சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி மன்றக்கோரிக்கை நியாயமானதே!

கல்முனை சமீம்-
ல்முனை மாநகர சபைக்குட்பட்ட மிக பழமை வாய்ந்த ஒரு கிராமமாக இருந்து இன்று ஒரு வர்த்தக மறுமலர்ச்சி பெற்ற ஒரு நகரமாக வளர்ந்து நிற்கும் சாய்ந்தமருது பிரதேசத்தினை கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து ஒரு தனியான உள்ளுராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துமாறு அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சாய்ந்தமருது மக்களின் இக்கோரிக்கையானது சில அரசியல் பிரமுகர்களின் ஏமாற்றுப் பேச்சு, மழுப்பல், கதை அழத்தல் என்பவற்றுக்கு அப்பால் அம்மக்களின் தொடர் நடவடிக்கையினால் வழுப்பெற்று வருகின்றது.

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையானது சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகம் வழங்கப்பட்ட காலத்திலிருந்தே இற்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பாகவே கருக்கட்டிய ஒரு கோரிக்கையாகும்.

இப்பிரதேச மக்கள் இக்கோரிக்கையினை முன்மொழியும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் யாராவது ஒரு அரசியல்வாதி ஏதாவது ஒரு இனவாத கருத்தினைக்கூறி கல்முனையின் இருப்புக்கு இது ஆபத்தாக முடியும் எனக்கூறி மழுப்பி விடுவதே வழமையாக இருந்து வருகின்றது.

இந்த மழுப்பல் அரசியல்வாதிகளின் கதை எப்படி என்றால் சின்னப் பிள்ளைகளிடம் பேய் வரும் அல்லது வக்கான் வருவான் எனப் பயங்காட்டுகின்ற சிறுபிள்ளைத் தனமான கதை போலவே தென்படுகின்றது.

சாய்ந்தமருதினைப் பொறுத்தவரை கல்முனை நகர சபையானது 2002-04-15ம் திகதி மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டபோதே சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இருந்தபோதிலும் சாய்ந்தமருது மக்கள் அப்போது இக்கோரிக்கையினை மிக அழுத்தம் திருத்தமாக முன்வைத்து அதில் விடாப்பிடியாக நின்று அதனை வென்றெடுக்க தவறிவிட்டனர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

தற்போது சாய்ந்தமருது மக்கள் ஒருமித்த குரலில் இக்கோரிக்கையினை வென்றெடுப்பதற்கு ஒன்றிணைந்திருப்பதானது பாராட்டுக்குரிய முன்மாதிரியாகும்.

இருந்த போதிலும் சாய்ந்தமருது மக்கள் தற்போது விழிப்படைந்து ஒற்றுமைப்பட்டவாறு சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றத்தினை வென்றெடுப்பற்காக கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் டாக்டர்.சிராஸ் மீராசாஹிபுடன் கைகோர்த்து வெளிப்படைத் தன்மையாக செயற்பட்டிருந்ததால் அது ஒரு வரவேற்கத்தக்க முயற்சியாக இருந்திருக்கும்.

ஆயினும் சிராஸ் இதனை சாய்ந்தமருது மக்களுக்கு வென்று கொடுப்பதற்காகவே தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதா உல்லாவுடன் இணைந்து செயற்பட்டார். 

அதாஉல்லாவும் கல்முனை மாநகரத்துக்கு எந்த சேதாரமும் வராமல் சாய்ந்தமருதுடன் சேர்த்து ஏனைய கிராமங்களுக்கும் அதிகாரங்களை வழங்கக்கூடிய உள்ளுராட்சி மன்றங்களை பிரகடனப்படுத்த முயற்சித்தார்.

பழைய கரைவாகு தெற்கு கிராமச்சபை எல்லையினை சாய்ந்தமருது நகர சபையாகவும், கரைவாகு வடக்கு கிராம சபையான மருதமுனையுடன் அண்டிய பகுதிகளை மருதமுனை பிரதேச சபையாகவும், கரைவாகு மேற்கு கிராம சபையான நற்பிட்டிமுனையினை அண்டிய பகுதிகளை தமிழ் பெரும்பான்மை பிரதேச சபையாகவும் பிரகடனப்படுத்த முயற்சித்தார். இந்த பிரிவுகளின் போது கல்முனை பழைய பட்டின சபை எல்லையானது கல்முனை மாநகர சபையாக தொடர்ந்தும் இயங்கும் என்பதே அவரது நிலைப்பாடாகும்.

இந்த உள்ளூராட்சி மன்ற வரைவினை கல்முனை தேர்தல் தொகுதியினை பிரதிநிதித்துவப் படுத்தும் எச்.எம்.எம்.ஹரீஸ் கூட கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு அமைச்சருக்கும் ஒப்புதல் வழங்கியிருந்ததாகக் கூறப்பட்டது. அதாஉல்லாவும், சிராஸ் மீராசாய்வும் இந்த முயற்சியினை அரங்கேற்றியிருந்த காலம் சென்ற ஜனாதிபதி தேர்தல் காலமாகும். 

ஜனவரி 05ம் திகதி இவ் உள்ளுராட்சி மன்றங்களை பிரகடனப் படுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படவிருந்த இறுதித் தருணத்தில் சில பிற்போக்குவாதிகள் மேற்கொண்ட புத்திசாதுரியமற்ற நடவடிக்கையினால் தேர்தல் ஆணையாளர் அதனை தடுத்து நிறுத்தினார் என கூறப்படுகின்றது.

இந்த பொன்னான சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருது மக்கள் அதாஉல்லாவினதும், சிராஸ் மீராசாஹி வினதும் கைகளைப் பலப்படுத்தி அவர்கள் ஊடாகவே இந்த உள்ளுராட்சி மன்றத்தினை வென்றெடுத்திருக்கலாம். அவ்வாறு அவ்விடயம் வெல்லப்பட்டிருந்தால் ஒரு கல்லில் நான்கு (04) மாங்காய்கள் விழுந்திருக்கும்.

மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சராகவிருந்த அதாஉல்லாவின் ஊடாக இந்த உள்ளுராட்சி மன்றம் பெறப்பட்டிருந்தால் அவ் உள்ளுராட்சி மன்றத்திற்கான அனைத்து பௌதீக வளங்களும் கிடைக்கப் பெற்று சாய்ந்தமருது நகர சபையானது அனைத்து வளங்களையும் பெற்று மிளிருகின்ற ஒரு முன்மாதிரியான உள்ளுராட்சி மன்றமாக பரிணமித்திருக்கும். 

இது சாய்ந்தமருது மக்கள் பிழையான அரசியல் தலைமைகள் வழி நடத்தியதனால் விடப்பட்ட ஒரு வரலாற்றுத் தவறாகும்.

ஆனால் ஆச்சரியம் என்னவெனில் அதாஉல்லாவினால் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம் மலர்வது நமது அரசியலுக்குப் பாதகமாக அமையும் என அக்கோரிக்கையினை மழுங்கடிக்கச் செய்த சில அரசியல்வாதிகளும் தற்போது சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றத்தினை வென்றெடுப்பதற்கு பச்சைகொடி காட்டியுள்ளனர்.

இனி ஒருபோதும் கல்முனை மாநகர சபையானது 04 உள்ளுராட்சி மன்றமாக பிரிவதற்கு வாய்ப்பே இல்லை. சாய்ந்தமருது தனியாக பிரிவதினைப் பார்க்கிலும் 04 சபைகளாகப் பிரிவதே ஒரு பொருத்தமான முடிவாகும். சாய்ந்தமருது தனியாகப் பிரிவதனால் கல்முனை மாநகரத்துக்கு பாரிய ஆபத்து ஒன்று உள்ளதாக அரசியலில் கன்றுக்குட்டிகளாகவுள்ள சிலர் கதை விடுகின்றனர். இது ஏமாற்று வித்தையாகும். சாய்ந்தமருது தனியாகப் பிரிவதனால் கல்முனை மாநகரத்துக்கு லாபமே ஒழிய எந்த வகையிலும் நஷ்டம் இல்லை. சுமார் 28 ஆயிரம் மக்களையும், 18 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்டு 17 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சாய்ந்தமருதானது அவர்களை அவர்களே ஆழும் பாக்கியம் பெறுவது காலத்தின் தேவையாகவும் மிக அவசரமானதும், அவசியமானதுமாகும்.

இனியும் தங்களது அரசியல் இருப்பினை குறியாக வைத்துக்கொண்டு சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்ற கோரிக்கையினை மழுங்கடிக்க யாரும் முற்பட்டால் சாய்ந்தமருது மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் தகுந்த பாடத்தினை புகட்டுவதற்கு தயாராகி வருவது தென்படுகின்றது.

ஒரு முழு தேர்தல் தொகுதியும் ஒரு உள்ளுராட்சி மன்றமாக இருந்து ஒரு மாநகர முதல்வர் நிர்வாகம் செய்வதைவிட அது நான்கு சபையாகப் பிரிந்து ஒரு முதல்வரும், ஒரு நகர பிதாவும் இரண்டு தவிசாளர்களும் நிர்வாகம் நடத்துவது எத்தனை இலகுவானதும், சீரானதாகவும் இருக்கும் என்பதை மாத்திரம் கருத்தில் எடுத்து கொள்வோமாக இருந்தால் இதன் பல நன்மைகளை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.

எனவே கல்முனை மாநகர சபைக்குள் வாழும் அனைத்து இன மக்களும் சாய்ந்தமருது மக்களின் மிக நீண்டகால இக்கோரிக்கையினை வென்றெடுப்பதற்கு ஒத்துழைப்பதுடன், அதற்காகப் பிரார்த்திக்க வேண்டும்.

இனிவரும் காலங்களிலாவது மக்களை பீதிப்படுத்தி ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியினை மழுங்கடிக்கச் செய்யும் காரியங்களில் இருந்து அரசியல்வாதிகள் விலகி நிற்பது காலத்தின் கட்டாயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -