பொதுத் தேர்தலுக்கு தயாராகுங்கள் என்ற சமிஞ்சைகளை அரசியல் கட்சிகள் தமது ஆதரவாளர்கள் மத்தியில் விடுத்து வருகின்றன.
புதிய அரசின் நூறுநாள் வேலைத்திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிதாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பல கட்சிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகள் தேர்தல் குறித்து தமது கட்சி ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி அவர்களின் ஆலோசனைகயiயும் கேட்கின்றனர்.
ஐக்கிய தேசியக்கட்சியினர் தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை , பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் ஆகியோரை அண்மையில் அலரி மாளிகைக்கு அழைத்து தேர்தல் தொடர்பாக பேசியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் போது திடீரென பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அமைப்பது மற்றும் கடந்த காலங்களில் கட்சி எதிர்நோக்கிய சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. எந்த நேரத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் எனவும் அவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஆட்சியை ஐக்கிய தேசியக்கட்சியே கைப்பற்றும் என்பதில் சந்தேகமே கிடையாது எனவும் அந்த அமைப்பாளர் கூறினார்.
புதிதாக நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி அதிக ஆசனங்களை பெறும் எனவும் அவ்வாறு கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்வது மாத்திரமின்றி, தேர்தலின் பின்னரும் இப்போது இருப்பதைப் போல தேசிய அரசாங்கமே அமைக்கப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி அண்மையில் தெரிவித்திருந்தது.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களின் படி தாமே அரசை அமைக்க வேண்டும் எனவும், தேசிய அரசாங்கத்தைப்பற்றி அலட்டிக்கொள்ளாத மாதிரி அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு வருடங்கள் மீதியாக இருக்கும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான படிவத்தில் கையொப்பமிட்டார். இவ்வாறு இரண்டு வருடங்கள் இருக்கும் போது அவசர அவசரமாக தேர்தலை நடத்தி ஆட்சியை இன்னும் எட்டு வருடங்களுக்கு தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மஹிந்தவின் நப்பாசை அவரது புதல்வர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கே விருப்பமில்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எனவே, திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டதுடன், ஆட்சி எப்படிக் கைமாறியது என்பதும் எல்லோரும் அறிந்த விடயமாகவே இருக்கிறது. மன்னராட்சியிலிருந்து நல்லாட்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த இந்த பயணத்தில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வகிப்பது மாத்திரமின்றி, அமைச்சர்களாகவும் இருந்து வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் படி'நூறுநாள் வேலைத்திட்டம்' கடந்த வாரத்துடன் நிறைவடைந்துள்ளன.
இவ்வாறு நூறுநாள் நிறைவின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றினார். இதன்போது தான் பொறுப்பேற்ற நாளில் இருந்து நாட்டில் பல வாழும் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், அரசியல், பொருளாதாரம் ரீதியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச ரீதியாகவும் நல்லுறவை ஏற்படுத்தியுள்ளோம்.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு சரியான நேரத்தில் நல்ல தீர்மானத்தை மேற்கொள்வதுடன், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
நுறுநாள் வேலைத்திட்டம் நிறைவடைந்த தருணத்தில் கடந்த வாரம் அரசியலில் முக்கிய திருப்பு முனைகள் ஏற்பட்டது. மன்னர் ஆட்சியால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களின் சந்தோஷ நாளாகவும் கடந்த வாரம் காணப்பட்டது. பொருளாதாரா அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதி மோசடிப்பிரிவினரால் சைது செய்யப்பட்டுள்ளதுடன், முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபே ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்.
இவ்வாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறித்த ஆணைக்குழுவினரால் அழைக்கப்பட்டதானது தவறாகும் என பொதுபலசேன உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். குறித்த ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடத்தக்கூடாது என நீதிமன்றம் அறிவித்ததையும் பொருற்படுத்தாமல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது நீதிமன்ற உத்தரவை மீறும் நடவடிக்கையாகும். இவ்வாறு நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 27பேருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இவர்கள் மே மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபக்ஷ குடும்பம் எதுவிதமான ஊpல்களிலும் ஈடுபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களில் குறிப்பிட்டடிருக்கிறார். இதேவேளை, கொஞ்ச காலத்திற்கு பஷில் ராஜபக்ஷவை இலங்கைக்கு வரவேண்டாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியிருக்கிறார். எனினும் தான் எதுவிதமான தவறும் செய்யவில்லை எனவும், அவ்வாறு தான் வெளிநாட்டில் தங்கியிருந்தால் அண்ணணுக்கு (முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு) களங்கத்தை ஏற்படுத்தும் என பஷில் வந்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் கூடிய அக்கறையுடன் செயற்பட்டவர் எனவும் அதனால் அவரைத் தண்டித்தால் தீக்குழித்து விடுவதாகவும் பொதுபலசேன அமைப்பின் செயலாளரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் கூட்டாளியுமான ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.
திவிநெகும திணைக்களத்தில் நிதிமோசடி செய்துவிட்டு பஷில் நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக பல ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தன. ஆவர் இலங்கைக்கு வருகை தராவிட்டால் சர்வதேச பொலீஸின் உதவியை நாடி பஷலை கைது செய்வதாகவும் அரசு தெரிவித்தது.
எனினும் எல்லோரும் எதிர்பார்க்காத வகையில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வருகை தந்தார். எனவே, அவர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என நிதிமன்ற விசாரணைகள் ஊடாக தெரியவரும்.
அதுபோல உண்மையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ குற்றமற்றவர் என்றால் அதனை நிரூபித்துவிட்டு வேலையைப் பார்க்கலாமே. அதைவிடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள நிம்மதியான சூழ்நிலைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு நடந்துகொள்வது மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை சம்பாதிப்பது மட்டுமே மிச்சமாகும்.
இலஞ்ச ஆணைக்குழுவிற்கு முன்னால் நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மையைக் குறிக்கும் நிறங்களற்ற பழைய தேசியக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இருந்துள்ளனர். இந்த நடவடிக்கை நாட்டில் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளமாகவே கருத வேண்டியுள்ளது. இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் இது ஒரு திட்டமிட்ட சதி நடவடிக்கையென முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான டளஸ் அலகப்பெரும குறிப்பிட்டிருக்கிறார்.
தாம் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டதாகவும், அதில் இவ்வாறு பழைய தேசியக்கொடி பயன்படுத்தப்பட்டதாகவும். இதனால் சிறுபான்மையினரிடம் மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே, இனவாதங்களுக்கு மலர் மாலையிடுவதும், இனங்களுக்கெதிராக கொடி காட்டுவதும், வீதியில் இறங்கிப் போராடுவதும் ஆசியாவில் இது ஒன்றும் பெரிய ஆச்சரியமான விடயமல்ல. இதனால் கடைசியில் கிடைப்பது அவமானங்கள் மட்டுமே.
இலங்கையைப் பொறுத்தவரை தற்போது அரசியலில் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதூங்க அணி, மஹிந்த ராஜபக்ஷ அணி என பிரதானமாக பிரிந்து நிற்கும் அணிகளோடு சிறிய கட்சிகள் கிளைகளாகவும் கோர்த்து நிற்கின்றன.
ஆகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்துவரும் நாட்களில் சரியான திசைகளில் காய்களை நகர்த்த வேண்டும். அப்போதுதான் நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்க முடியும். இன்றேல் தருணம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் இனவாத சக்திகள் மீண்டும் தலைதூக்கும் நிலை வரலாம்.
ரஸீன் ரஸ்மின்-
ரஸீன் ரஸ்மின்-