இலங்கையில் பல மாவட்டங்களில் வசிப்போர் சிறுநீரக நோயின் தாக்கத்தினால் பாதிக்கப் பட்டிருப்பதாலும், பாரிய உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அந் நோயை கட்டுப் படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து செயற் படுவதாகவும், அந்நோய் குறித்து ஆராய்ச்சி நிலைய மொன்றை இங்கு நிறுவுவதற்கு சீனா முன் வந்திருப்பது தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் தாம் அந் நாட்டு அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் நன்றி செலுத்துவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
இலங்கை வந்துள்ள சீன விஞ்ஞான மன்றத்தின் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் செவ்வாய்கிழமை (10) பிற்பகல் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில் சந்தித்து ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ள உடன் படிக்கை யொன்று குறித்தும், பிரதானமாக தண்ணீரில் இரசாயன பொருட்கள் கலப்பதால் ஏற்படும் சிறுநீரக நோய்கள் தொடர்பிலான ஆய்வு கூடத்தை இங்கு அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடினர்.
தமது அமைச்சின் கீழுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினூடாக சிறுநீரக நோய்ப் பாதிப்புக்குள்ளான மக்கள் வசிக்கும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு விஷத்தன்மை வாய்ந்த இரசாயன பதார்த்தங்கள் அகற்றப்பட்ட சுத்தமான நீர் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம் உத்தேச ஆராய்ச்சி நிலையத்தை நிறுவதற்கு தேவையான காணியை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
அவர், விவசாயம் மற்றும் கைத்தொழில் ஆகியவற்வற்றில் அதிக முன்னேற்றம் கண்டுள்ள நாடான சீனாவில் சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நவீன சிகிச்சை முறைகளையும், அத்துறையில் அந்நாடு பெற்றுள்ள நிபுணத்துவத்தையும் இலங்கைக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு சீனா முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது என்றார்.
தாம் அண்மையில் கல்பிட்டி பிரதேசத்திற்கும், பதவிய மற்றும் வெலிஓயா (மணலாறு) பிரதேசங்களும் சென்றிருந்த பொழுது சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோரின் பரிதாபகரமான நிலையை நேரில் அவதானித்ததாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
சீன பேராசிரியர்களான ஹுவசெங் கியு, மற்றும் மிங் யாங் ஆகியோர் உட்பட சீன விஞ்ஞானிகள் குழுவில் இங்கு வந்துள்ள நிபுணர்கள் உத்தேச விஞ்ஞான ஆராய்ச்சி நிலையம் அமையவுள்ள கண்டிக்கு, சிறுநீரக நோய் பாதிப்புக்குள்ளான மதவாச்சிய பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கும் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயத்தை தமது நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் பாரிய கண்டி நீர்வழங்கல் திட்ட பணிப்பாளர் சரத் காமினி, நீர்வழங்கல் உதவிப் பொது முகாமையாளர் ஆர்.எஸ்.ஜீ.ஜோர்ஜ், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஊடகச் செயலாளர்