சமட் அஸ்ரப்-
சாய்ந்தமருதூரை பிறப்பிடமாகக் கொண்ட கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் தனது 75ஆவது வயதில் இன்று காலை தெஹிவளையில் காலமானார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஊன்.
ஒரு அறிவு நூலகம் மூடப் பட்டு விட்டது,
ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் நின்றுவிட்டது,
ஒரு வரலாற்று சுவடிக்கூடம் முடங்கிவிட்டது,
ஒரு காவியம் முற்றுப்புள்ளி பெற்றுவிட்டது,
ஒரு நல்ல உள்ளம் உறங்கிவிட்டது!
இவரைப்போன்ற கல்விமான்கள் இனியும் உருவாகவேண்டும்.
கல்முனை பாத்திமாக் கல்லூரி, கொழும்பு சாஹிராக் கல்லூரி பழைய மாணவராவார்.
ஆங்கில மொழி முலம் கல்விகற்ற எஸ்.எச்.எம் ஜெமீல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில பொருளியல் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் கொழும்பு பல்கலைககழகத்தில் முதுமானிப்பட்டம் பெற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டத்தினையும் பெற்றார். ஐக்கிய இராச்சியம் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்றைசார் மற்றும் பல்கலைகழக நிருவாகம் தொடர்பான பயிற்சியையும் பெற்றுக் கொண்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில போதானாசிரியர். கல்லூரி ஆசிரியர், அதிபர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபர், கல்வித் திணைக்களத்தில் உயர் அதிகாரி, பரீட்சைத் திணைக்கள உதவி ஆணையாளர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபர், இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளர், முஸ்லீம் சமய கலாச்சார இராஜங்க அமைச்சின் செயலாளர், கல்வி கலாச்சார அமைச்சின் மேலதிகச் செயலாளர், அதனைத் தொடர்ந்து அவ்வமைச்சின் ஆலோசகர், என பல்வேறு உயர் பதவிகளை ஜனாப் எஸ்.எச்.எம் ஜெமீல் வகித்தார். அவர் 2000ஆம் நவம்பர் 20ஆம் திகதி ஓய்வு பெற்றார்.
அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு சவுதி அரேபியாபின் றியாத் சர்வதேச பாடசாலையில் 4 வருடம் அதிபராகக் கடமையாற்றினார். அதன் பின் கொழும்பு கிரசென்ட் சர்வதேச பாடசாலையிலும் முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் மார்கா ஆய்வு நிறுவனம் என்பவற்றில் ஆலோசகராகப் பணிபுரிந்தார்.
இவர் எழுதிய நூல்கள் ஏ.எம்.ஏ அசீஸ் கல்விச் சிந்தனை, சேர் ராசீக் பரீத் அவர்களின் கல்விப் பணி, சாய்ந்தமருது ஜ-ம்ஆப் பள்ளிவாசல் வரலாறு, கல்விச் சிந்தனைகள் என 27 நூல்கள் வெளியிட்டுள்ளர். இறுதியாக 500 பக்கம் கொண்ட அவர் பற்றிய கிராமத்து சிறுவனின் பயணம் என்ற நூலை வெளியிட்டுள்ளர்.(ந)