சம்மாந்துறை அன்சார்-
சம்மாந்துறையில் பல்வேறு பட்ட சமூக நலப்பணிகளை செய்து வரும் றிபாத் நண்பர்கள் ஒன்றிய சமூக சேவைகள் அமைப்பினரால் அண்மையில் (2015-03-08) சம்மாந்துறையில் பெண்களுக்கான ஜனாசா குளிப்பாட்டல் மற்றும் கபனிடுதல் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய மிக உயரிய பயிற்சியான இவ் ஜனாசா குளிப்பாட்டல் பயிற்சிக்கு சுமார் 750க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், அஷ்ஷேக்: எம்.ஐ. அமீர் அவர்களும் விஷேட அதிதியாக வைத்தியர்: ஏ. றிஸ்பான் அவர்களும் மற்றும் றிபாத் நண்பர்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம். சியாத் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந் நிகழ்வில் பங்கு பற்றி பெண்களுக்கு மௌலவியா நுஸ்கியா ஹனா, மௌலவியா பாத்திமா பர்ஹாத், மௌலவியா பாத்திமா ஹப்ஷா மற்றும் மௌலவியா றுஸ்கானா ஆகியோரினால் ஜனாசா குளிப்பாட்டல், கபனிடுதல் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சம்மாந்துறை றிபாத் நண்பர்கள் ஒன்றியமானது கடந்த 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இற்றைக்கு பல ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், பிரதேசத்தில் உள்ள பல குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நிறைவு செய்யும் வகையில் பல்வேறுபட்ட சமூக சேவைகளைச் செய்து வருகின்றது.
பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல், தலைமத்துவப் பயிற்சி வழிகாட்டல், தொழில்வழிகாட்டல் பயிற்சி, இரத்ததான முகாம், மருத்துவ முகாம், விளையாட்டு போட்டிகள் என பல்வேறு சமூக சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.