ஜெமீல் அவர்களது திடீர் மறைவு: அனுதாபச் செய்திகள்

மர்ஹூம் ஜெமீலுக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போமாக.அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் 

இக்பால் அலி-

இலங்கையின் பிரபல ஆய்வறிஞரும் முன்னாள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் செயலாளருமான எஸ். எச். எம். ஜெமீல் அவர்களின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் கல்வியுலகிற்கும் பெரும் பேரிழப்பாகும் என்று முஸ்லிம் சமய காலசாரம் மற்றும் தபால்  துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.

மறைந்த எஸ். எச். எம் ஜெமீலின் மறைவையொட்டி அமைச்சர் ஹலீம் விடுத்முள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

இவர் பல்வேறு விதந்துரைக்கத்தக்க ஆய்வு இலக்கிய முயற்சிகளுடன்  கல்வி வளர்ச்சிக்காகவும் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார்.

இவர் கல்முனை சாஹிராக் கல்லூரியின் அதிபராகவும் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் தலைவராகவும் கிழக்குப் பல்லைக்கழகத்தின் பதிவாளராகவும், முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் செயலாளராகவும் கடைசியாக தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் வருகை தரும் விரிவுரையாளராகக் கடமையாற்றியவர்.

பன்னூலாசிரியரான இவர் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் அவரது உள்ளார்ந்த ஆற்றல் முழுவதையும் வெளிக்கொணரும் வகையில் கலை இலக்கியவாதிகளை வாழும் போதே வாழ்த்தப்படல் வேண்டும் என்ற தன்மைக்கு ஏற்ப அவர்களை பாராட்டி பட்டம் வழங்கி கௌரவித்தமை, மாவட்ட ரீதியாக முஸ்லிம் வரலாற்றைத் தொகுத்து நூலுருவாக்கத்துக்காக ஆற்றிய பணிகள் அவரிடம் ஆழப்பதிந்து அகன்று விரிந்து காணப்பட்ட சமுக நோக்கேயாகும். இவை போல ஏராளமான பணிகள் இவர் ஆற்றுயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பிரியால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் ஏனைய நலன்விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அஸ்லம் எஸ்.மௌலானா-

நாடு போற்றும் கல்விமான் அல்ஹாஜ்.எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களது திடீர் மறைவானது முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, பண்பாடு மற்றும் அரசியல் துறைகளுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கல்விமான் ஜெமீல் அவர்கள் கல்முனை சாஹிரா கல்லூரியில் அதிபராக பணியாற்றிய காலம் தொடக்கம் அவரது உயிர் பிரியும் இறுதித் தருவாய் வரை முஸ்லிம் சமூகத்தின் உயர்ச்சிக்காக தனது சிந்தனைகளையும் எழுத்தாளுமையையும் அர்ப்பணிப்புடன் பயன்படுத்தி வந்துள்ளார்.

அவர் கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். ஆனால் அவர் தனது பதவி அந்தஸ்த்துடன் நின்று விடாது அவற்றின் மூலம் சமூகத்திற்காக அதிகபட்ச சேவைகளை செய்து வந்துள்ளார் என்பதை யாவரும் அறிவோம்.

அது மட்டுமல்லாமல் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் தலை நகர் கொழும்பில் இருந்து கொண்டு இந்த நாட்டின் தேசிய ஐக்கியத்திற்காகவும் இனங்களிடேயான ஒற்றுமைக்காகவும் தொண்டாற்றி வந்துள்ளார். குறிப்பாக முஸ்லிம் சமூகமானது தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களுடன் புரிந்துணர்வுடன் பயணிப்பதற்கு ஓர் இணைப்பு பாலமாகவும் அவர் திகழ்ந்துள்ளார். 

இத்தகைய ஒரு பண்பாடு மிக்க மூத்த அறிஞர் எம்மை விட்டுப் பிரிந்து செல்வதானது என்றும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களுடன் ஆறுதல் தெரிவிப்பதுடன் எல்லாம் வல்ல இறைவன் அவரது சமூகப் பணிகளை பொருந்திக் கொண்டு மேலான சுவர்க்கத்தை பரிசாக வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்

முதுபெரும் கல்விமானும் பன்னூலாசிரியரும், சமூகப் பணியாளரும், சிறந்த ஆய்வாளருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களது திடீர் மறைவு நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கல்வித்துறையில் அகன்றதும் ஆழமானதுமான அறிவையும் அனுபவத்தையும் பெற்றிருந்த அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சிக்காக அரும்பங்காற்றி இருக்கிறார். கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி உருவாக்கிய அரும்புதல்வர்களில் ஒருவரான இவர், ஆசிரியராக, அதிபராக, கல்வி நிர்வாகியாக, பல்கலைக்கழக பதிவாளராக மட்டுமன்றி முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சின் செயலாளராகவும் இருந்து ஆற்றியுள்ள பணிகள் அளப்பரியது.

பணிவுமிகு குணாம்சங்களைக் கொண்ட இவர், ஊடகத்துறையோடு மிக நெருங்கி செயற்பட்ட ஒருவராவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கெளரவ ஆலோசகர்களில் ஒருவராக இருந்து எமது அமைப்பின் வளர்ச்சிக்கு பல வகைகளில் ஆலோசனைகளை வழங்கினார்.

கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வளர்ச்சியில் பங்களிப்புச் செய்த இவர், சில தினங்களுக்கு முன்னர் தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் அங்கத்தவராக மீண்டும் நியமனம் பெற்றிருந்தார்.

மர்ஹூம் ஏ.எம்.ஏ. அஸீஸின் மாணவரான இவர், அவரின் சிந்தனைகளை நூலுருப்படுத்தி அஸீஸ் மன்றத்தினூடாக வெளியிடுவதில் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்களுடைய வரலாற்றை தொகுத்து வெளியிடுவதில் இவர் முக்கிய பங்களிப்பைச் செய்தார். அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக இருந்தபோது அந்த அமைச்சின் செயலாளராக இருந்து, 11 மாவட்டங்களில் முஸ்லிம்களின் வரலாற்றை நூலுருப்படுத்துவதில் மர்ஹூம் ஜெமீல் செய்துள்ள பங்களிப்பு இந்த நாட்டின் முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்த மேற்கொண்ட சிறப்பான பணியாக சுட்டிக்காட்டலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -