கிழக்கில் ஒரு நல்லிணக்க ஆட்சியினை ஏற்படுத்துவதற்கு சரியான நேரத்தில் NFGG வழங்கிய பங்களிப்பு என்ன

னாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையில் அனைவரும் வரவேற்கத்தக்க ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் எற்பட வேண்டும் என மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டு அரசியலின் நம்பிக்கைக்குரிய தொடக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. 

தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரளவு திருப்திப்படும்படியான வகையில் அமைந்திருக்கும் இந்த மாற்றத்தை உருவாக்குவதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பெறுமதிமிக்க பங்களிப்பினை உரிய நேரத்தில் வழங்கியது என்ற செய்தியினை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகழ்ச்சியடைகிறோம்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த 08.03.2015 அன்று காத்தான்குடியில் நடைபெற்ற NFGGயின் செயற்குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

NFGGயின் தேசிய அமைப்பாளர் MBM பிர்தௌஸ் அவர்களின் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது,

"ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டில் ஏற்பட்ட நம்பிக்கை தரும் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியிலும் ஒரு புதிய மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. பயங்கரவாத சூழ்நிலைகளின் காரணமாக துருவப்படுத்தப்பட்ட அரசியலாக மாறியிருக்கும் தமிழ்-முஸ்லிம் அரசியலில் ஒரு இணக்கப்பாட்டு சூழ்நிலை உருவாக வேண்டும் என்றே மக்கள் விரும்பினார்கள். அதற்கான ஒரு நல்ல தொடக்கமாக கிழக்கு மாகாண சபை ஆட்சி மாற்றம் அமைய வேண்டும் எனவும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நிலைமை வேறு விதமாக மாறத் தொடங்கியது.

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி தொடர்பான சர்ச்சசை முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பாரிய கருத்து மோதலாக மாறியது. முதலமைச்சர் பதவி தமக்கே கிடைக்க வேண்டும் என்ற தம்பக்க நியாயங்களை இரண்டு தரப்புமே காரமாக முன்வைக்கத் தொடங்கினர். இது தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நிரந்தர அரசியல் பகையாக மாறிவிடக்கூடிய அபாய நிலைக்குச் சென்றது.

ஒரு இரண்டரை வருடமே செல்லுபடியான முதலமைச்சர் பதவி விவகாரம் ஒரு நிரந்தரமான அரசியல் இடைவெளியை இரு சமூகங்களுக்கிடையில் உருவாக்கி விடக்கூடாது என்பதில் அக்கறை கொண்ட நாம் உடனடியாக இந்த விடயத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு இணக்கப்பாட்டான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம்.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தோடு ஒரு அவசர சந்திப்பினை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென கடந்த பெப்ரவரி 4ம் திகதி மாலை நாம் தீரமானித்தோம். இந்த சந்திப்பு பற்றி, எமது தலைமைத்துவ சபை உறுப்பினரான பொறியியலாளர் பழுலுல் ஹக் தனது முக நூல் பக்கத்தில் அன்றைய தினமே குறிப்பொன்றையும் இட்டிருந்தார்.

அப்போது முக்கிய வெளிநாட்டு பயணமொன்றிற்காக காத்தான்குடியிலிருந்து விமான நிலையத்தை நோக்கி நான் சென்று கொண்டிருந்தேன். இந்த அவசர முடிவைத் தொடர்ந்து, இவ்விடயத்தின் முக்கியத்துவம் கருதி எனது வெளிநாட்டுப் பயணத்தையும் ஒத்தி வைத்து விட்டு நான் நேரடியாக கொழும்புக்கு சென்றேன். 

அடுத்த நாளான பெப்ரவரி 5ம் திகதி காலை TNA தலைவராடு அந்த முக்கிய சந்திப்பினை மேற்கொண்டோம். யுத்தத்திற்கு பின்னரான சூழலில், தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இணக்கப்பாட்டினை சகல வழிகளிலும் ஏற்படுத்த வேண்டிய இத்தருணத்தில், முதலமைச்சர் விவகாரம் என்பது தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான அரசியல் பகையாக உருவாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதனை தெளிவு படுத்தினோம்.

மாகாண சபை ஆட்சிக்கால ஆரம்பத்தில், முதலமைச்சர் பதவியினை முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவதற்கு முன்வந்ததைப் போன்றே தாராளத் தன்மையோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமது முடிவுகளை மேற்கொண்டால் அது இரண்டு சமூகங்களினதும் எதிர்கால அரசியல் மேம்பாட்டுக்கு பெறுமதிமிக்க பங்களிப்பாக அமையும் என்றும் எடுத்துரைத்தோம்.

அத்தோடு முதலமைச்சர் பதவியில் விட்டுக்கொடுப்பைச் செய்து விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபையில் எதிர்கட்சியில் அமருமேயோனால் அது முரண்பாட்டின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படும் என்பதனால், அமையப்போகும் மாகாண சபை ஆட்சியில் அமைச்சுக்களைப் பொறுப்பெடுத்து ஆட்சியில் பங்கு பற்றி சகல சமூகங்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்பதனையும் எமது வேண்டுகோளாக முன்வைத்தோம்.

இதனை சாதகமாக ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் தமிழ்-முஸ்லிம் உறவை கிழக்கில் வலுப்படுத்தத்தக்க பொருத்தமான முடிவுகளை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தது.

TNA தலைமையின் இந்த சாதகமான பதிலினை SLMCயின் தலைமைத்துவத்திற்கு நாம் உடனடியாக அறியக்கொடுத்தோம். இந்த சாதகமான நிலையினை அவர்கள் அப்போது உடனடியாக வரவேற்கவில்லை. ஆயினும் கூட இதனை சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு கட்டாயம் SLMCக்கு கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி ஏற்பட்டது.

பெப்ரவரி 10 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு-செலவு திட்டத்தினை அங்கீகரிக்கும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அந்த வகையில் TNA உடனான பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து தமது ஆட்சியினை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்காக அவர்களின் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள SLMC விரும்புவதாகவும் நாம் அறிந்து கொண்டோம்.

அந்த வகையில் அமையப்போகும் கிழக்கு மாகாண சபையில் எவ்வாறான பங்கேற்பினை TNA செய்ய முடியும் என்ற அடிப்படையிலான பேச்சு வார்த்தைகளை நாம் முன்னெடுத்தோம். இதனை பலனாக SLMC-TNAக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று பெப்ரவரி 9ம் மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில், பெப்ரவரி 10 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு TNA ஆதரவினை வழங்கியது.

அமையப்போகும் கிழக்கு மாகாண சபை அமைச்சரவையில் கல்வி மற்றும் காணி அமைச்சுப் பொறுப்புக்கள் TNA க்கு வழங்கப்படும் என்பதுவும் எட்டப்பட்ட இணக்கப்பாட்டில் ஒரு உறுதி மொழியாக இருந்தது. இருப்பினும் வரவு செலவு திட்டத்தினை அங்கீகரிப்பதற்கு TNAயின் ஆதரவினைப் பெற்றுக் கொண்ட SLMCயினர், ஏற்கனவே உடன்பட்ட படி கல்வி மற்றும் காணி அமைச்சுக்களை TNAக்கு வழங்குவதில் இழுத்தடிப்புச் செய்தனர். நீண்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு உடன்பாட்டினை எட்டிய பிறகும்கூட SLMC இவ்வாறு நடந்து கொள்வதானது தமிழ்-முஸ்லிம் அரசியலில் மீண்டும் ஒரு விரிசலை ஏற்படுத்துமோ என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் குறித்த கல்வி அமைச்சினை திடீரென மற்றுமொருவருக்கு SLMC வழங்கியதானது பாரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. வழங்கப்பட்ட வாக்குறகுறுதியை அப்பட்டமாக மீறும் செயலாகவும் இது அமைந்திருந்தது.

கல்வி நிருவாக சேவையில் அதிஉயர் அனுபவத்தைக் கொண்ட TNAயின் உறுப்பினரான தண்டாயுதபாணி அவர்களுக்கு குறித்த கல்வி அமைச்சினை வழங்காமல் கல்வி நிருவாகத்திற்கு எவ்வகையிலும் பொருத்தமில்லாத ஒருவருக்கு இந்த அமைச்சினை SLMC ஆரம்பத்தில் வழங்கியதானது எல்லாருக்கும் பேரதிர்ச்சியினையும் பெரும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. அவர்களின் அரசியல் பொறுப்புணர்வும் முதிர்ச்சியும் எவ்வாறானது என்பதனை உணர்த்துவாதாகவும் இது இருந்தது.

இந்த நிலையில்தான் கடந்த 2ம் திகதி மாகாண சபையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. SLMC யின் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்கியிருந்தவர்களில் எட்டுப்பேர் தமது ஆதரவினை உத்தியோக பூர்வமாக விலக்கிக் கொண்டனர். மட்டுமின்றி TNA தலைவரை சந்தித்த அந்த அணியினர் TNA லைமையில் ஆட்சி அமைப்பதற்கான தமது ஆதரவினை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஏற்கனவே SLMCயினால் தமக்கு வழங்கப்பட்ட உறுதி மொழியின்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லையாயினும் கூட, அச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தமது தலைமையில் ஆட்சியை அமைத்து சந்தர்ப்பவாத அரசியல் இலாபம் தேடிக்கொள்ள TNAயின் தலைமை விரும்பவில்லை.

SLMC நடந்து கொண்டது போன்று நாங்கள் நடந்து கொள்ள விரும்பவில்லை எனத் தெரிவித்து SLMCயோடு முரண்பட்ட அந்த அணியினரை சம்பந்தன் அவர்கள் திருப்பி அனுப்பியிருந்தார். மட்டுமின்றி ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கு அமைவாக முழுமையான ஆதரவினை SLMCக்கு தற்போது வழங்கியுள்ள TNA, கிழக்கு மாகாண சபையில் SLMCயினர் ஆட்சி நிலை பெறுவதனை உறுதி செய்திருக்கிறது. சுருங்கச் சொன்னால் SLMC எதிர்பார்த்த கிழக்கு முதலமைச்சர் என்ற பதவியானது TNA வழங்கிய ஆதரவின் காரணமாகவே இப்போது ஸ்திரப்படுத்தப்பட்டு நிலைபெறச் செய்யப்பட்டிருக்கிறது.

கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஒரு வரவேற்கத்தக்க ஒரு முன்னேற்றகரமான மாற்றமாகும். தமிழ் முஸ்லிம் சமூகங்களின் இணக்கப்பாட்டு, நல்லிணக்க அரசியலின் தொடக்கமாக அமைந்திருக்கும் இந்த மாற்றத்தினை உருவாக்குவதற்கு உரிய நேரத்தில் பெறுமதியான பங்களிப்பினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்திருக்கிறது.

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சமூகங்களின் நலன்களை முன்னிறுத்தியே நாம் இந்தப் பங்களிப்பினைச் செய்தோம். அரசியலில் நாம் கொண்டிருக்கும் தூய நோக்கங்களை இறைவன் பொருந்திக் கொண்டிருக்கிறான் என்பதனையே இந்த வெற்றி நிரூபிக்கிறது".

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -