இலங்கையின் தலைசிறந்த கல்விமான்களில் ஒருவரும், கடல்கடந்த நாடுகளில் கூட நன்கறியப்பட்ட இலக்கிய ஆய்வாளருமான இனிய நண்பர் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களின் மறைவு இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பரப்பில் பாரிய இடைவெளியை தோற்றுவித்துள்ளதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அவரது இலக்கியத் தேடுதல் முயற்சிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருந்த தருவாயில் அல்லாஹ்வின் நாட்டப்படி அன்னார் இவ்வுலக வாழ்வை நீத்து, நிலையான மறுமை வாழ்வுக்கு பயணித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் மறைவையிட்டு அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் மரணித்த செய்தி அதிகாலையிலேயே எட்டிய போது நான் அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அடைந்தேன். இரண்டு தினங்களுக்கு முன்னர் இறுதியாக அவர் என்னுடன் உரையாடியது னைவுக்கு வருகிறது. அப்பொழுது, தாம் அடுத்து வெளியிடவுள்ள சுவடியாற்றுப்படையின் 5ஆவது பகுதியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறிய அவர், 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கூட இலங்கையில் 3400 க்கும் அதிகமான புலவர்களும், மார்க்க அறிஞர்களும் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கும், அரபுத் தமிழ் இலக்கியத்திற்கும் அளப்பரிய பங்காற்றியிருப்பதாக கூறியதோடு, அவர்களின் அரிதான ஏடுகளையும், கையெழுத்துச் சுவடிகளையும், அச்சியற்றப்பட்ட பிரதிகளையும் தேடி, அவற்றிலிருந்து உரிய தகவல்களை திரட்டுவதற்காக தாம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் சொன்னார்.
அந்தப் பணியை சிறப்பாக முடித்து வைப்பதில் அவருக்கிருந்த அபார ஈடுபாட்டை நான் புரிந்து கொண்டேன். தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் போன்றவற்றில் கூட இவ்வாறானதோர் இலக்கியத் தேடல் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
நண்பர் எஸ்.எச்.எம்.ஜெமீல் எமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களோடும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததோடு, அவரது அயராத முயற்சியால் உருவான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியும் அதிக ஈடுபாடு காட்டி வந்தார். அந்த பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கும் அன்னார் தாம் சேகரித்து வைத்திருந்த ஏராளமான நூல்களை அன்பளிப்புச் செய்திருந்தார்.
அதன் கவுன்சில் உறுப்பினர் ஒருவராக இருந்து அவர் ஆற்றிய சேவையை பலரும் வியந்து கூறுவதுண்டு. சில இடையூறுகளுக்கு மத்தியிலும் இம்முறையும் தென்கிழக்கு பல்கலைக்கழக கவுன்சிலுக்கு அவர் என்னால் சிபாரிசு செய்யப்பட்டு உள்வாங்கப்பட்டிருந்தார்.
கல்வியியலாளராக, இலக்கிய விற்பன்னராக, ஆய்வாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக, அமைச்சுச் செயலாளராக, பல்கலைக்கழக பதிவாளராக மற்றும் பல்வேறு பரிமாணங்களின் அவரது பங்களிப்பு நோக்கப்படுகின்றது. தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதுவதிலும், பேசுவதிலும் அவர் வல்லவர். அவரது திறமைக்குச் சான்றாக பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
தமது ஆசானான அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களோடு அவருக்கிருந்த பற்றின் வெளிப்பாடாக அவரைப் பற்றி எழுதியதும், பேசிதும் மட்டுமல்ல, அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களின் பெயரில் அவர் ஓர் அமைப்பையே முன்னின்று நடாத்தினார்.
நண்பர் எஸ்.எச்.எம்.ஜெமீல் எப்பொழுதும் புன்முறுவல் பூத்தவராகவும், எல்லோரோடும் இனிமையாக பழகுபவராவும், இறையச்சம் உள்ளவராகவும் இருந்தார். அவரது பிரிவினால் துயருறும் மனைவிக்கும், மகனுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற மேலான சுவன வாழ்வை வழங்க பிரார்த்திப்போமாக!
ரவூப் ஹக்கீம் (பா.உ)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - தலைவர்
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்