எம்.எம்.ஜபீர்-
தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பதற்காக பல் வேறு சிக்கல்களை எதிர் நோக்கி வந்தது.
எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர் வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் மேற் கொண்ட முயற்சியால் எடுக்கப்பட்ட சாணக்கியமான முடிவுகள் சிறந்த முடிவாக அமைந்துள்ளது எனவும் இதனை தான் பாராட்டுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஆட்சி அதிகாரத்திலிருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை மாற்றியமைக்க ஓரணியில் திரண்டு வாக்களித்ததன் பயனாக புதிய தேசிய அரசாங்கம் அமையப் பெற்றது.
இதற்கு எடுத்துக்காட்டாக கிழக்கு மகாணத்திலுள்ள மூவின மக்களையும் ஒன்றினைத்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனும் குறிக்கோளுடன் அயராது முயற்சி மேற் கொண்டு ஆட்சி அமைப்பதில் நீண்ட நாட்களாக ஏற்பட்டிருந்த இழுபழி நிலையை சமரசத்திற்கு கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளின் அங்கீகாரத்தினை பெற்று சிறப்பான முறையில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை நிறுவியமையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும், அதன் தலைமைக்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.