தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம் என்று கூறியதற்கு இலங்கை பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லும் போது அடிக்கடி இலங்கை கடற் படையினரால் தாக்கப்படுகிறார்கள். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ´எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்ல சட்டம் அனுமதி அளிக்கிறது´ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், மீனவர் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், டெல்லியில் மக்களவை உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை நேற்று எழுப்பினர்.
அப்போது, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசும் போது, ´´தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். இரு நாடுகளும் அடுத்தவரது மீனவர்களை சுட்டுக்கொல்வது உரிய தீர்வு அல்ல.
கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த நான், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது, அவரது கருத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தேன். அவர், தமிழக மீனவர்களையும், கேரளாவில் மீனவர்களை சுட்டுக் கொன்று கைது செய்யப்பட்ட இத்தாலி கப்பல் மாலுமிகளையும் ஒப்பிட்டு இருப்பது சரியல்ல என்றும் அவரிடம் கூறினேன்.
அதற்கு, தான் உண்மை நிலவரம் தெரியாமல் பேசி விட்டதாகவும், அப்படி பேசி இருக்கக் கூடாது என்றும் ரணில் விக்ரமசிங்க என்னிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும், ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு மாறுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பணம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆழ்கடல் மீன் பிடிப்புக்காக, சிறப்பு திட்டம் ஒன்றை விரைவில் மத்திய அரசு உருவாக்கும். ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு மாறு ம்வரை, இந்தப் பிரச்சினை மனிதாபிமானத்துடன் அணுகப்பட வேண்டும்" என்றார்.