த.நவோஜ்-
கடந்த காலங்களில் கல்வியமைச்சினைப் பொருத்த மட்டில் பல பாரபட்சங்கள் இடம் பெற்றன. அந்தவகையில் பல விதத்தில் நாம் ஒதுக்கப்பட்டோம் பாதிக்கப்பட்டோம். நாம் உரிமைக்காக போராடுகின்ற இனம் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் மூன்று இனங்களினதும் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் எமது அமைச்சரின் செயற்பாடுகள் அமையும். எம்மைப் போல் மற்றவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கின்றோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபை கல்வியமைச்சின் அமைச்சர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எஸ்.தண்டாயுதபாணியின் பதவி யேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்தில் முழுமையாக ஆட்சியைக் கைப்பற்றி ஆளும் நிலையில் நாங்கள் கிழக்கு மாகாண சபையில் ஏனைய தேசிய இனங்களோடு இணைந்து நாம் ஒரு தேசிய இனம் சிறுபான்மை இனம் அல்ல. எனவே எங்களோடு இருக்கின்ற சகோதர தேசிய இனத்தோடு இணைந்து இன்று கிழக்கு மாகாண சபை ஆட்சியை ஏற்படுத்தி தற்போது அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.
கடந்த காலங்களில் கல்வியமைச்சைப் பொருத்தமட்டில் பல பாரபட்சங்கள் இடம் பெற்றன பல உயர் அதிகாரிகள் கூட அரசியல் வாதிகளாக மாறியிருந்த நிலை காணப்பட்டது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை உத்தரவின்றி பாடசாலைக்கு அழைக்கக் கூடாது என்ற உத்தரவும் கல்வியமைச்சில் இருந்து சென்றிருந்தது.
ஆனால் தற்போது இறைவனின் சித்தத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பாடசாலைக்கு அழைக்க வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்த அதே கல்வியமைச்சின் அமைச்சராக இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி பெற்றிருப்பது இறைவன் தர்மத்தின் வழி நீதியை நிலை நாட்டியிருக்கின்றார்.
அதே வேளை எமது கல்வியமைச்சர் மிகவும் நிதானமானவரும், நேர்மையானவரும் உள்ளொன்று வைத்து வெளியொன்று காட்டுகின்ற தண்மை இல்லை. அவர் இந்தப் பதவியில் கூட பெரும் பாலும் ஆசை கொண்டிருக்கவில்லை. அவருக்கு எமது தலைவர் தான் இந்தப் பதவியைக் கொடுத்தார். ஏனெனில் இருக்கின்றவர்களில் இந்தக் கல்வியமைச்சில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற கல்வியமைச்சின் முன்னாள் உதவிச் செயலாளரே இவர். எனவே அவர்தான் பொருத்தமானவர் என்ற வகையில் தான் எங்களது தலைவரும், நாமும் அவரைத் தெரிவு செய்துள்ளோம்.
நாம் உரிமைக்காக போராடுகின்ற இனம் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மூன்று இனங்கள் இருக்கின்றன. அவற்றின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் தான் அவரது நடவடிக்கைகள் இருக்கும். மற்றவர்களின் உரிமைகள் பாதிக்கப்படும் போது அவர் தயங்காது குரல் கொடுப்பார்; ஏனெனில் நாம் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள். எம்மைப் போல் மற்றவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கின்றோம்.
எனவே நாம் சகல இன மக்களையும் இணைத்து அவர்களின் கல்விசார் அடிப்படைத் தேவைகளை அறிந்து நியாயமாக, நீதியாக தர்மத்தின் வழி அவரது கல்விச் சேவையை ஆற்ற வேண்டும் என வேண்டுகின்றேன் என்று தெரிவித்தார்.