மட்டக்களப்பு புகையிரத நிலையத்தினூடாக இடம்பெறும் புகையிதரப் பயணத்திற்கான ஆசனங்களைப் பதிவு செய்துகொள்வதற்காக கல்முனையில் இயங்கிய ஆசன முற்பதிவு நிலையத்தை மீண்டும் கல்முனையில் திறந்து செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் போக்குவரத்துப் பிரதி அமைச்சர் எம்.எஸ். தௌபீக்கிடம்; கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்; பிரதி அமைச்சர் எம்.எஸ். தௌபீக்கிற்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது.
கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் ஆசன முன் பதிவு நிலையமொன்று கல்முனையில் இயங்கியது. 1983ஆம் ஆண்டின் பின்னர் கிழக்கில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக அம்பாறை மாவட்ட மக்கள் கொழும்புக்குச் செல்வதற்காக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொண்டனர்.
இதன் காரணமாக கல்முனையில் இயங்கிய மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கான முன் ஆசனப் பதிவு நிலையம் மூடப்பட்டது.
இந்நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு பல்வேறு வழிகளில் கடந்த ஆட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்; அவை கைகூடவில்லை.
நாட்டில் நிலவும் சமாதான சூழ்நிலையின் காரணமாக அம்பாறைப் பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கொழும்புக்குச் செல்வதற்கு மட்டக்களப்பிலிருந்து இடம்பெறும் புகையிரத சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
நாட்டில் நிலவும் சமாதான சூழ்நிலையின் காரணமாக அம்பாறைப் பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கொழும்புக்குச் செல்வதற்கு மட்டக்களப்பிலிருந்து இடம்பெறும் புகையிரத சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும், புகையிரத பயணத்திற்காக ஆசனத்தைப் பதிவு செய்து கொள்வதில் அம்பாறைப் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குறிப்பாக அரச ஊழியர்கள் பெரும் சிரமத்ததை எதிர்நோக்குகின்றனர்.
ஏனெனில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச புகையிர ஆணைச்சீட்டின் மூலம் ரயில் பயணத்திற்கான ஆசனத்தை முன் பதிவு செய்துகொள்ள முடியாமல் உள்ளனர்.
அத்துடன், மட்டக்கப்புக்குச் சென்று முன் ஆசனப்பதிவை மேற்கொள்ளும்போது நேர விரையத்தையும் வீண் செலவையும் அவர்களால் எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஒன்லைன் ஊடாக அரச ஊழியர்கள் தங்களது இலவச புகையிரத ஆணைச்சீட்டின் மூலம் ரயில் பயணத்திற்கான ஆசனத்தை முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
இவ்வாறு எதிர் நோக்கும் பல பிரச்சினைகளை கருத்திற்கொண்டு கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் கல்முனையில் இயங்கிய ஆசன முன் பதிவு நிலையத்தை மீண்டும் கல்முனையில் திறந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபை உறுப்பினர் போக்குவரத்துப் பிரதி அமைச்சர் எம்.எஸ். தௌபீக்கிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக கல்முனைக்கு வருகை தந்த தற்போதைய ஜனாதிபதி மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான புதிய ரயில் பாதை நிர்மாணிக்கப்படுமெனவும் குறிப்பிட்டதனை ஞாபகமூட்ட விரும்புவதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் பிரதி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.