ந.நவோஜ்-
வறுமையைக் காரணங்காட்டி பிள்ளைகளின் கல்விக்குத் துரோகம் செய்யாதீர்கள். அவ்வாறு யாரும் செய்வீர்களானால் அந்தப் பிள்ளைக்கு பெற்றோர்கள் செய்யும் மிகப் பாரிய துரோகமாகும் என சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி வலயத்திலுள்ள பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் மூன்றாவது சாதனையாளர் பாராட்டு விழா வித்தியாலய முன்றலில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
பிள்ளைகளுக்கு பெற்றோர்களாகிய நாம் கொடுக்கும் சொத்து கல்வியேயாகும். வறுமையைக் காரணங்காட்டி எக்காரணங் கொண்டும் பிள்ளைகளின் கல்விக்கு தடை விதித்திடும் பெற்றோர்களாக எவரும் இருக்க வேண்டாம். வரலாற்றில் பெரிய அறிஞர்களாக திகழ்ந்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் வறுமை இருந்தது. அந்த வறுமையை தான் அவர்களைக் கல்வியில் பெரிய அறிஞர்களாக மாற்றியது.
தனது பிள்ளை கல்வி பயிலும் பாடசாலையுடன் அதிகம் தொடர்பு கொண்ட பெற்றோர்கள் பிள்ளைகள் நிச்சயம் கல்வியில் சிறந்து விளங்கும். அதனால் பாடசாலையுடன் அதிகம் தொடர்பு கொண்ட பெற்றோர்களாக ஒவ்வொரு பெற்றோரும் தங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் தங்கள் பிள்ளைகள் கல்வியில் வெற்றியாளர்களாக நிச்சயம் திகழ்வார்கள் என்றும் தெரிவித்தார்.
வித்தியாலய அதிபர் எம்.யூ.எம்.இஸ்மாயில் தலைமையில் இட்மபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி, ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.மீராசாஹீப், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை நிருவாகத்தினால் அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலையில் சிறந்து விளங்கிய மாணவர்களும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும், பாடசாலைக்கு தவறாமல் தனது பிள்ளைகளை அனுப்பிய பெற்றோரும் அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.