‘இந்திய வர்த்தக கண்காட்சி’ கொழும்பில் மே 7ஆம் திகதி ஆரம்பமாகின்றது!

ந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற பல்வகைப்பட்ட வர்த்தக வாய்ப்புக்களை காண்பிக்கும் விதத்திலமைந்த, ஒன்பதாவது வருடாந்த ‘இந்திய வர்த்தக கண்காட்சி’ (Indian Trade Fair) கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் 2015 மே மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

MP இவென்ட்ஸ் லங்கா மற்றும் இந்தியாவின் PHD வர்த்தக, கைத்தொழில் சம்மேளனம் ஆகியவற்றினால் கூட்டாக ஏற்பாடு செய்யப்படும் இக் கண்காட்சியானது, மே 09ஆம் திகதி சனிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும். அதேவேளை இலங்கையின் தொழில் முயற்சியாளர்களோடு பங்காளித்துவத்தை கட்டியெழுப்பும் எதிர்பார்ப்புடன் கிட்டத்தட்ட 80 இந்திய காட்சிப்படுத்துனர்கள் தத்தமது உற்பத்திப் பொருட்களை இங்கு காட்சிப்படுத்தவுள்ளனர். 

‘இந்திய வர்த்தக கண்காட்சி 2015’ ஆனது, இந்திய உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கான கொள்வனவாளர்களும் விற்பனையாளர்களும் ஒருவரையொருவர் சந்தித்துத்துக் கொள்ளும் ஒரு மிகப் பெரிய களமாக வர்ணிக்கப்படுகின்றது. அத்துடன், இந்தியர்கள் இலங்கைச் சந்தையில் உள்ளவற்றை கண்டறிவதற்கு மிகப் பொருத்தமான ‘வணிகத்திலிருந்து - வணிகத்துக்கு’ (B2B) அடிப்படையிலான தளமேடையாகவும் காணப்படுகின்றது. 

“குறிப்பாக இந்திய வர்த்தகர்கள் தமது பல்வேறு வகைககளிலான உற்பத்திகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். அதன்மூலம் இலங்கையில் புதிய வழிமுறையிலான வர்த்தகத்தை ஆரம்பித்து வைக்கக் கூடியதாக இருக்கும். அதேவேளை முகவர்கள், விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், தொழில்முயற்சியாளர்கள், வர்த்தக சம்மேளனங்கள், ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் நேரடி சந்தைப்படுத்தலில் ஈடுபடும் கம்பனிகள் போன்ற தரப்பினர்களுடன் அவர்கள் இடைமுக உரையாடலை மேற்கொள்வதற்கும் இக் கண்காட்சி வசதியளிக்கின்றது. நாம் உண்மையிலேயே எமது உறுப்புரிமையுடன் இருபக்க வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம்” என்று இந்தியாவின் PHD வர்த்தக, கைத்தொழில் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகமான சவுரப் சன்யால் தெரிவித்தார். 

‘இந்திய வர்த்தக கண்காட்சி 2015’ இன் பிரதான நோக்கம் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக உறவுகளை அபிவிருத்தி செய்வதும், இந்திய கைத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு இலங்கையில் சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதும் ஆகும். அதேநேரத்தில், காட்சிப்படுத்தல்கள்; ஃ நேரடி உரையாடல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் புதிய வியாபாரத்தை உருவாக்கிக் கொள்ளவும் காட்சிப்படுத்துனர்களுக்கு இக் கண்காட்சி உதவி புரியும். அதுமட்டுமன்றி இத் துறையிலுள்ள உயர்மட்ட தொழில்வாண்மையாளர்களை கவரும் ஒருங்கிணைந்த முன்முயற்சியை பலப்படுத்துவதுடன், அதன் காரணமாக தொழில்நுட்பம், குவிமையப்படுத்தல் மற்றும் பார்வையாளர்களை மேம்படுத்திக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். 

“இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வியாபாரிகளும் கைத்தொழில்துறை தொழில்வாண்மையாளர்களும் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கும் தமக்கிடையில் வர்த்தக தொடர்புகளை உருவாக்குவதற்குமான ஒரு தளமேடையை வழங்குவதே இக் கண்காட்சியின் நோக்கமாகும். இந்திய மூலப்பொருட்கள் இலங்கைச் சந்தையில் எப்போதுமே மிக முக்கியமான மூலப்பெருட்களாக இடம்பிடித்துள்ளன. அந்த வகையில் 9ஆவது இந்திய வர்த்தக கண்காட்சியானது இச் சந்தையில் காணப்படுகின்ற பல்வேறு இடைவெளிகளை நிரப்புவதற்கு அவசியமான மிகப் பெரும் வாய்ப்புக்களை வழங்கும்” என்று MP இவென்ட்ஸ் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் எமில் குணசேகர தெரிவித்தார். 

“இவ்வருடம் பல்வேறு வகைப்பட்ட காட்சிப்படுத்துனர்கள் தமது துறைகளை பிரதிநிதித்துவம் செய்து பங்குபற்றுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அந்த வகையில், நிர்மாணம் மற்றும் உட்கட்டமைப்பு, விசைப்பொறிகள், நீர் தூய்மையாக்கல் மற்றும் வடிகட்டல் முறைமை, தீயணைப்பு மற்றும் தற்காப்பு உற்பத்திகள், விவசாயம் மற்றும் பண்ணை உபகரணங்கள், கைத்தொழில்சார் சூடாக்கிகள், ஆய்வுகூட கருவிகள், மருத்துவ உபகரணங்கள், சூழல் மாசடைவதை தடுக்கும் உபகரணங்கள், ரோபோ வடிவிலமைந்த ஆடை கழுவும் முறைமை, பில்டர் பிரெஸ் அச்சுத் தொகுதி மற்றும் பிளேட்ஸ் (தட்டுகள்), வயர் மற்றும் கேபிள்கள், வாகன மானிகள் மற்றும் கண்காணிப்பு கருவிகள், மின்மாற்றிகள், இறப்பர் உற்பத்திகள், நுகர்வோர் இலத்திரனியல் உற்பத்திகள், சமையலறை பாவனை பொருட்கள், தின்பண்டங்கள், துணை உணவுகள், பால் உற்பத்திகள், வாசனைத் திரவியங்கள், புத்தகங்கள் மற்றும் இணைய வெளியீடுகள், ஆய்வுகூட மற்றும் கல்வி பயிற்றுவிப்பாளர் துணைக்கையேடு, தோல் உற்பத்திகள் போன்ற மேலும் பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்குபற்றவுள்ளன” என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

‘இந்திய வர்த்தக கண்காட்சி 2015’ நிகழ்வானது, இந்தியாவைச் சேர்ந்த எதிர்கால கைத்தொழில் துறையாளர்கள் என்ற அடிப்படையில், அந்நாட்டின் நடுத்தர மற்றும் பாரிய அளவிலான கைத்தொழில் நிறுவனங்களின் வர்த்தகர்களில் கூடிய கவனத்தை செலுத்தும். 

இந்த 9ஆவது இந்திய வர்த்தக கண்காட்சியை அடையாளப்படுத்தும் முகமாக இலங்கை வர்த்தக, கைத்தொழில் சம்மேளனமானது MP இவென்ட்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து ‘3ஆவது இந்திய-இலங்கை பொருளாதார கலந்துரையாடல்’ (ICE 3) நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இக் கலந்துரையாடல் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் 2015 மே மாதம் 08ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறும். உள்நாட்டு வர்த்தக பங்காளர்கள் சாத்திய தன்மையுள்ள இந்திய வர்த்தக பங்காளர்களை தேடியறிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்து விடுவதே இக் கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகும். இந்த கலந்துரையாடலின் பல அமர்வுகள் வணிக தந்திரோபாயங்களின் முக்கிய பிரிவுகளை மையமாகக் கொண்டவையாக அமையும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை பல்வேறுபட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளர்கள் பலரும் இந்த அனுபவத்தை மேம்படுத்துவதற்காக கலந்துரையாடலில் இணைந்து கொள்வார்கள். 

இலங்கையிலுள்ள சுயாதீனமான கைத்தொழில் நிறுவனங்கள் ஒன்றுசேரும் புள்ளியாக இலங்கை வர்த்தக, கைத்தொழில் சம்மேளனம் (FCCISL) திகழ்கின்றது. இது, இலங்கையின் வர்த்தகங்கள் தமது போட்டித்தன்மை கூர்மையாக்கிக் கொள்ளவும் அதன் வாயிலாக அவர்களது தேசிய மற்றும் சர்வதேச அடைவுமட்டத்தை மேம்படுத்திக் கொள்ளவும் அவசியமான சக்தியை காலமாற்றத்திற்கேற்ப வழங்கி வலுவூட்டியுள்ளது. நாடளாவிய ரீதியில் 50 இற்கு மேற்பட்ட வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் வணிக அமைப்புக்களின் உறுப்புரிமையை கொண்டுள்ள FCCISL ஆனது, இலங்கையிலுள்ள வர்த்தகங்களுக்கு இடையில் பகிரப்பட்டுள்ள தூரநோக்கிற்கு ஆதரவளிப்பதுடன் 12,500 இற்கும் அதிகமான வர்த்தக பிரிவுகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் உரையாடல்களை மேற்கொள்கின்றது. இச் சம்மேளனமானது உற்பத்தியாக்கல், விநியோக வணிகம் மற்றும் சேவைகள் போன்ற துறைகளைச் சேர்ந்த மிகப் பெரிய, நடுத்தர, சிறிய அளவிலான கைத்தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய பரந்துபட்ட அங்கத்தவர்களை கொண்டியங்குகின்றது. 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை வர்த்தக, கைத்தொழில் சம்மேளனம் இலங்கையின் வர்த்தக துறையில் மிகப் பெரியதும் அதிக நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்வதுமான உயர் வணிக அமைப்பாக காணப்படுகின்றது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்து, அதன்மூலம் 1.3 பில்லியன் நுகர்வோருக்கு தீர்வையற்ற வசதியை வழங்கி வருகின்ற ஒரேயொரு நாடு என்ற சாதனையை இலங்கை பெற்றுள்ளது. 1998 டிசம்பர் 28ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு 2000 ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது, இருபக்க வணிகம் மற்றும் முதலீடுகள் என்பவற்றின் ஊடாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்காக கொண்டதாகும்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -