நேபாளத்தில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3218 ஐத் தாண்டியுள்ளது.
மேலும் நிலநடுக்கம் எவரெஸ்ட் மலையில் ஏற்படுத்திய பனிச்சரிவுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஓராண்டுக்கு முன்னர் இங்கு ஏற்பட்ட பனிச்சரிவுகளில் 16 மலையேறி வழிகாட்டிகள் பலியானமை இங்கு நினைவுகூரத்தக்கது.
காத்மண்டுவில் குறைந்தது ஐந்து இடங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு அருகே, தரைமட்டமாகிக் கிடக்கின்ற உள்ளூர் வரி அலுவலகத்துக்குள் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலகுவில் சென்றடையமுடியாத பல பிரதேசங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் நிலநடுக்கத்தின் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று ஊகிக்கப்படுகின்றது.
நகரமத்தியில் உள்ள திறந்தவெளி மைதானம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரங்களுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
குடியிருப்புகளை இழந்தவர்களும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அஞ்சியவர்களுமாக பெருமளவிலானவர்கள், குளிரையும் ஈரத்தையும் தாங்கிக்கொண்டு இரவுப்பொழுதை வெளியிலேயே கழித்துள்ளனர்.
இயற்கைப் பேரழிவால் திணறுகின்ற நேபாள அரசுக்கு உதவுவதற்கு வெளிநாட்டுத் தலைவர்களுடன் தொண்டுநிறுவனங்களும் முன்வந்துள்ளன.
இலகுவில் செல்லமுடியாத பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக இந்தியா ஹெலிகொப்டர்களை வழங்கி உதவியுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உதவி அணியில் இணைந்துள்ளன. செஞ்சிலுவை சங்கம், ஒக்ஸ்பாம், எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கிறிஸ்டியன் எய்ட் ஆகிய நிறுவனங்களும் அங்கு களத்தில் உள்ளன.
அவசர நிலைமைகள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பில் நேபாளத்தில் ஏற்கனவே தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்ததாக ஒக்ஸ்போம் தொண்டுநிறுவனத்தின் மனிதநேயப் பணிகளுக்கான இயக்குநர் ஜேன் கொக்கிங் தெரிவித்தார்.ந