ஏ.எம்.றிகாஸ்-
மட்டக்களப்பு சந்தனமடு குளத்தில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கி 25 வயதுடைய வாலிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் 26.04.2015 நேற்றிரவு நல்லடக்கத்திற்காக அவரது குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி-பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த இச்சடலம் மீதான பிரேத பரிசோதனையை டாக்டர் கே.சுகுமார் மேற்கொண்டார். ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸிர் மரண விசாரணைகளை நடாத்தினார்.
மட்டக்களப்பு–செங்கலடி-சேனைக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த குமாரசாமி ஷயாமரன் என்ற இளைஞனே உயிரிழந்தவரென அடையாளங் காணப்பட்டது.
தனது நண்பனின் பிறந்ததின நிகழ்வினையொட்டி குளத்திற்கருகே ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தின் பின்னர் 14 பேர் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தனர். இவ்வேளை இவர் குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கியுள்ளார். அதையடுத்து பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் சடலம் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.