வட மாகாணத்தில் உள்ள 1ஏபி பாடசாலைகளான யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளரினால் கோரப்பட்டுள்ளன.
இப்பதவிற்கு 26.2.2015 அன்று வெளிவந்த அரச ஊடகம் ஒன்றின் விளம்பரத்தின் படி இலங்கை கல்வி நிர்வாக சேவை வகுப்பு 111 பொது ஆளணியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இலங்கை அதிபர் சேவை வகுப்பு 1,2-1 மற்றும் 2-11 ஐச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகங்களில் பெற்று எதிர்வரும் 10 ஆம் திகதி க்கு முன்னதாக செயலாளர், கல்வி அமைச்சு வட மாகாணம் செம்மணி வீதி நல்லூர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
மேற்படி இரு பாடசாலைகளும் பாரம்பரியமாக முஸ்லீம் மாணவர்களுக்குரிய பாடசாலையாக இருப்பதனால் முஸ்லீம் சமூகத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நியமனத்தில் வட மாகாணத்தில் கடமையாற்றுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எனினும் வட மாகாணம் தவிர்ந்த வேறு மாகாணம் அல்லது மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த விண்ணப்பத்தாரிகளில் ஒருவர் தெரிவு செய்யப்படும் இடத்து வட மாகாணத்திற்கான விடுவிப்பு உரிய முறையில் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே நியமனம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.