிப்பாக கடைப்பிடித்தது ஒழுகுவதில் அவர்களுக்கு தேவைப்படுகின்ற ஆன்மீக பண்பாட்டு பயிற்சிப் பட்டறைகளை சமூக நிறுவனங்கள் பெற்றுக் கொடுத்தல் அவசியமாகும்.