கூடு விட்டு கூடு பாய்வது, ஆட்டின் உடலுக்குள் மனிதனின் ஆவி நுழைவது போன்ற காட்சிகளை விட்டாலாச்சார்யா தொடங்கி ஸ்டீவன் ஸ்பேல்பர்க் வரையில் பல திரையுலக ஜாம்பவான்கள் நமக்கு சினிமாக்களின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர்.
பி.சி.சர்க்கார் உள்ளிட்ட சில மந்திரக்கலை நிபுணர்கள், தாஜ் மஹாலை மறையச்செய்வது, காரை காணாமல் போக வைப்பது போன்றவற்றை நமது காட்சிப்பிழை மற்றும் ஒளியின் மாயாஜால வேலைகள் மூலம் நிகழ்த்தி நம்மை நம்ப வைத்துள்ளனர்.
ஆனால், ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு விசேட கண்ணாடியை அணிவதன் மூலம் எதிரே இருக்கும் நபரை காணாமல் போகச் செய்து, வெறும் ஒளியின் நிழற்கற்றையாக்கி நிற்கவைத்து சாதனை படைத்துள்ளனர்.
வி.ஆர். (Virtual Reality) மென்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் உடலுக்கு நேரே ஒரு கேமராவை வைத்து படம்பிடித்து, புரொஜக்டர் மூலம் எதிர்திசையில் அவரது விம்பத்தை விழச்செய்வது இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும்.
இதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு கண்ணாடியை அணிந்து பார்த்தபோது, உருவம் முழுவதுமாக மறைந்து வெறும் ஒளிக்கற்றையாக தோன்றியது.
இதைப்போன்ற நிகழ்வின்போது, மறைக்கப்படும் நபரின் வெட்கம், நாணம் போன்ற தனிஇயல்புகளில் பெரும் மாற்றம் நிகழ்வதாகவும் இந்த ஆய்வை செயல்படுத்திப் பார்த்தபோது தெரியவந்துள்ளது.
இவ்வகை ஒளிக்கற்றையாக தோன்றும் பிரதி விம்பத்துக்கு மேடை பயத்தினால் அதிகரிக்கும் இதயத்துடிப்பு, மனஅழுத்தம் போன்ற மனிதர்களுக்கே உரித்தான ‘ஈகோ’ சார்ந்த பல விடயங்கள் மறந்துப் போவதும், குறைந்துப் போவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. சமூக தாக்கங்கள் மனித உடலில் எத்தகைய பாதிப்பை உருவாக்குகின்றன என்பது இதன்மூலம் தெளிவாகியுள்ளது.
இதுசார்ந்த இதர ஆராய்ச்சிகளுக்கு, இந்த ஆய்வின் முடிவு திறவுக்கோலாக அமையும் என இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான அர்விட் குட்டர்ஸ்டாம் தெரிவித்துள்ளார்.