இக்பால் அலி-
நீர்கொழும்பு மற்றும் வத்தளை நகர பகுதியில் பலகைக் கொட்டில் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழும் மக்களுக்கு நகர அபிவிருத்தி அமைச்சினால் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வீடுகள் நிர்மாணித்துத் தருமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் இந்த மக்களுடைய வீடற்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து போராட்ட முன்னெடுப்புக்களை மேற் கொள்ளப் போவதாகவும் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி றஹீம் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
தடை செயய்யப்பட்ட சுனாமி எல்லைப் பகுதியை மீறி நீர் கொழும்பு பலவத்துறையில் பலகைக் கொட்டில் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழும் மக்களுக்கு இதுவரை நிரந்தரமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. தடை செய்யப்பட்ட சுனாமி எல்லைப் பகுதியில் வாழும் இந்த மக்களுடைய நிலை உயிர் ஆபத்து மிக்கதாகும். எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது.
இந்த சிறிய பலகை வீடுகள் மலையகத்தில் வாழும் லயன் காம்பராக்களை விட மிக மோசமானது. சீரான சுகாதார வசதி இல்லை. மலசல கூடங்கள் இல்லை. மழை வந்தால் நனையும். பிள்ளைகள் படிக்க முடியாத சூழல் இவை போன்ற பல்வேறு அசௌரியங்களுக்கு மத்தியில் இந்த மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்.
இந்த மக்களுடைய விடயம் தொடர்பாக கடந்த அரசாங்கத்திடம் பல கோரிக்கைகள் முன்வைத்த போதிலும் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. கம்பஹா மாவட்டத்தில் நீர் கொழும்பு பலவத்துறை மட்டுமல்ல பல்வேறு பகுதிகளிலும் பலகை வீடுகளில் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். பலகைக் கொட்டில் வீட்டு வாழ்க்கை முறையை இல்லாதொழிப்பதற்கு நகர அபிவிருத்தி அமைச்சு முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
வத்தளைப் பகுதியில் பலகையிலான வீடுகள் அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படுவதுண்டு. இந்தச் சந்தர்ப்பத்தில் சில இஸ்லாமிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தம் பெயரைப் போட்டுக் கொள்வதற்காக மட்டும் அதிரடியாக வந்து இந்த மக்களுக்கு உலருணவு வசதிகளைச் செய்து கொடுப்பார்கள்.
அதே போல அரசியல் வாதிகளும் ஓடோடி வருவார்கள். ஆனால் இவர்களுடைய கஷ்டமான பலகைக் கொட்டில் வீட்டு வாழ்க்கை முறையைப் பார்ப்பதில்லை. எத்தனை தடவை தான் பார்த்து விட்டுச் சென்றாலும் அரசாங்கமோ அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ உதவ முன் வருவதில்லை.
இந்த மக்கள் நகரப் பகுதியில் அண்மித்து வாழும் குற்றத்திற்காக இந்த மக்களைப் பற்றி எவரும் பெரிதாக கவனத்தில் கொள்வதில்லை. இந்த மக்களை எல்லாத் தரப்பினரும் புறக்கணித்து வருகின்றனர்.
அரசாங்கம்தான் கவனத்தில் கொள்ளாவிட்டாலும் இஸ்லாமிய நிறுவனங்களுக்குத்தான் கண்ணில்லையா என்று கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது. இவர்களுடைய பணிகள் குறுகிய ஒரு வட்ட எல்லைக்குள்ளேயே நிர்ணயம் செய்யப்ட்டதாக இருக்கின்றன.
பெருவாரியான முஸ்லிம்கள் பலகை கொட்டில் வீட்டு வாழ்க்கை முறையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். நோன்பு காலம் மட்டும் வந்தால் அந்த பகுதி மக்களுக்கு உலருணவு மட்டும் கொடுத்தால் போதுமானது என்ற நினைப்பு எல்லோருக்கும் இருக்கிறது. இந்த மக்களுடைய அடிப்படைத் தேவையை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என்பது இந்த நாட்டு முழு முஸ்லிம்களைப் பொறுத்துவரை கவலைக்குரிய செய்தியாகும்.
சில பகுதிகளில் மீள் குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் இல்லாத இடங்களில் ஒரு நபருக்கு ஒன்று அல்லது இரண்டு வீடுகளை வழங்கி பல சலுகைகளையும் வரப்பிரசாத்ங்களையும் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர், நீர் கொழும்பு களனி, வத்தளை, மீரிகம, பியகம. மள்வான , அத்தனைகலை, கட்டான, மஹர, மினுவங்கொடை உள்ளிட்ட பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய இடங்களில் இன்னும் முஸ்லிம்கள் அடிப்படை வசதிகளின்றி பலகைக் கொட்டில் வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மக்களுடைய வீடற்ற பிரச்சினை தொடர்பாக நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம முதன் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. இது தொடர்பாக அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். இந்த சந்தர்ப்பத்தில் பலகைக் கொட்டில் வீட்டில் வாழும் மக்களுடைய பிரச்சினை அமைச்சர் மாத்திரமல்ல இந்த நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.