நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் 2200-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
பெரிதும் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா அதிக அளவில் உதவி வருகிறது. இன்று 13 விமானப்படை விமானத்தை மீட்பு பணியில் ஈடுபட நேபாளத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும், மருத்துவ உதவிகள் செய்ய தயாராகி வருகிறது.
இந்நிலையில் நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பா.ஜனதா கூட்டணியின் முக்கிய கட்சியாக கருதப்படும் சிவசேனா கட்சி, தனது எம்.பி.க்களின் ஒருமாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் ‘‘அனைத்து சிவசேனா எம்.பி.க்களும் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறார்கள். இது நேபாள நிலநடுக்க நிவாரணத்திற்காக அளிக்கப்படுகிறது.
இந்த நிதி நேபாளம் அல்லது இந்தியாவிற்காக பயன்படுத்தப்படும். நாம் அனைவரும் ஒன்று. நேபாள நிலநடுக்க கொடூரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைதி ஏற்படவும், அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருப்பதற்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.ந