பிரிட்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்நாட்டின் பிரதமர் டேவிட் கெமரோனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இதே பேச்சுவார்த்தையை அடுத்து இலங்கை - பிரிட்டிஷ் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகள் தொடர்பில் பல பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
பிரிட்டிஷ் எலிசபெத் மகாராணியின் அழைப்பினையேற்று பிரிட்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று லண்டனில் நடை பெற்ற பொது நலவாய நாடுகள் அமைப்பு தின நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
மேற்படி நிகழ்வுக்கு முன்னோடி ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும் விசேட சமய வழிபாட்டு நிகழ்வொன்று நேற்று நடை பெற்றுள்ளது. அதனை யடுத்தே மேற்படி பொது நலவாய நாடுகள் அமைப்பு தின நிகழ்வு ஆரம்பமானது.
லண்டனில் மெல்பேர் இல்லம் என்ற கட்டிடத்திலேயே மேற்படி நிகழ்வு நடை பெறவுள்ளது. பொது நலவாய நாடுகள் அமைப்பின் செயலகம் இக்கட்டிடத்திலேயே இயங்குகிறது.
இந்த நிகழ்வினையடுத்து இன்று பிரிட்டிஷ் பிரதமரைச் சந்திக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன: இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல துறைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பலவற்றில் கலந்து கொள்ளவுள்ளார்.
பொது நலவாய நாடுகள் அமைப்பு தின நிகழ்வில் அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா, மோல்டோ அரச தலைவர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாடு எலிசபெத் மகாராணியின் தலைமையில் நேற்று நடை பெற்றதுடன் அடுத்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு மோல்டோவிலேயே நடை பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.