மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
சரியாக 33 வருடங்களுக்குப் பின்னர் (ஏப்ரல் 29) இன்றைய பொழுது எமக்காகவே விடிந்திருக்கின்றது!
இன்ஷா அல்லாஹ், நாளைய பொழுதும் நமக்காகவே விடியும்!
1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டேயில் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது, என்றாலும் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் அன்றைய ஜனாதிபதி ஜெ ஆர் ஜெயவர்த்தனாவின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பினால் பறிக்கப் பட்டிருந்தது.
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி வரைமுறைகள் இல்லாத அதிகாரங்களை தன்னகத்தே கொண்டிருந்தார், அவருக்குப்பின் வந்த எல்லா ஜனாதிபதிகளும் அந்த அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து மக்களவைக்கு அதிகாரங்களை வழங்குவதாக வாக்குருதியளித்திருந்தாலும் அதனை நிறைவேற்றவில்லை.
புதிய பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையும், நிறைவேற்று அதிகார அரசியல் முறையும், இந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதலாளித்துவ பொருளாதார முறையும் இந்த நாட்டு அரசியலை மிகப்பெரிய சூதாட்டமாக ஊழல் மோசடியின், நிர்வாக சீர்கேடுகளின் அதிகாரத் துஷ்பிரயோகத்தின் உச்சத்துக்கே இட்டுச் சென்றிருந்தது.
2015 ஏப்ரல் 29 பொழுது புலர்வதற்குள் ஜனாதிபதி மைத்திரி, முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ உற்பட சமய மற்றும் சிவில் சமூக தலைமைத்துவங்கள் இந்த நாட்டின் ஆட்சி முறையில் உன்னதமான புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
அரசியலமைப்பின் மீதான19 ஆவது சீர்திருத்தம் 212 உறுப்பினர்களின் சம்மதத்துடன் அங்கீகாரம் பெற்றமை இந்த நாட்டு மக்களுக்கு மிகப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
நன்கு ஆராயப்பட்ட பின்னர் சகல தரப்புக்களின் குறிப்பாக சிறுபான்மை சமூகங்களினதும் சம்மதத்தோடு கிட்டிய எதிர்காலத்தில் 20 ஆவது திருத்தம் ஊடாக அடுத்த பாராளுமனறத்திலேனும் தேர்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படுதல் அடுத்த கட்ட முற்போக்கு நகர்வாக இருக்க வேண்டும்.
2010 ஆம் ஆண்டு சமூக மற்றும் தேசிய நலன்களை கருத்தில் எடுக்காது 18 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியது மாத்திரமன்றி, இறுதி சந்தர்ப்பம் வரை மைத்ரி யுகத்திற்கு வழிவிடாது மதில்மேல் பூனைகளாய் இருந்து விட்டு இறுதிக்கட்ட பாய்ச்சலை மேற்கொண்ட முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும், பிராயச்சித்தம் பெறுவதற்குரிய சந்தர்ப்பம் இதன் மூலம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.