புதிய காத்தான்குடி, பரீட் நகர், பாம் வீதி மிகவும் படுமோசமாக காணப்படுகின்றமையால் மக்களின் தேவை கருதி இதனைத் தற்காலிகமாக தமது சொந்த செலவில் செப்பனிட்டுக் கொடுப்பதற்கு NFGG முன்வந்துள்ளது.
இதற்கான அனுமதி உடனைடியாக வழங்குமாறு காத்தான்குடி நகரசபையிடம் NFGG கோரியுள்ளது.
இது தொடர்பாக அனுமதி கோரும் கடிதம் ஒன்றினை நகரசபை உறுப்பினர்களான SH.பிர்தௌஸ் மற்றும் MAHM.மிஹ்ழார் ஆகியோர் கையொப்பமிட்டு நேற்று (11.03.2015) நகரசபையில் கையளித்தனர்.
அக்கடிதத்தில் தெரிவிக்கிப்பட்டுள்ளதாவது,
"புதிய காத்தான்குடி மக்களின் அன்றாடப் போக்குவரத்துத் தேவைகளுக்காக நாளாந்தம் பெரிதும் பாவிக்கும் வீதிகளில் ஒன்றான பாம் வீதி மிக நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கின்றது. இதனை அபிவிருத்தி செய்வதில் காணப்படும் இழுத்தடிப்புக்களைக் கண்டித்து அண்மையில் அப்பிரதேச மக்களினால் கவன யீர்ப்புப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
மக்களின் நீண்ட காலத் தேவையான இவ்விடயத்தை முன்னிலைப்படுத்தி இருக்கும் எமது அமைப்பு இதனை அபிவிருத்தி செய்வதற்கான கோரிக்கையினை பெருந்தெருக்கள் அமைச்சரிடம் மேற் கொண்டு அதற்கான அனுமதியினையும் ஏற்பனவே பெற்றுக்கொண்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ஏனைய முன்னோடி நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவும் உள்ளன.
இதற்கிடையில் இவ்வீதி தற்போதைய நிலையில் படுமோசமாக காணப்படுகின்றமையால் இதனைத் தற்காலிகமாக செப்பனிட்டுக் கொடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
எனவே, இதற்கான அனுமதியினைக் காலதாமதமின்றி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்."
மேற்படி வீதியினை மக்களின் தேவை கருதி உடனடியாக செப்பனிடுவதற்கு NFGG அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள நிலையில் இதற்கான அனுமதியினை உடனடியாக காத்தான்குடி நகரசபை வழங்கும் என்றும் எதிர்பார்க்கின்றது.