ஏப்ரலில் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற ஐ.தே.க. வின் தீர்மானத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது சுய இலாபத்திற்காக சாதகமான அரசியல் கலாசாரத்திற்கு விலங்கிட பார்க்கின்றார் என்று எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். ஆகையால் தேசிய நலனை கருத்திற்கொண்டு ஐ.தே. க. வின் முயற்சியை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊழல் மோசடிகளற்ற பாராளுமன்றத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஐ.தே. க. கொண்டு வந்த விகிதாசார தேர்தல் முறைமையை நீக்க வேண்டும். இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பூரண ஆதரவினை வழங்கும். எனவே அரசியல் கொள்ளைகளுக்கு சுதந்திர கட்சி ஆதரவு வழங்காது எனவும் அவர் எச்சரித்தார்.
பெப்ரல் அமைப்பின் மார்ச் 12 பிரகடனத்தை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கும் முகமாக நேற்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே நீதியான தேர்தலை நடத்தும் முகமாக தேசிய அடையாள அட்டையை கட்டாயமாக்கியது. அதற்காக பெப்ரல் அமைப்பு பாரியளவில் போராட்டங்களை முன்னெடுத்தது. இதற்கமைய நீதியான தேர்தலை எம்மால் நடத்த முடிந்தது.
இந்நிலையில் பாராளுமன்ற மக்கள் பிரதி நிதித்துவம் தொடர்பில் பெப்ரல் அமைப்பு மார்ச் 12 பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. இந்த செயற்பாடானது வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.
குறித்த பிரகடனத்தின் யோசனைகளை நிறைவேற்றுவது தொடர்பில் எந்த தயக்கமும் எமக்கு இல்லை. இந்த பிரகடனத்திற்கு சுதந்திர கட்சி பூரண ஆதரவினை வழங்கும்.
இந்நிலையில் சாதகமான அரசியல் கலாசாரத்திற்கு இந்த பிரகடனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். எனினும் ஊழல் மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை கொண்டிராத பாராளுமன்ற மக்கள் பிரதிநிதித்துவத்தை உருவாக்க வேண்டுமாயின் தேர்தல் முறைமையில் மாற்றம் அவசியமாகும்.
முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் விகிதாசார தேர்தல் முறைமையும் கொண்டுவரப்பட்டது. இது நாட்டிற்கு பாரிய சீரழிவை ஏற்படுத்திய முறைமையாகும். இதனால் ஐ.தே. க. வும் சு.க. வும் பாரிய விபரீதங்களை அனுபவித்தன. எனினும் இவற்றில் சாதகமான அம்சங்களும் உள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினாலேயே 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம்.
எனினும் ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் எந்த ஆட்சேபமும் எமக்கு இல்லை. ஆனாலும் ஜனாதிபதி முறைமையை நீக்குவதனை விடவும் விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என்பதே மக்களின் அபிப்பிராயம் ஆகும்.
ஐ.தே. க. வினால் தொகுதிக்கு பொறுப்பு கூறக்கூடிய மக்கள் பிரதிநிதித்துவ முறைமையை நீக்கி விட்டு மோசடிக்காரர்களுக்கு இடமளிக்கும் விகிதாசார முறைமை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் நாட்டிற்கு சாதகமானதும் ஆரோக்கியமானதுமான புதிய தேர்தல் முறைமை அவசியமாகும்.
இந்த விடயத்தில் சாதாரண அரச சார்பற்ற நிறுவனங்களைப் போன்று செயற்படகூடாது. எனினும் ஐ.தே. கட்சி ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைப்போம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் 100 நாள் முடிவு பெற உள்ளது என்றும் நாம் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வோம் என்றும் கூறுகின்றார்.
தனது சுய இலாபத்திற்காக சாதகமான புதிய அரசியல் கலாசாரத்திற்கு விலங்கிடும் வகையில் பிரதமர் செயற்படுகிறார். சாதகமான அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த விருப்பம் இல்லாததை போன்று அரசு செயற்படுகிறது.
ஆகவே ஐ.தே. க. வின் முயற்சியை தோல்வி அடைய செய்ய சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது தேசத்திற்கு செய்யும் நற்கருமமாகும் என்றார்.