மாணவர்கள் வகுப்பறைக் கற்றலுக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளிக்காது இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சும்சுடீன் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை நிந்தவூர் அல் மஷ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம் பெற்ற அப் பாடசாலையின் 2014 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர. மாணவர்களின் 'ஓ.எல் டே' வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உராயற்றும் போதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார் இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது.
இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள். இத்தலைவர்களை உருவாக்கும் பொறுப்பில் முக்கிய பங்கு வகிப்பது பாடசாலையாகும். பாடசாலைகளே சமூகத்திற்கான சிறந்த சமூகமொன்றை உருவாக்கும் கேந்திர தளமாக உள்ளது. ஒரு பிள்ளையில் சமூக மயமாக்களில் பங்களிப்புச் செய்யும் நான்கு நிறுவனங்களில் இரண்டாவது இடம் வகிப்பது பாடசாலைகளாகும். அத்தகைய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் வகுப்பறைக் கற்றலுக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளிக்காது பாடசாலைகளில் இடம் பெறும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பங்கு கொள்ள வேண்டும்.
ஒரு மாணவனின் ஆளுமை விருத்திக்கு பாடசாலைகளில் இடம் பெறுகின்ற விளையாட்டுப் போட்டிகள், ஆக்கத்திறன் போட்டிகள், இலக்கியப் போட்டிகள், மாணவர் மன்றங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் பங்களிப்பு செய்கின்றன.
பாடசாலைக் காலங்களில் இத்தகைய இணைப்பாட விதான செயற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்தான் பிற்காலத்தில் ஏதுமொரு ஒரு துறையில் ஆளுமையுள்ளவர்களாக திகழ்கின்றனர். அத்தோடு இத்தகைய இணைப்பாடவிதான செயற்பாடுகள் தலைமைத்துவப் பண்புளையும் வளர்க்கின்றன. ஒரு குடும்பத்தை வழி நடத்துவதற்கோ ஒரு நிறுவனத்தை இயக்குவற்கோ தலைமைத்துவப் பண்பு இன்றியமையாதது. அதைப் பெற்றுக் கொள்கின்ற சிறந்ததொரு தளமே பாடசாலைகளாகும் என அவர் தெரிவித்தார்.
பரீட்சையை மாத்திரம் இலக்காகக் கொண்டு அவற்றில் முழுக் கவனத்தையும் செலுத்தி படித்து விட்டு பரீட்சையில் சித்தியடைந்தாலும், வாழ்க்கைக்குத் தேவையான இதர விடயங்களை பாடசாலைக் காலங்களில் கற்றுக் கொள்வது அவசியமாகிறது. அவற்றிற்கும் மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பாடசாலைகளில் பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன. அவை பரீட்சையில் சித்தியடைவதற்கு கல்வி கற்பதற்காக மாத்திரம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாணவனும் தனது திறனையும், ஆற்றலையும், ஆளுமையையும் வளர்த்துக் கொள்வதற்காகவே வழங்கப்படுகிறது. அவற்றை உரிய முறையில் மாணவர்கள் பயன்படுத்தவேண்டுமென கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். எதையும் கற்றுக் கொள்ளும் பொன்னான காலமே பாடசாலைக் காலமாகும. இக்காலத்தை தவற விட்ட பலர் பிற் காலத்தில் கைசேதப்படுவதை நாம் காண்கின்றோம். அவைகள் நமது எதிர்கால வாழ்வுக்கு முன் உதாரணமாகக் கொள்ளப் பட வேண்டும்.
அத்துடன், வகுப்பறைக் கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டுப் போட்டிகள். சாரணர் படை, கடேற், இலக்கியப் போட்டிகள், ஆக்கப் போட்டிகள், மாணவர் மன்றங்கள் என்வற்றில் ஒவ்வொரு மாணவனையும் பங்கு கொள்ள ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். 'மோட்டிவேசன்' அதாவது ஊக்கப்படுத்தல் இன்றியமையாதது. எந்தவொரு செயற்பாட்டுக்கும் ஊக்கப்படுத்தல் அவசியம. அந்தவகையில், பாடசாலைகளில் இத்தகைய போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றிற்கான பரிசளிப்பு விழாக்களும் உரிய காலத்திற்குள் நடைபெற வேண்டும். இவற்றை உரிய காலத்திற்குள் நடத்த அதிபர் உட்பட ஆரிசிரியர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்கொள்கின்றேன்.
கல்முனைக் கல்வி வலய கண்காணிப்பு மாகாண சபை உறுப்பினராக நான் நியமிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் இவற்றை கல்முனை வலயக் பாடசாலைகளில் மேற்கொள் வேண்டுமென வலயக் கல்விப் பணிப்பாளரினூடாக பாடசாலைகளுக்கு அறிவித்திருந்ததாகக் கூறிய மாகாண சபை உறுப்பினர் 2014ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றிய இவ்வைபவத்தினை நடாத்தும் மாணவர்களின் பரீட்சைப் பெறு பேறுகள் சிறந்தாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாகவும் மேலும்; குறிப்பிட்டார்