எமது முழுமையான ஒத்துழைப்பும் அழுத்தமும் இருந்ததன் காரணத்தினால் தான் 19 ஆவது திருத்தச் சட்டம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது . எமது ஒத்துழைப்பு இல்லாது 19 ஐ நிறைவேற்றியிருக்க முடியாது , எனவே 19 ஆவது திருத்தத்தின் சொந்தக்காரர்கள் நாம்தான் என எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்தார் .
19 ஆவது திருத்ததச் சட்டத்தை நிறைவேற்ற அதிக அக்கறை காட்டியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என்பதை ரணில் மறந்துவிட வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார் .
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதானது;
இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு தருணம் இன்று அமைந்துள்ளது. இதுவரை காலமும் அரசியல் செயற்பாடுகளில் முட்டுக்கட்டையாக இருந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் . கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்த அனைவரும் தாம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவதாக வாக்குறுதி வழங்கிய போதிலும் யாரும் அதை நிறைவேற்றவில்லை. எனினும் எமது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தான் ஜனாதிபதி ஆனபின்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை மாற்றியமைப்பதாக தெரிவித்தார். அதேபோல் எமக்கு அவர் பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதியும் வழங்கியிருந்தார். அதன் காரணத்தினால் தான் நாம் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கினோம் .
இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் கொண்டுவரப்பட்டது . அப்போது செய்த சதித்திட்டத்தினை எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முறியடித்துள்ளார். இந்த தியாகமும், அர்ப்பணிப்பும் வேறு எந்தத் தலைவருக்கும் வரப்போவதில்லை. இவரின் செயட்பாடினால் அவர்மீதான மதிப்பு இன்னும் பலமடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியிலும் தலைசிறந்த தலைவனாக அவர் மாறிவிட்டார் .
எனினும் 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சதித் திட்டம் தீட்டிதையும், ஜனாதிபதிக்கான அதிகாரங்களை முழுமையாக பிரதமர் கைகளில் பலப்படுத்தும் திட்டத்தினையும் நாம் தான் தடுத்து நிறுத்தினோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறி இருந்தால் இன்று மக்கள் பலம் இல்லாத ஒருவர் அதிகாரத்தில் அமர்ந்திருப்பார். ஆனால் எமது முயற்சியாலேயே திருத்தம் செய்யப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல் 19ஆவது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்ற அனைத்து கட்சிகளினதும் பங்களிப்பு கிடைத்தது வரவேற்கத் தக்கது. எனினும் ஒருசிலர் அவர்களால் தான் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்று கூறுவதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் .
பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 147 ஆசனங்களை வைத்துள்ளது. ஏனைய அனைத்து கட்சிகளினதும் மொத்த ஆசனக் கூட்டுத்த்தொகையை விடவும் நாம் அதிக அங்கத்துவத்தினை கொண்டுளோம். எனவே எமது ஆதரவு இல்லாது போயிருந்தால் இன்று 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறி இருக்காது .
ஐக்கிய தேசியக் கட்சியுடன் முரண்பாடுகள் இருந்தும் 19ஆவது திருத்தத்தினை எமது தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்காகவே ஆதரித்தோம். இது எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஆனால் நாம் இத்தோடு நின்றுவிடப் போவதில்லை . உடனடியாக 20ஆவது திருத்தச் சட்டம் சபைக்கு கொண்டுவரப்பட வேண்டும். அதற்கான அணைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அமைச்சரவைக்கும் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான யோசனைகளை இன்று முன்வைத்துள்ளோம் . எனவே தேர்தல் முறைமையில் மிகச்சரியான மாற்றத்தினை ஏற்படுத்தி 20ஆவது திருத்தச் சட்டத்தினை விரைவில் பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடனும் நிறைவேற்றிக் காட்டுவோம் .
மேலும் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே 19ஆவது திருத்தச் சட்டத்தில் ஊடக அடக்குமுறைக்கான சரக்த்தினை முன்வைத்திருந்தார் .அதையும் நாம்தான் நீக்கக் கோரி முரண்பட்டோம். 19 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட அனைத்துமே மிகவும் முக்கியமானவை . எனவே இந்த 19 ஆவது திருத்தச் சட்டத்தின் முழு படைப்பாளிகளும் நாம்தான் என்றார் .