நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாமைக்கு யார் காரணம்?

பாறுக் சிஹான்-
ட்சி மாற்றம் நடந்து, புதிய அரசாங்கம் அறிவித்த, நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை தமிழ் பேசும் மக்கள் உரிய முறையில் அனுபவிக்க முடியாமல் போனமைக்கு பொறுப்பற்ற சில தமிழ் அரசியல் வாதிகளே காரணம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்;

காலம் நம் கைகளில் அரிய பல வாய்ப்புகளைத் தந்துவிட்டு சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போலவே புதிய அரசாங்கம் அறிவித்திருந்த நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் பயன்களைக்கூட எமது மக்கள் உரிய முறையில் அனுபவிக்க முடியாமலேயே போய்விட்டது.

தமிழ்த் தரப்பில் இருந்தும் அரசாங்கத்தின் உயர் பீடமான தேசிய நிறைவேற்றுச் சபையில் பங்கெடுத்து வருகிறார்கள். இதேபோல் அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரங்களிலும் பங்கெடுத்து வருகின்றார்கள்.

ஆனாலும் இவர்கள் அரசாங்கத்துடனான தமது உறவுகளைப் பயன்படுத்தி, நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை தமிழ் மக்களை நோக்கி எடுத்து வரத் தவறி விட்டார்கள். நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை மட்டுமன்றி அதற்கு அப்பாலும் சென்று பெறவேண்டிய அரசியலுரிமைக்கான முயற்சிகளையும் தவறவிட்டு வருகிறார்கள்.

அரசியல் அதிகாரப்பலத்தை தம் வசப்படுத்தி வைத்திருப்பவர்கள் அதை எமது மக்களுக்காக சரிவரப் பயன்படுத்த விரும்பாத வரலாற்றுத் தவறுகளே இன்னமும் நீடித்துச் செல்கிறது. இது போன்ற பொறுப்பற்ற செயல்களினால் எமது மக்களே வரலாற்றில் தொடர்ந்தும் அரிய வாய்ப்புகளை இழந்து, துயரப்பட்டு நிற்கிறார்கள்.

அரசியல் பலத்தை வைத்து எமது மக்களுக்காகப் பேரம் பேசவேண்டியவர்கள், அர்த்தமற்ற வீரம் பேசிகாலம் கழித்து வருகிறார்கள். எமது மக்களின் வாழ்வுரிமைக்காகவும், அதிகாரப்பகிர்விற்காகவும் அரசுடன் பேரம் பேசி பெறவேண்டிய வாய்ப்பை பெற்றிருந்தாலும் இவர்கள், தமது கட்சிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டிகளிலும், சுயலாப அரசியல் செயற்பாடுகளிலும் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள்.

நாம் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்ட காலம் தொட்டு, அரசியல் பலமுள்ளபோது நாம் ஆற்றிய பணிகளை யாரும் மறந்துவிடப்போவதில்லை.

அதேபோல், அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரத்தில் பங்கெடுத்திருந்த காலத்திலும் எமது அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு ஆற்றிய பணிகளையும் யாரும் மறுத்துவிட முடியாது. பொறுப்பற்ற தமிழ் அரசியல்வாதிகளிடம் அரசியல் பலம் இருந்தும் பயனில்லை என்பதற்கு நூறுநாட்கள் வேலைத்திட்டத்தை சரிவரப் பயன்படுத்தாமை இன்னொரு உதாரணமாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -